உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணெழுதி பொட்டும் தொட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணெழுதி பொட்டும் தொட்டு (Kannezhuthi Pottum Thottu, கண்ணுக்கு மையிட்டு, நெற்றியில் பொட்டும் வைத்து ) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள நாடகத் திரைப்படமாகும். இதை டிகே ராஜீவ் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் மஞ்சு வாரியர், திலகன், பிஜு மேனன், அப்பாஸ், கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர் . இப்படத்தின் பாடல்களுக்கு எம். ஜி. இராதாகிருஷ்ணன் இசையமைக்க,, ஷரத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

தன் சிறுவயதில் தன் பெற்றோரை கொன்ற பண்ணையார் நதேசனை பழிவாங்கத் துடிக்கும் பத்ரா என்ற பெண் பண்ணைத் தொழிலாளியின் கதையை இப்படம் சொல்கிறது. வாரியர் தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது - சிறப்புக் குறிப்பைப் பெற்றார்.

கதை

[தொகு]

15 ஆண்டுகளுக்கு முன்பு தன் பெற்றோரைச் படுகொலை செய்த, நடேசன் எனும் நிலச்சுவான்தாரரைப் பழிவாங்க, பத்ரா எனும் இளம் பெண் நேரம் பார்த்து காத்திருக்கிறாள். அவள் நடேசனின் பண்ணையில் வேலைக்குச் சேருகிறாள். அந்த பண்ணையில் பணிபுரியும் மற்ற பெண் தொழிலாளிகள், அந்தப் புதிய வேலைக்கு அவள் பழகிக்கொள்ள உதவுகிறனர். பத்ரா மீது ஒரு கண் வைத்திருந்த நடேசனின் மகன், அவளின் சம்மதமின்றி அவளைப் பலவந்தமாக கட்டிப்பிடிக்கிறான். இதனால் பத்ரா கடும் சீற்றமடைகிறாள்; எனினும், அவளின் சகப் பணியாளர்கள் அவளைச் சமாதானப்படுத்துகிறனர். ஒரு நாள், மனநலம் பாதிக்கப்பட்ட சிந்தன் என்பவர் கொடுமைப்படுத்தப்படுவதை அவள் காண்கிறாள். அவள் அவனுடன் நட்பு கொள்கிறாள்.

அன்று இரவு, அங்கிருந்த ஒரு மூத்த தொழிலாளி ஒருவர், நிலத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த ஒரு மனிதனைப் பற்றிய கதையைக் கூறுகிறார். பத்ராவின் தந்தையைத் தான் கொன்ற உண்மையை மறைப்பதற்காக, நடேசன் புனைந்த ஒரு பொய்க்கதை அதுவாகும். பத்ரா எப்போதும், தன் தந்தை உயிருடன் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று வருகிறாள்.

பின்னர், நடேசனின் மகன் உத்தமனிடம் தற்போது பணிபுரியும் ரோசாகுட்டியைச் சந்திக்கும் பத்ரா, அவளைத் தன் வசப்படுத்துகிறாள். ஒரு கட்டத்தில் அவள் மீது கோபம் கொண்ட பத்ரா, அவளைக் கொல்லவும் முயல்கிறாள்; ஆனால், ரோஸா மீது தனக்கிருந்த பற்று காரணமாக, இறுதியில் அவளை விட்டுவிடுகிறாள்.

பத்ரா, வளையல்காரனும், மீனவனுமான மூசகுட்டியைக் காதலிக்கிறாள். மூசகுட்டியின் தந்தையும் நடேசனால் கொலை செய்யப்பட்டவர். அவள் கடந்த காலத்தை நினைவுகூர்கிறாள். அவளின் தந்தை ஒரு தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அவர் நில உரிமையாளர் நடேசனிடம் கூலி உயர்வுக்காகப் போராடினார். பத்ராவின் தந்தையும் தாயும் அவளிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். நடேசன் பத்ராவின் தாயின் மீது ஒரு கண் வைத்திருந்தான், அவளை அடைவதற்காக, அவன் அவள் கணவனை விவசாய நிலத்தில் உயிருடன் புதைக்கிறான். பின்னர் அவன் ஒரு தியாகக் கதையை உருவாக்குகிறான், அது செவிவழிக் கதை போல பரவுகிறது. இந்தச் செய்தியைக் கேட்டு பத்ராவின் தாய் ஓடி வருகிறாள். நடேசன் அவளைப் பிடிக்க முயன்றபோது, அவள் பத்ராவுடன் சேர்ந்து தப்பி ஓடிவிடுகிறாள். பத்ராவின் தாய் அவளிடம் ஒரு அரிவாளைக் கொடுத்து, ஓடிப்போய் தன் பெற்றோரின் மரணத்திற்குப் பழிவாங்குமாறு கூறுகிறாள். பின்னர் பத்ரா தன் தாய் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிப்பதை தொலைவில் இருந்து பார்க்கிறாள். அதன்பிறகு பத்ரா ஒவ்வொரு இரவும் அந்த இடத்தில் ஒரு விளக்கை ஏற்றுகிறாள்.

ரோசகுட்டியை உத்தமன் கொன்றுவிடுகிறான். இப்போது பத்ரா, நடேசனின் வீட்டில் ஒரு பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்கிறாள். நடேசனைக் கொல்ல ஒரு நல்ல வாழ்ப்பைத் தேடுகிறாள். ஒருமுறை, நடேசனின் மனைவி தன் கணவரின் உடல்நலம் குறித்து ஒரு நம்பூதிரியிடம் விசாரிக்கிறாள்; அதற்கு அவர், நடேசனின் உடல்நலத்தில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாகக் கூறுகிறார். தேவியை அமைதிப்படுத்த, 'தீயாட்டு' எனும் சடங்கை நடத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

தீயாட்டு விழாவின்போது, ​​தேவியை மகிழ்விக்கவும் நல்ல உடல்நலத்துக்காகவும் பல பெண்கள் முடியாட்டம் ஆடுகின்றனர். சிந்தன் ஒரு பெண்ணை பத்ராவுக்குச் சுட்டிக்காட்டி, அவளுக்கு உத்தமனுடன் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறுகிறான். இதனால் கடும் சீற்றமடைந்த பத்ரா, தேவியின் அருளை வேண்டி நிற்கிறாள். பின்னர் தேவியை வணங்கி குங்குமத்தை தன் நெற்றியில் இட்டுக்கொள்கிறாள். பெண்கள் முடியாட்டம் ஆடித் தேவியை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று, அவள் தன் நீண்ட கூந்தலை அவிழ்த்து விடுகிறாள். பின்னர் தேவியை வணங்கி, தாளத்திற்கேற்பத் தன் கூந்தலை ஆட்டி, முடியாட்டம் ஆடி தேவியை மகிழ்விக்கிறாள். மறுநாள் அவள் தன் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குகிறாள்.

பத்ரா, தான் நடேசன் மீது ஈடுபாடு கொண்டிருப்பதைப் போல நடந்துகொள்கிறாள். அவள் நடேசனைத் தன் பால் ஈர்க்க முயல்வதுடன், உத்தமனையும் மயக்குகிறாள். பத்ராவின் பொருட்டு, தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாக மாறுகின்றனர். பத்ரா, அவ்விருவரையும் தன் தந்தை படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குத் தன்னைச் சந்திக்க வருமாறு அழைக்கிறாள். [1]

முதலில் நடேசனும், அவனைத் தொடர்ந்து உத்தமனும் வருகிறனர். இதனால் இருவருக்கும் இடையே ஒரு கைகலப்பு ஏற்படுகிறது. மழை பெய்யத் தொடங்குகிறது. அப்போது இருவரும் வயலுக்குள் வழுக்கி விழுகிறனர். பத்ரா மதகை உடைக்க, வயல் முழுவதும் வெள்ளம் சூழ்கிறது. பலத்த காற்றின் காரணமாக, ஒரு மின் கம்பி அறுந்து நீருக்குள் விழுகிறது. பத்ரா திட்டமிட்டபடியே, உத்தமன் நடேசனைப் படுகொலை செய்கிறான்; அதே சமயம், அறுந்து விழுந்த மின் கம்பியினால் மின்சாரம் தாக்கி உத்தமனும் உயிரிழக்கிறான்.

இறுதியில், பத்ரா மூசகுட்டியை மணக்கிறாள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Kannezhuthi Pottum Thottu (1999)". IMDb (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-12.