கணினியின் தரவு சேமிப்பகம்


கணினியின் தரவு சேமிப்பகம் (Computer data storage) என்பது எண்ணிம முறையில் பதிவு செய்து, தேவைப்படும்போது, மீண்டும் பெறுவதற்கான தொழில்நுட்பமாகும். இன்றைய உலகில் தரவு என்பது, ஒரு சொத்தாகக் கருதப்படுகிறது; அந்தத் தரவுகளைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கையாளுவதற்குச் சேமிப்பகங்கள் மிக அவசியமானவை ஆகும். கணினிச் சேமிப்பகத்தின் அடிப்படைச் செயல்பாடுகள், அதன் படிநிலைகள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலைச் சேமிப்பகங்களின் வேறுபாடுகள், தற்காலத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் சுருக்கமாக காண்போம். தரவுகளை நீண்ட காலத்திற்கு அழியாமல் பாதுகாப்பதிலும், கணினியின் வேகத்தை அதிகரிப்பதிலும், இச்சேமிப்பு முறைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.[1]
இதன் படிநிலை செயல்பாடுகள்
[தொகு]கணினித் தரவுச் சேமிப்பகமானது, வேகத்தையும் கொள்ளளவையும் பொறுத்து பல்வேறு படிநிலைகளாக (Hierarchy) பிரிக்கப்பட்டுள்ளது. நடுவச் செயலகத்திற்கு மிக அருகில் இருக்கும் சேமிப்பகங்கள் அதிவேகமாகவும், குறைந்த கொள்ளளவு கொண்டவையாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, இடைமாற்று நினைவகம் மிக வேகமானதாகத் திகழ்கிறது. இதற்கு மாறாக, அதிக அளவிலான தரவுகளைச் சேமிக்கும் வன்வட்டுகள் வேகம் குறைந்தவையாக உள்ளன, ஆனால் அதிக கொள்ளளவு கொண்டவை. கணினியின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனைத் தீர்மானிப்பதில், இந்த அடுக்குமுறை அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]
முதன்மைச் சேமிப்பகம்
[தொகு]முதன்மைச் சேமிப்பகம் அல்லது முதன்மை நினைவகம் (Primary Storage) என்பது கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, தற்காலிகமாகத் தரவுகளைச் சேமித்து வைக்கும் இடமாகும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, நேரடி அணுகல் நினைவகம் ஆகும். இது ஒரு 'அழியும் நினைவகம்' (Volatile memory) வகையைச் சார்ந்தது, அதாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இதில் உள்ள தரவுகள் அழிந்துவிடும். செயலகம் நேரடியாக அணுகக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், மென்பொருள்கள் தடையின்றி இயங்க இது உறுதுணையாக இருக்கிறது.
இரண்டாம் நிலைச் சேமிப்பகம்
[தொகு]இரண்டாம் நிலைச் சேமிப்பகம் என்பது தரவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படும் கருவிகளைக் குறிக்கும். இவை 'அழியா நினைவகம்' (Non-volatile memory) எனப்படும், ஏனெனில் மின்சாரம் இல்லாவிட்டாலும் இதில் உள்ள தகவல்கள் அழியாது. வன்வட்டு (HDD), திடநிலை வட்டு (SSD), குறுவட்டுகள் (குறுந்தகடு/இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு), யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்கள் ஆகியவை இதில் அடங்கும். தற்காலத்தில் வேகம், நம்பகத்தன்மை காரணமாக வன்வட்டுகளுக்குப் பதிலாக, திடநிலை வட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.[3]
சேமிப்பக ஊடகங்களின் வகைகள்
[தொகு]தரவுகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும், இயற்பியல் ஊடகங்கள் அவற்றின் செயல்பாட்டுத் தன்மையைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றன. இதில் காந்தச் சேமிப்பு (Magnetic Storage), ஒளிச் சேமிப்பு (Optical Storage), குறைக்கடத்திச் சேமிப்பு (Semiconductor/Flash Storage) ஆகியவை மிக முக்கியமானவை. காந்தச் சேமிப்பு முறையில், காந்தப் புலங்களைப் பயன்படுத்தித் தரவுகள் வன்வட்டுகளில் பதியப்படுகின்றன. ஒளிச் சேமிப்பு முறையில் (CD, DVD), லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் 'ஃபிளாஷ்' தொழில்நுட்பம், மின்சுற்றுகளைப் பயன்படுத்தித் தரவுகளைச் சேமிக்கிறது; இதுவே இன்றைய இக்கால கைபேசிகள், மடிக்கணினிகளில் முதன்மையாக உள்ளது.[4]
இந்தொழில்நுட்பத்தின் எதிர்காலம்
[தொகு]தொழில்நுட்ப வளர்ச்சியால், தரவுச் சேமிப்பு முறைகள் வன்பொருள்களைத் தாண்டி மேகக்கணிமை முறைக்கு மாறி வருகின்றன. இதன் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி உலகில் எந்த இடத்திலிருந்தும், ஒருவர் தனது தரவுகளை அணுக முடியும். மேலும், நனோ தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் கணினிகளின் வருகையால், மிகச்சிறிய அளவிலான சாதனங்களில் மலைப்பொதி அளவுள்ள தரவுகளைச் சேமிக்கும் வசதிகள் உருவாகி வருகின்றன. இது தரவு மேலாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patterson, David A.; Hennessy, John L. (2005). Computer Organization and Design: The Hardware/Software Interface. Elsevier. ISBN 978-1-55860-604-3.
- ↑ "Computer storage". Encyclopædia Britannica. Retrieved 2024-04-21.
- ↑ Mittal, Sparsh; Vetter, Jeffrey S. (2015). "A Survey of Software Techniques for Using Non-Volatile Memories in Storage Systems". IEEE Communications Surveys & Tutorials 18 (2): 1371–1398.
- ↑ White, Ron (2007). How Computers Work. Que Publishing. ISBN 978-0-7897-3613-0.
- ↑ Lyman, Peter; Varian, Hal R. (2003). "How Much Information?". UC Berkeley. https://www2.sims.berkeley.edu/research/projects/how-much-info-2003/.