கணிதமும், கட்டிடக்கலையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதமும், கட்டிடக்கலையும் என்னும் இக்கட்டுரை இவ்விரு துறைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளையும், வரலாற்று அடிப்படையில் கட்டிடக்கலையில் கணிதத்தின் பயன்பாடுகளையும் எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாகும். கட்டிடக்கலை நீண்ட காலமாகவே கணிதத்துடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி வந்துள்ளது. கட்டிடக்கலை, கணிதத்தின் வளர்ச்சியில் பெருமளவுக்குத் தங்கியிருந்ததனால் மட்டுமன்றி, ஒழுங்கையும், அழகையும் தேடுவதில் இரண்டு துறைகளுக்கும் பொதுவான நோக்கமும் இதற்கான காரணம் ஆகும். கட்டிட அமைப்புக்களின் கருத்துருக்களை விளங்கிக் கொள்வதற்கும் அவை தொடர்பான கணிப்புக்களை மேற்கொள்வதற்கும் கணிதம் மிகவும் இன்றியமையாதது. கட்டிடக் கூறுகள் தமக்கிடையிலும், பரந்த அண்டத்துடனும் இயைபு நிலையைப் பேணுவதற்கான முயற்சியில் பண்டைக்கால நாகரிகங்கள் பல கணித அறிவைப் பயன்படுத்தியுள்ளன. இதற்கு வடிவவியல் பெரிதும் பயன்பட்டுள்ளது.

பொன் விகித செவ்வகம்

கிரேக்கக் கட்டிடக்கலையில் "பொன் விகிதம்" வடிவமைப்பில் முக்கியமான அடிப்படையாக விளங்கியது. எனினும் இது உள்ளுணர்வால் பெறப்பட்டதே. இதன் கணிதம் சார்ந்த அமைப்பின் அடிப்படை 20 ஆம் நூற்றாண்டிலேயே பெறப்பட்டது. இது 1:1.618 என்னும் விகிதத்துக்குச் சமமானது. இந்த விகிதம் மனத்துக்கு மகிழ்வைக் கொடுக்கக் கூடியது என மேல் நாட்டுக் கட்டிடக்கலைக் கோட்பாடுகள் கருதின. இஸ்லாமியக் கட்டிடக்கலையில் 1: √2 என்னும் விகிதம் பயன்பட்டது. இதன்படி தளவடிவம் ஒரு ஒழுங்கான நாற்கோணம் ஆகவும், உயரம், அந் நாற்கோணத்தின் மூலை விட்டத்தின் அளவுக்குச் சமமாகவும் கொள்ளப்பட்டன.