உள்ளடக்கத்துக்குச் செல்

கணக்குவேலம்பட்டி சமண தீர்த்தங்கரர் சிற்பத்தை, மொட்டையாண்டவராகக் கருதி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்குவேலம்பட்டி சமண தீர்த்தங்கரர் சிற்பத்தை மொட்டையாண்டவராக கருதி வழிபாடு நடக்கும் தலம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கணக்குவேலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. [1] இது குறித்த செய்திகள் மார்ச் 25, 2018-ஆம் தேதி ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்தன. இது குறித்து மேலும் ஆய்வு செய்வதற்காக, சமண அறிஞர்கள் மற்றும் மரபுசார் தன்னார்வலர்கள் இடம்பெற்ற குழுவினர் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த கிராமத்திற்கு வந்தனர். இங்குள்ள குன்றின் பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத்தைப் பார்வையிட்ட பின்னர், இச்சிற்பம் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் (விசுபநாதர் / ரிஷபநாதர்) மகன் பாகுபலி என்று அடையாளம் கண்டனர். ஆனால் உள்ளூர் மக்களோ இச்சிற்பத்தை முருகனாகக் கருதி, மொட்டையாண்டவர் என்று பெயரிட்டு வணங்கி வருவதை பார்த்து வியந்தனர்.[2][3]

அமைவிடம்

[தொகு]

மொட்டையாண்டவர் கோவில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கணக்குவேலம்பட்டி குக்கிராமத்தில் அமைந்துள்ளது. புங்கம்பாடி (கிழக்கு) பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ள இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 639201 ஆகும். இவ்வூர் அரவக்குறிச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கரூரிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 56 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் புவியமைவிடம் 10° 46′ 31.3032” N அட்சரேகை 77° 54′ 32.0116” E தீர்க்க ரேகை ஆகும்.[1]

புடைப்புச் சிற்பத் தொகுதி

[தொகு]

இந்த கிராமத்திற்கு நாங்கள் சமீபத்தில் சென்றபோது, சுமார் 25-30 அடி உயரத்தில் அமைந்திருக்கும் புடைப்புச் சிற்பம் , சமண தீர்த்தங்கரருடையது என்றும் இது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்ததாக ஆய்வாளர் எஸ் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.[2][3] இந்தப் புடைப்புச் சிற்பத் தொகுதி (Bas Relief Panel) கணக்குவேலம்பட்டி கிராமத்தில் உள்ள சிறு குன்றில், இடம்பெற்றுள்ள ஒரு பாறையின் மீது, சுமார் 25-30 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. தரையை ஒட்டி அமைந்துள்ள இப்பாறையின் முகப்பில், மூன்று புடைப்புச் சிற்பங்கள் கொண்ட தொகுதி அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் எட்டு அடி உயரமுடைய புடைப்புச் சிற்பமாக, காயோத் சர்கா (kayotsarga) என்னும் நின்ற கோலத்தில் கைகளைத் தொங்கவிட்டபடி, தியான நிலையில் பாகுபலி காட்சிதருகிறார். இவரின் இருபுறமும் காணப்படுவது, அவருக்குப் பணிவிடை செய்யும் சாசன தேவதைகள் ஆவர்.[2][3] இந்த சிற்பத் தொகுதியின் அருகே செல்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட கருங்கற்படிகளை அமைத்துள்ளார்கள். இந்து கோவில்களில் காண்பது போல சுண்ணாம்பு மற்றும் செங்காவி பூசியுள்ளனர்.[4][2]

மொட்டையாண்டவர் வழிபாடு

[தொகு]

இந்தப் புடைப்புச் சிற்பத் தொகுதியினை உள்ளூர் மக்கள் தெய்வானை, வள்ளி உடனான முருகன் அல்லது தண்டபாணி என்று தவறாகக் கருதியதால், மொட்டையாண்டவர் என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்பாறையின் முன் அமைந்துள்ள திடலில் மக்கள் கூடி வழிபாட்டு வருகிறார்கள். பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரத் திருவிழா போலவே, இங்கும் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மொட்டையாண்டவருக்கு மக்கள் தீர்த்தக்காவடி எடுப்பது இவ்விழாவின் சிறப்பு.[2][3]

சமண அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வு

[தொகு]

இக்கோவில் குறித்தும், வழிபாடுகள் குறித்தும் கடந்த மார்ச் 25, 2018 ஆம் தேதியன்று ஆங்கில செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டது.<ref name="Hindu1"> கடந்த நவம்பர் 2018 இல் சமண அறிஞர்களும் தொல்லியல் ஆர்வலர்களும் அகிம்சை நடைப்பயணமாக இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது இவர்களது 56 ஆம் அகிம்சை நடைப்பயணமாகும். இந்த நடைப்பயணம் மாதந்தோறும், தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் புறக்கணிக்கப்பட்ட சமணச் சிற்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதற்கான மாதாந்திர நடைபயண நிகழ்வாகும்.[2]

சிற்பத் தொகுதி: பாகுபலி, சாசன தேவதைகள்

[தொகு]

சிற்பத்தின் உயரம், தலை, முகம், கண்கள், நீண்ட முடி, ஆகியவற்றின் அடிப்படையில் இது பாகுபலியின் சிற்பம் என்று உறுதிப்படுத்தியதாக சென்னையைச் சேர்ந்த சமண அறிஞர் அஜித்தாசு குறிப்பிட்டுள்ளார். ஆதிநாதரின் இருபுறமும் காணப்படுவது, அவருக்குப் பணிவிடை செய்யும் சாசன தேவதைகள் ஆவர்.[2] பாகுபலியின் தலைக்குமேல் காணப்படும் முக்குடையை சமணர்களின் புனிதத்தின் அடையாளமாக எஸ்.இராமச்சந்திரன் கருதுகிறார். [2]

சமண அறிஞர்கள் கருத்து

[தொகு]

தமிழ்நாட்டின் பல தொலைதூர கிராமங்களில் சமண சிற்பங்களை இந்து கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். அது போலவே இங்கும் நடந்து வருகிறது என்று இராஜேந்திர பிரசாத் கருதுகிறார். மொட்டையாண்டவர் என்ற பெயரில் பூசைகள் நடந்தாலும், சிற்பங்கள் சிதைந்துள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தச் சிற்பங்களுக்கான, இந்து சமய சடங்குகள் மற்றும் வழிபாடு எப்போது தொடங்கியது என்பதற்கான உறுதியான சான்று கிடைக்கவில்லை. இது போல வேறு சில நினைவுச் சின்னங்கள் இப்பகுதியில் இருந்திருக்கலாம். இவை இயற்கை சீற்றங்களால் அழிவுற்றிருக்கலாம் என்றும் இக்குழுவினர் கருந்துகின்றனர். முறையான ஆய்வு மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.[2]

உள்ளூர் மக்கள் கருத்து

[தொகு]

அவர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், எங்களுக்குத் தெய்வம் எங்கள் மொட்டை ஆண்டவர், அவரை நாங்கள் பயபக்தியுடன் வணங்குகிறோம் என்று கிராமத் தலைவர் முத்துராமையா வள்ளல் மற்றும் தன்னார்வலர் சுகுமார்பூமாலை ஆகியோர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக தினசரி பூசைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோவில் விழாக்களுக்கு அண்டை கிராமங்களிலிருந்து மக்கள் திரளாகக் கலந்துகொள்கின்றனர் என்று சுகுமார் பூமாலை கூறியுள்ளார்.[2][2]

மேற்கோள்கள்

[தொகு]