கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றிய செய்திகளைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் இவனைத் தன் பதிகத்தில் கண்ணகிக்குச் சிலையெடுத்து வழிபட்ட சேரன் செங்குட்டுவன் எனக் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் இந்தச் சிலை வரலாற்றைக் குறிப்பால் கூடக் காட்டவில்லை. பாடலில் இவன் இமயம் முதல் குமரி வரை ஆண்டான் என்னும் குறிப்பு உள்ளது. இந்தக் குறிப்பைக் கொண்டு இவனைக் கண்ணகிக்குக் கல் கொணர்ந்தவன் என்று பதிகம் குறிப்பிடுகிறது.

பரணர் பாடிய புறநானூற்றுப் பாடல்[தொகு]

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் புலவர் பரணர் இவனிடம் களிறுகளைப் பரிசாக வழங்கும்படி வேண்டுகிறார். [1]

'கடலோட்டிய வேல்' என்பதற்குக், கடல் அரிப்பைத் தடுக்க தன் தலைநகர் வஞ்சியின் கடற்கரையில் வேல்களை நட்டுக் கடற்கரையைப் பாதுகாத்த்தான் என்றும், கடற்போரில் வெற்றி கண்டான் என்றும் அறிஞர்கள் விளக்கம் காண்கின்றனர். கடல் பிறக்கு ஓட்டிய என்னும் அடைமொழிக்கும் இது பொருந்தும்.

பரணர் பாடிய பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து தரும் செய்திகள்[தொகு]

வெற்றிகள்
 • தன்னை எதிர்த்த குட்டுவர்களை வென்றான். [2]
 • இமயம் குமரி எல்லைக்குட்பட்ட அரசர் பலரை வென்றான். [3]
 • அறுகை என்னும் தனட் நண்பனுக்காக மோகூர் மன்னன் காவல்மரம் வேம்பை வெட்டி, தோற்றவரின் மகளிர் களைந்த கூந்தலால் கயிறு திரித்து வெட்டிய வேப்பந்துண்டத்தை கட்டி யானை வரிசை கொண்டு தன் நாட்டுக்கு இழுத்துவந்து தனக்கு முரசு செய்துகொண்டான். [4] இந்தப் போரில் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து இவனைத் தாக்கியிருக்கிறார்கள். [5]
வேனில் விழா
தோற்றப்பொலிவு
 • எழுமுடி மார்பின் எய்திய சேரல் [6]
 • திண்தேர் ... நெடுந்தகை [7] என்பன இவனது தோற்றத்தைக் காட்டும் தொடர்கள்.
பண்புகள்
 • இவன் வணங்கிய தோற்றத்தோடு காணப்படுவான். வல்லமையிலோ யாருக்கும் தலைவணங்கமாட்டான். [8]
கொடை
 • ஒவ்வொரு போரின் முடிவிலும் களிறுகளைப் பரிசாக நல்குவது இவன் வழக்கம். [9]
 • விறலியர்க்குப் பிடியும், போர் வீரர்களுக்குக் களிறும், களம் வாழ்த்தும் அகவலர்களுக்குக் குதிரைகளும், துன்புறும் உருவர்க்கு உடனிருந்து உண்ணும் விருந்தும், சிரிப்பூட்டி மகிழச் செய்யும் ‘நகைவர்க்கு’ அணிகலன்களும் இவன் வழங்குவான். [10]

பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகத்தில் தொகுப்பாசிரியர் தரும் செய்திகள்[தொகு]

 1. பாடலுக்குப் பரிசாக உம்பற்காட்டு வருவாயையும், புலவர்க்குத் தொண்டு செய்வதற்காகத் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனையும் செங்குட்டுவன் வழங்கினான்.
 2. 55 ஆண்டு நாடாண்டான்
 3. தந்தை பெயர் ‘குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்’. வடநாட்டவரை அஞ்சும்படி செய்தவன்.
 4. தாய் பெயர் ‘சோழன் மணக்கிள்ளி’
 5. ஆரிய அண்ணலை வென்று கண்ணகி கோட்டம் கட்டினான்.
 6. இடும்பில்புறம் என்னுமிடத்திலிருந்து ஆனிரைகளைக் கவர்ந்து சென்றான்.
 7. பகைவரின் வியலூரைச் சூறையாடினான்.
 8. வியலூர் ஆற்றின் எதிர் கரையிலிருந்த கொடுகூரையும் அழித்தான்.
 9. பாண்டியன் படைத்தலைவன் பழையனின் காவல்மரம் வேம்பை வெட்டி, தோற்றோரின் மகளிர் கொய்த கூந்தலால் கயிறு திரிந்து, வேம்பைக் கட்டி, தன் களிறுகளைக் கொண்டு தன் நாட்டுக்கு இழுத்துச் சென்று, அதன் கட்டையால் தனக்கு முரசு செய்துகொண்டான்.
 10. சோழர் குடிக்குறியோர் ஒன்பதின்மரை வென்றான்.
 11. தன் படையைக் கொண்டு ‘கடல் பிறக்கு ஓட்டினான்’.

கடல் பிறக்கு ஓட்டியது[தொகு]

இதனை இவனது கடற்போர் எனலாம்.

 • கடல் கலங்கக் கடற்கரையில் குதிரைப்படை நடத்தினான். [11]
 • கடலில் வேலிட்டபோது எதிர்ப்போர் யாரும் இல்லை. [12]
 • கடலில் வேலிட்டபோது கடலே கலங்கியது. [13]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வேழ முகவை நல்குமதி - புறம் 369
 2. அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவர் மைந்துடை நல்லமர் கடந்து வலம் தரீஇ – பதிற்றுப்பத்து 42
 3. வடதிசை எல்லை இமயம் ஆக, தென்னங்குமரி ஆயிடை அரசர்முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பு எழ சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ – பதிற்றுப்பத்து 43
 4. பதிற்றுப்பத்து 44
 5. பதிற்றுப்பத்து 49
 6. பதிற்றுப்பத்து 45
 7. பதிற்றுப்பத்து 41
 8. வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை பதிற்றுப்பத்து 48
 9. அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே - பதிற்றுப்பது 47
 10. பதிற்றுப்பத்து 43
 11. கால் உளைக் கடும்பிசிர் உடைய, வால் உளைக் கடும்பரிப் புரவி ஊர்ந்தான் – பதிற்றுப்பத்து 41
 12. இனி யார் உளர் ... வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோரே – பதிற்றுப்பத்து 45
 13. பௌவம் கலங்க வேலிட்டு, உரைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன். – பதிற்றுப்பத்து 46