கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கருங்கால் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது. இது "'காலாமசி"' எனவும் அழைக்கப்படுகிறது (கருஞ்சதைக் கோழி).[1] இந்த கோழி இனம் கருப்புநிற இறைச்சிக்கும், நல்ல சுவைக்கும் புகழ்பெற்றது.[2] இதன் இறைச்சி உண்பதால் நல்ல வீரியம் உண்டாவதாக நம்பப்படுகிறது.[3] இதன் உடலில் மெலனின் நிறமி மிகுந்து காணப்படுவதால் இவ்வாறு காணப்படுகிறது.[1] இப்பறவை முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு தோகையில் பச்சை நிறம் கலந்து வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் கொண்டதாகவும், இதன் இறைச்சி, எலும்புகள் போன்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4]
இதன் இறைச்சியில் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவ குணங்களால் இதன் இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. இதனால் இந்தக் கோழிகளை அழிவில் இருந்து காக்க, மாநில அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு இந்த கோழியை வளர்க்க நிதி ஆதரவு மற்றும் உதவி பெறும் திட்டத்தை துவங்கியுள்ளது. [3] இக்கோழி இனம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும் மேச்சல் முறையிலும் வளர்க்கப்படுகிறது.
குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.[5]
கருங்கோழி மற்ற நாட்டுக் கோழிகளைப் போல அடைக்காப்பதில்லை என்று அவற்றை நாட்டுக் கோழி வகைகளில் சில கோழி வளர்ப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
சந்தையில் கருங்கோழியின் தேவை அதிகமிருப்பதால் சில கருங்கோழி பண்ணையாளர்கள் அதிக விலைக்கு விற்பதாக ஓர் விமர்சனம் உள்ளது.
கருங்கோழியின் மருத்துவ குணம் குறித்தான முறையான ஆய்வு முடிவுகள் இந்திய அரசாலும், மருத்துவ துறையாலும் வெளியிடப்படவில்லை. இதனால் மக்கள் கருங்கோழியை எந்த நோயின் மருந்தாகவும் உட்கொள்வதை மருத்துவதுறை அங்கிகரிக்கவில்லை.
கடக்நாத் சேவல் முக அமைப்பு. இதில் கடக்நாத் சேவலின் கண்கள் கருமையாகவும், கொண்டை கத்திக் கொண்டை வகையைச் சேர்ந்துள்ளதையும், தாடை, முகம் என அனைத்துமே கருமை நிறம் கொண்டுள்ளதை காணலாம்.
கடக்நாத் சேவல் (ஆண் கோழி).
கடக்நாத் பெட்டைக் (பெண்) கோழி. இக்கோழி சேவலின் உயரம், எடையை விட குறைவாக இருக்கும். கத்திக் கொண்டை சிறியதாக இருக்கும்.