கடகம் (ஓலைப்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலங்காரம் இல்லாத யாழ்ப்பாணத்துக் கடகம்
அலங்காரத்துடன் கூடிய யாழ்ப்பாணத்துக் கடகம்

கடகம் (About this soundஒலிப்பு ), கடாப்பெட்டி அல்லது கடகப்பெட்டி என்பது, பனையோலையால் செய்யப்படும் அளவில் பெரிய ஒரு வகைப் பெட்டி. இது தானியங்கள், காய்கறி வகைகள் போன்ற பொருட்களை இட்டு வைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகிறது.[1]

அமைப்பு[தொகு]

கூடிய அளவு பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும், காவிச் செல்வதற்கும் வசதியாக இது பொதுவான ஓலைப் பெட்டிகளைவிட அளவில் பெரிதாகச் செய்யப்படுகிறது. இதனால், கடகங்களை இழைப்பதற்கு அகலம் கூடிய பனையோலைகளைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், இது கூடிய விறைப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் வகையில் ஒருமுறை இழைத்த பின்னர் அப்பின்னலுக்குள் இன்னொரு படை ஓலையை நுழைத்துப் பின்னுவர். இதை யாழ்ப்பாணத்தில் "பொத்துதல்" என்பர். விளிம்பு உறுதியாக இருக்கும் வகையில், பனம் மட்டையில் இருந்து, ஏறத்தாழ ஒன்றரை அங்குல அகலம் கொண்டதாக உரித்து எடுக்கப்படும் உறுதியான பட்டையை விளிம்பின் உட்பகுதியிலும், வெளியிலும் வைத்துப் பனம் ஈர்க்கினால் குறித்த இடைவெளிகளில் கட்டிவிடுவர்.

கடகத்தின் அடிப்பகுதி சதுர வடிவானது. ஆனால், விளிம்புப் பகுதி வட்ட வடிவம் கொண்டதாக இருக்கும். தேவையைப் பொறுத்து, கடகங்களை நிறமூட்டப்பட்ட பனையோலைகளைப் பின்னல்களுக்குள் செலுத்தி அழகூட்டுவது உண்டு. சிவப்பு, பச்சை, நீலம், ஊதா ஆகிய நிறங்களே பெரும்பாலும் நிறமூட்டுவதற்குப் பயன்படுகின்றன.

வகைகள்[தொகு]

பொதுவான கடகங்களின் உடற்பகுதி பனை ஓலையினால் மட்டுமே இழைக்கப்படுகின்றது. ஆனால், கட்டுமானம் முதலிய கடினமான வேலைகளுக்குப் பயன்படும் கடகங்களின் வெளிப்புறப் பின்னல் படை பனம் மட்டையில் இருந்து உரிக்கப்படும் நாரினால் ஆனது. கடகத்தைப் பனம் நாரினால் பொத்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது "நார்க்கடகம்" எனப் பெயர் பெறும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. காட்சன் சாமுவேல் (2018 சூன்). "‘பாஸ்கெட்’ பிரியாணி சாப்பிடலாமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடகம்_(ஓலைப்பொருள்)&oldid=2745130" இருந்து மீள்விக்கப்பட்டது