உள்ளடக்கத்துக்குச் செல்

கசிவு (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Equisetum இல் கசிவு
செம்புற்றுப்பழச் செடியின் இலையில் கசிவு
மராந்தாசியே தாவரத்தில் கசிவு
தாவரத்தில் கசிவு செயல்முறை
வாழை இலை நுனியில் கசிவு செயல்முறையினால் தோன்றியிருக்கும் நீர்த்துளி

தாவரவியலில் கசிவு (ஒலிப்பு) எனப்படுவது, புற்கள் போன்ற சில கலன்றாவரங்களில், அவற்றின் இலைகளின் நுனியிலோ அல்லது ஓரங்களிலோ காழ்ச் சாறானது கசிந்து சிறுதுளிகளாக வெளியேறும் செயல்முறையைக் குறிக்கும். இந்த செயல்முறையினால் வெளியேறும் சிறுதுளிகள் தோற்றத்தில் பனித்துளியை ஒத்திருப்பினும், பனித்துளியானது தாவர மேற்பரப்பில் வளிமண்டலத்தில் உள்ள நீராவி ஒடுங்குவதனால் உருவாகும் நீர்த் துளியாக இருப்பதனால் இந்த கசிவு என்னும் செயல்முறையில் இருந்து வேறுபடும்.

செயல்முறை

[தொகு]

இரவு நேரங்களில் தாவர இலைகளில் உள்ள இலைவாய்கள் மூடியிருப்பதனால் ஆவியுயிர்ப்பு நிகழ்வதில்லை. மண்ணில் ஈரலிப்பு அதிகமாக இருக்கும்போது, வேர்களில் இருக்கும் நீர் அழுத்தம், மண் கரைசலில் இருக்கும் நீர் அழுத்தத்தைவிடக் குறைவாக இருப்பதனால், மண்ணிலிருந்து நீரானது வேரினுள் செல்லும். இதனால் வேரினுள் வேரமுக்கம் ஒன்று உருவாகும். இந்த வேரமுக்கமானது கீழிருந்து மேல்நோக்கி நீரைக் கடத்தும்போது, இலைகளிலுள்ள நீர்ச் சுரப்பிகள் மூலமாக நீரானது கசிந்து துளிகளாக வெளியேறும். ஆவியுயிர்ப்பினால் ஏற்படும் இழுவிசையை விட, வேரமுக்கமே இத்தகைய கசிவுக்குக் காரணமாகும்.

இந்தக் கசிவு செயல்முறையானது ஆவியுயிர்ப்பிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றது. ஆவியுயிர்ப்பானது முக்கியமாக இலையிலுள்ள இலைவாய், மற்றும் புறத்தோல், பட்டைவாய்களினூடாக நீராவி (சுத்தமான நீர்) வடிவில் வெளியேறுவதாகவும், கசிவானது இலையிலுள்ள நீர்ச்சுரப்பிகளினூடாக சேதன, அசேதனப் பொருட்களைக் (உப்புக்கள், சர்க்கரை, அமினோ அமிலம் போன்ற) கொண்ட திரவ வடிவில் வெளியேறுவதாகவும் இருக்கின்றது. ஆவியுயிர்ப்பு பகலில் ஒளி உள்ளபோது நிகழ்வதாகவும், கசிவானது பொதுவாக இரவு அல்லது விடிகாலை நேரங்களில் நிகழ்வதாகவும் இருக்கின்றது. கசிவானது முக்கியமாக வேரமுக்கம் காரணமாக நிகழ்வதாக இருக்கின்றது. ஆவியுயிர்ப்பு எல்லாவகைத் தாவரங்களிலும் நிகழும் அதேவேளை, கசிவானது குறிப்பிட்ட சில தாவரங்களில், குறிப்பாக பூண்டுவகைத் தாவரங்களில் (en:Herbaceous plant) நிகழ்வதாகவும் இருக்கின்றது. நீர் குறைவான நேரத்தில், ஆவியுயிர்ப்பினால் தாவரங்கள் வாட (en:Wilting) நேரிடும். ஆனால் நீர் குறைவான நேரத்தில் கசிவு நிகழ்வதில்லையாதலினால், கசிவினால் தாவரங்கள் வாடுவதில்லை.[1][2][3]

வேதிப்பொருட்கள்

[தொகு]

கசிவினால் வெளியேறும் திரவத்தில் பல சேதன, அசேதன வேதிப்பொருட்கள் காணப்படும். அவற்றில் முக்கியமானவை சீனி, கனிம ஊட்டப்பொருட்கள் (Mineral nutrient), பொட்டாசியம் போன்றனவாகும்[4]. இந்தக் கசிவினால் தோன்றும் நீர்த்துளியானது உலர்ந்தால், வெள்ளை நிற படிவுபோல் இலையின் மேற்பரப்பில் தோன்றும்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is the difference between Transpiration and Guttation?". Preserve articles. Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014.
  2. "What is the difference between transpiration and guttation? - See more at: http://www.biology.lifeeasy.org/430/what-is-the-difference-between-transpiration-and-guttation#sthash.YLHEDtUS.dpuf". Lifeeasy Biology. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014. {{cite web}}: External link in |title= (help)
  3. "Difference between Transpiration and Guttation". Major Differences. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014.
  4. Goatley, James L.; Lewis, Ralph W. (March 1966). "Composition of Guttation Fluid from Rye, Wheat, and Barley Seedlings". Plant Physiology 41 (3): 373–375. doi:10.1104/pp.41.3.373. பப்மெட்:16656266. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசிவு_(தாவரவியல்)&oldid=3724987" இலிருந்து மீள்விக்கப்பட்டது