கங்கை செயல் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கை செயல்திட்டம் (Ganga Action Plan GAP) என்பது கங்கை ஆற்றினைத் சுத்தப்படுத்துவதற்காக 1986 இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின்கீழ் 9017 மில்லியன் ரூபாய் செலவு செய்த பின்னரும்கூட கங்கையை மாசற்றதாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்கள் வெற்றியடையவில்லை.[1][2] அதனால் மார்ச் 31, 2000 இல் இத்திட்டம் கைவிடப்பட்டது.

கங்கை நதி நீரினைத் தூய்மைப்படுத்தும் திட்டமாகப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐநாவின் யு.என்.இ.பி துணையுடன் உருவானதாகும்[சான்று தேவை].

மாசுச் சுமையைக் குறைத்து, சுயபராமரிப்பின் கீழ் சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தோற்றுவித்துக் கங்கை நீரின் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

செயற்திட்டம்[தொகு]

கங்கை செயல்திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.

முதல் கட்டம்[தொகு]

முதற்கட்டமாக கீழுள்ள எண்வகைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன:

  1. ஏற்கனவே உள்ள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பித்தல்
  2. சாக்கடை நீரைக் குறுக்கிட்டுத் தடுக்கும் சாதனங்கள் மற்றும் சாக்கடைக் குழாய்களை அமைத்தல்
  3. ஏற்கனவே உள்ள முக்கிய சாக்கடை நீர்க் குழாய்களைப் புதுப்பித்தல்
  4. கங்கை நதிக்குள் விடப்பட்ட எடுக்கப்படாத மனிதச் சடலங்கள் மற்றும் கால்நடைச் சடலங்களை நீர் வாழ் முதலைகளும் ஆமைகளும், உணவாக்கி கொள்ளும் விதத்தில் உயிரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  5. குறைந்த செலவில் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல்
  6. குறுமணல் குவிப்பு, மணல் அரிப்பைத் தடுக்கும் விதமாக நதியோரங்களில் கட்டடங்கள் கட்டுதல், காடுகள் வளர்த்தல்
  7. முறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பு நல்கி தொழிலக மாசினை கட்டுப்படுத்துதல்
  8. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நதிநீரின் தரத்தினை மதிப்பீடு செய்தல்

இரண்டாவது கட்டம்[தொகு]

இரண்டாவது கட்டம் நால்வகை செயல்பாடுகள் கொண்டது.

  1. UASB ( Upflow Anacrobic Sludge Blanket) தொழில்நுட்ப உதவியுடன் சாக்கடை நீரைச் சுத்திகரித்தல்.
  2. யமுனை, கோமதி, தாமோதர் போன்ற கங்கை நதியின் மூன்று துணை நதிகளைத் தூய்மைப்படுத்துதல்
  3. முதல் கட்டத்தில் நிறைவுபெறாத திட்டங்களைப் பூர்த்தி செய்தல்.
  4. நதி நீர்த் தரச் சோதனை நிலையங்களை ஏற்படுத்துதல்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை[தொகு]

முதல் கட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு ரூ 342.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட 261 திட்டங்களில் 237 மட்டுமே முழுமை செய்யப்பட்டன. எனினும் இத்திட்டம் தோல்வி தழுவியது.

இத்திட்டத்தினால் கங்கை நதித் தூய்மையோ சாக்கடைக் கலப்புக் குறைப்போ நிகழவில்லை. செலவழித்ததும் பலன் இல்லை என்பதால் இரண்டாம் கட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 421 கோடியை வழங்க உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

தோல்விக்கு காரணம்: நேர்மையற்ற அதிகாரிகள், மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மை, மின் சக்தி விநியோகத்தில் ஒழுங்கற்ற தன்மை, நாளும் பெருகும் சாக்கடை நீர் வரத்து முதலிய காரணங்களால் இத்திட்டம் தோல்வியடைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ganga Action Plan
  2. "Ganga Action Plan bears no fruit". The Hindu (Chennai, India). 28 August 2004 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040928003256/http://www.hindu.com/2004/08/28/stories/2004082807430400.htm. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_செயல்_திட்டம்&oldid=3889718" இலிருந்து மீள்விக்கப்பட்டது