கங்கராம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கராம்பூர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கங்கராம்பூர் துணைப்பிரிவின் தலைமையகம் ஆகும். இந்த நகரம் புனர்பாபா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் பசிம் தினஜ்பூரின் பகுதியான்து உத்தர தினாஜ்பூர் மற்றும் தெற்கு தினஜ்பூருக்குப் பிரிக்கப்பட்டபோது இது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமான தெற்கு தினாஜ்பூரின் துணைப்பிரிவாக மாறியது. பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இந்த நகரத்தை டம்டாமா அல்லது தேவ்கோட் என்று அழைத்தனர்.

புவியியல்[தொகு]

கங்கரம்பூர் கிட்டத்தட்ட தட்சின் தினாஜ்பூர் மாவட்டத்தின் மத்தியில் 25.4° வடக்கு 88.52° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது புனர்பாபா ஆற்றின் கரையில் பரவியுள்ளது.[2] இது சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. நகரின் பரப்பளவு 10.29 சதுர கிலோ மீற்றர் ஆகும்.

காலநிலை[தொகு]

கங்கராம்பூரில் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையைக் கொண்டது. கோடைக் காலமான மே தொடக்கம் சூன் வரையிலான மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 38 °C (100 °F) ஐ விட அதிகமாக இருக்கும். குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி ஆரம்பம் வரை நீடிக்கும். மிகக் குறைந்த வெப்பநிலை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 4 °C (40 °F) முதல் 8 °C (47 °F) என்ற வரம்பில் இருக்கும். நகரின் காலநிலையில் பருவமழை மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். மழைக் காலமான சூலை- ஆகத்து மாதங்களில் அதிகபட்ச மழை பெய்யும்.[3]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி கங்கராம்பூரில் 56,175 மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 52% வீதமாகவும், பெண்கள் 48% வீதமாகவும் காணப்படுகின்றனர். கங்கராம்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 77% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70% ஆகவும் உள்ளது. கங்கராம்பூரின் மக்கட் தொகையில் 13% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[4]

பொருளாதாரம்[தொகு]

கங்காரம்பூரின் பொருளாதாரம் விவசாய வேளாண்மை, சிறு வணிகம், கைத்தறி மற்றும் கைத்தறி சார்ந்த கைவினைப்பொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. முக்கியமான கைத்தறி பணிகள் நடைப்பெறும் பகுதிகள் போல்டாஹா, கோரியல், பெல்பெரி -1, பெல்பெரி- II மற்றும் கங்கராம்பூர் நகராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. முக்கியமான கைத்தறி தயாரிப்புகளில் பருத்தி சாதாரண சேலை, காட்டன் மாலா சேலை, பெண்கள் சுரிதார்கள், குர்தா என்பன அடங்கும். மேற்கு வங்க அரசின் நெசவு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கங்கராம்பூர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள போர்டங்கி பகுதியில் 588 தறிகளும், எஞ்சிய கங்காம்பூர் பகுதியில் 252 தறிகள் செயற்படுகின்றன.[5]

போக்குவரத்து[தொகு]

கங்கராம்பூர் நகரானது கொல்கத்தா , சிலிகுரி , ஜல்பைகுரி , மால்டா , பலுர்காட் மற்றும் வட வங்காளத்தின் பிற முக்கிய இடங்களுடன் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

கங்கராம்பூர் ரயில் நிலையம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. முதல் தொடருந்து 2004 ஆம் ஆண்டு 30 அன்று இயங்கியது. இந்த தொடருந்து நிலையம் நகரின் தெற்கே கங்கராம்பூர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Gangarampur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  2. "Gangarampur". www.ddinajpur.nic.in. Archived from the original on 2019-09-07. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  3. "Climate". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. ""Official Web Site of Department of Municipal Affairs, Govt. of West Bengal"". Archived from the original on 2018-07-25.
  5. "Directorate of Textiles, Handlooms, Spinning Mills, Silk Weaving & Handloom Based Handicrafts Division". www.westbengalhandloom.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கராம்பூர்&oldid=3547295" இலிருந்து மீள்விக்கப்பட்டது