கங்கன் பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கன் பட்டாச்சார்யா (Kankan Bhattacharyya) ஒரு நவீன நேரியல் சாரா லேசர் நிறமாலையியல் விஞ்ஞானியாவார். இவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். நேரத்தின் அலகான பெம்டோநொடி லேசர் நிறமாலையியல் மற்றும் ஒற்றை மூலக்கூற்று நிறமாலையியல் உள்ளிட்ட பிரிவுகளில் கங்கன் பட்டாச்சார்யா நிபுணத்துவம் பெற்றிருந்தார். கொல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

கல்வி[தொகு]

கங்கன் பட்டாச்சார்யா கொல்கத்தா மாநிலக்கல்லூரியிலும் தொடர்ந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1978 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் அமைந்துள்ள மிகிர் சவுத்ரியின் ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு மீநுண்நொடி லேசர் நிறமாலையியல் பிரிவில் இவர் பணியாற்றினார். மீநுண்நொடி இயக்கவியல், இரண்டு போட்டான் உறிஞ்சுதல் மற்றும் குறைந்த வெப்பநிலை சுபோல்சுகி பிணை வினைபொருளில் உயர்-தெளிவுத்திறன் கொண்ட நிறமாலையியல் ஆகியவற்றைப் பயின்று 1984 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் நோட்ரே டேம் கதிர்வீச்சு ஆய்வகத்தில் கங்கன் சேர்ந்தார். மீநுண்நொடி லேசர் மின்வெட்டொளி ஒளிச்சேர்க்கை மற்றும் ஒளி வேதியியல் துறைகளில் பி.கே.தாசுடன் சேர்ந்து பணியாற்றினார். 1986 ஆம் ஆண்டில் தனது மேற்படிப்பிற்காக , கொலம்பியா பல்கலைக் கழகத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து 1987 ஆம் ஆண்டு பட்டாச்சார்யா இந்தியாவுக்குத் திரும்பினார். மீண்டும் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இணைந்தார்.

தொழில்[தொகு]

குறைக்கடத்திகள் தயாரிப்பின் போது தரக்கட்டுபாட்டு அளவீடுகளில் ஒளியின் நிலையை அளவிடுதல், நீர் மேற்பரப்பில் கரிம மூலக்கூறுகளின் முழுமையான நோக்குநிலை ஆகியவற்றை பட்டாச்சார்யா ஆய்வு செய்தார். மேலும் நீர் மேற்பரப்பில் உள்ள அமில-காரப் பண்புகள் மொத்தமாக வேறுபடுகின்றன என்பதையும் கொலம்பியாவில் பட்டாச்சார்யா செய்து காட்டினார்.

பட்டாச்சார்யாவின் முதன்மை ஆராய்ச்சி ஆர்வம் பெம்டோநொடி லேசர் நிறமாலையியலில் இருந்தது. அதிலும் குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் உயிரியல் அமைப்புகளில் இயக்கவியலின் தொடர்பு குறித்த ஆய்வுகளை நோக்கி இவர் இயங்கினார். கரைப்பானாக்க இயக்கவியல், புரோட்டான் / எலக்ட்ரான் பரிமாற்றம், ஆற்றல் பரிமாற்றம் மற்றும் திசையொவ்வா சிதைவு ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் சென்றன. உயிரியல் நீரின் மீநுண் மெதுவான இயல்பு இவரது முதன்மை கண்டுபிடிப்பாகும்.[1]

பட்டாச்சார்யா தற்போது போபாலில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேதியியல் துறையில் வருகை பேராசிரியராக உள்ளார். [2]

விருதுகள்[தொகு]

1997 ஆம் ஆண்டு கங்கன் பட்டாச்சார்யாவுக்கு வேதியியல் அறிவியலில் சாந்தி சுவரூப் பட்நாகர் விருதும் 2007 ஆம் ஆண்டு உலக அறிவியல் கழக பரிசும் கிடைத்தன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "INSA :: Indian Fellow Detail". www.insaindia.res.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  2. "Kankan Bhattacharyya, Department of Chemistry, IISER Bhopal". 2019.
  3. "Prizes and Awards". The World Academy of Sciences. 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கன்_பட்டாச்சார்யா&oldid=3177567" இலிருந்து மீள்விக்கப்பட்டது