உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ ஹென்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ ஹென்றி
பிறப்பு11 செப்டெம்பர் 1862
கிரீன்ஸ்போரோ
இறப்பு5 சூன் 1910 (அகவை 47)
நியூயார்க்கு நகரம்
கல்லறைMontford Area Historic District
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர்
சிறப்புப் பணிகள்கடைசி இலை, மெசயின் பரிசு
ஓ ஹென்றி

ஓ ஹென்றி (செப்டம்பர் 11, 1862 - ஜூன் 5 , 1910) ஆங்கில எழுத்தாளர். இவரது உண்மையான பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பதாகும். சிறு திருட்டுக் குற்றத்துக்காக மூன்றாண்டு சிறையிலிருந்தார். அக்காலத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அதுவே பின்னர் அவரது வாழ்க்கைத் தொழிலாயிற்று.[1][2][3]

இளமைக் காலம்

[தொகு]

போர்ட்டர் 1862 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் டாக்டர் அல்கர்மன் சிட்னி போர்ட்டர் ஆவார். தாயார் பெயர் மேரி ஜேன் வெர்ஜீனியா சுவைன் போர்ட்டர் என்பதாகும். வில்லியத்துக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவனது தாயார் காசநோய் ஏற்பட்டு இறந்தார். இதைத் தொடர்ந்து வில்லியமும் அவனது தந்தையும் அவனது தந்தைவழிப் பாட்டி வீட்டுக்கு இடம் மாறினர்.

வில்லியம் சிறுவனாக இருந்தபோது நல்ல வாசிப்புப் பழக்கம் உள்ளவனாக இருந்தான். செந்நெறி இலக்கியங்கள் முதல் மலிவான புதினங்கள் வரை கிடைத்தவற்றை எல்லாம் வாசித்தான். ஆயிரத்தொரு இரவுகள் கதை அவனுக்கு மிக விருப்பமான கதையாக இருந்தது.

1876 ஆம் ஆண்டில் போர்ட்டர் தனது தொடக்கக் கல்வியை முடித்துக் கொண்டு, லிண்ட்சே தெரு உயர் பாடசாலையில் (Lindsey Street High School) சேர்ந்தான். 1881 ஆம் ஆண்டில் அவன் தனது உறவினர் ஒருவரின் மருந்துக் கடையில் கணக்கு எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்தான். 19 ஆவது வயதில் மருந்தாளராக அனுமதிப் பத்திரம் கிடைத்தது.

டெக்சாசுக்கு இடமாற்றம்

[தொகு]

தனக்கு இருந்த தொடர்ச்சியான இருமல் குணமாவதற்கு, இடமாற்றம் உதவும் என்ற நம்பிக்கையில், போர்ட்டர், 1882 ஆம் ஆண்டில் டாக்டர் ஜேம்ஸ் கே. ஹால் என்பவரோடு டெக்சாசுக்குப் பயணமானான். அவன் அங்கே ஜேம்ஸ் ஹாலின் மகனான ரிச்சார்ட் ஹாலுக்குச் சொந்தமான செம்மறி ஆட்டுப் பண்ணையில் தங்கி ஆடு மேய்த்தல், பண்ணையில் உதவி செய்தல், சமைத்தல், பிள்ளைகளைக் கவனித்தல் முதலிய பல வேலைகளையும் செய்தான். பண்ணையில் இருக்கும்போது அங்கிருந்த வேலையாட்கள் மூலம் ஓரளவு எசுப்பானிய மொழியையும், ஜெர்மானிய மொழியையும் கற்றுக்கொண்டான். இலக்கியங்களைப் படிப்பதற்கும் அவனுக்கு அங்கே வாய்ப்புக் கிடைத்தது.

போர்ட்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. 1884 ஆம் ஆண்டில் வில்லியம், ரிச்சார்டுடன் ஆஸ்டினுக்குப் பயணமானான். அங்கே இருக்க விரும்பிய வில்லியம், ரிச்சார்டின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினான். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அவன், மருந்தாளன், படவரைவாளன், வங்கிக் காசாளன், பத்திரிகையாளன் எனப் பல தொழில்களில் ஈடுபட்டான். வில்லியம் இசையிலும் வல்லவனாக இருந்தான். கிட்டாரும், மெண்டலினும் வாசிக்க அவனுக்குத் தெரிந்திருந்தது. எனவே ஆஸ்டினில் இசை மற்றும் நாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றினான்.

1890 களின் தொடக்கத்தில் போர்ட்டர் குடும்பம் - மனைவி ஆதல், மகள் மார்கிரட் மற்றும் வில்லியம்.

அங்கே வசதி படைத்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஆதல் எஸ்தெஸ் (Athol Estes) என்பவளைக் காதலித்தான். பெண்ணின் தாயார் இதனை விரும்பாததால், தாங்களாகவே இருவரும், 1887 ஆம் ஆண்டில் மணம் செய்து கொண்டனர். இருவரும் தொடர்ந்தும் இசை, நாடகத் துறையில் ஆர்வம் காட்டி வந்தனர். இவர்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தை உடனேயே இறந்துவிட்டது. பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

போர்ட்டரின் நண்பரான ரிச்சார்ட் ஹாலுக்கு டெக்சாசின் நில ஆணையாளராகப் பதவி கிடைத்தது. அவர் போர்ட்டருக்குத் தனது அலுவலகத்தில் படவரைவாளராக வேலை கொடுத்தார். அந்த வருமானம் அவனுக்குப் போதுமானதாக இருந்தும், தொடர்ந்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் அவன் எழுதிவந்தான்.

போர்ட்டர் எழுதிய கதைகளின் கருக்களும், கதை மாந்தர்களும் நில அலுவலகத்திலிருந்தே உருவாயினர். இந்த அலுவலகத்தில் போர்ட்டருக்குக் கிடைத்த வேலை ஒரு அரசியல் நியமனம் ஆகும். இதனால், ரிச்சார்ட் 1890 ஆம் ஆண்டின் ஆளுனர் தேர்தலில் நின்று தோற்றபோது, போர்ட்டரும் தனது வேலையிலிருந்து விலகிக் கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Marquis and Miss Sally", Everybody's Magazine, vol 8, issue 6, June 1903, appeared under the byline "Oliver Henry"
  2.   "Henry, O.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது). (1922). [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]
  3. "Biography: O. Henry". North Carolina History. பார்க்கப்பட்ட நாள் March 10, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_ஹென்றி&oldid=3889628" இலிருந்து மீள்விக்கப்பட்டது