ஓய்வூதியர் விடுப்பூதியம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக அரசு அலுவலர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது பணிக்காலத்தில் இறந்தாலோ அவர் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் அவர் கணக்கிலுள்ள சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) ஆகியவற்றிற்கு ஈடாகப் பெறும் ஊதியத் தொகையே ஓய்வூதியர் விடுப்பூதியம் (தமிழ்நாடு) (Encashment of Earned Leave) [1]எனப்படும். ஓய்வூதியர் ஓய்வு பெறும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாளில் இவ்விடுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியர் பணி ஓய்வு பெறும் நாளில் பெறுகின்ற அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் விடுப்பூதியம் கணக்கிடப்படுகிறது.[2]

ஈட்டிய விடுப்பு[தொகு]

தமிழக அரசில் பணிபுரியும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தொடர்ச்சியான 11 நாட்கள் தொடர் பணிக்கு முழு ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பை தமிழ்நாடு அரசின் விடுப்பு விதிகள் அங்கீகரிக்கிறது. ஊழியர் இவ்விடுப்பை தன் தேவைகேற்ப அனுபவிக்கலாம் அல்லது அரசுக்கு ஒப்படைத்து ஊதியம் பெறலாம். அரசுஊழியர் முழு ஊதியத்துடன் பெறக்கூடிய இவ்விடுப்பே ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது.

அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் தன்னுடைய பணிக்காலத்தில் அதிகப்பட்சமாக 240 நாட்கள் ஈட்டிய விடுப்பினை அவருடைய விடுப்புக் கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அவருடைய விடுப்புக் கண்ணக்கில் இருப்பில் உள்ள இந்த ஈட்டிய விடுப்பை ஓய்வு பெறும் நாளில் பணமாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் ஓய்வூதியர் விடுப்பூதியத்திற்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை. மத்திய அரசுப் பணியில் உள்ள நிலையான ஊழியர்கள் தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை அவர்கள் கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.[3].

ஒரு அரையாண்டின் துவக்கத்தில் ஒருவர் விடுப்பில் செல்ல நேரிட்டால் அவர் மீண்டும் பணி ஏற்பார் என்று உறுதியாகத் தெரிந்த பிறகே அவருடைய கணக்கில் 15 நாட்கள் விடுப்பை வரவு வைப்பார்கள்.

ஊதியமில்லா விடுப்பு, சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு மற்ரும் தற்காலிகப் பணி நீக்கக்காலம் தவிர பிற காலங்களில் தன்னுடைய கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பை ஒப்புவிப்பு செய்து அதற்கு ஈடான ஊதியத்தை ஓர் அரசு ஊழியர் பெறலாம். இந்த ஒப்படைப்பு 24 மாத இடைவெளியில் 30 நாட்கள் வரையும் 12 மாத இடைவெளியில் 15 நாட்களாகவும் அனுமதிக்கப்படுகிறது.

ஈட்டிய விடுப்பு வரவு வைத்தல்[தொகு]

நிரந்தரப் பணியாளர்கள்[தொகு]

அரசுப் பணியில் உள்ள நிரந்தர அரசு ஊழியர் மற்றும் ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினருக்கு அவருடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு சனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற நிரந்தர ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு 2½ நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் ஊழியருக்கும் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியருக்கும் இதே நடைமுறையின்படி ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பு வைக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியர் ஊதியமில்லா விடுப்பில் செல்வாரெனில் 10 நாள் விடுப்புக்கு ஒருநாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.

தற்காலிகப் பணியாளர்கள்[தொகு]

தற்காலிகப் பணியாளர்களுக்கு ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு இரண்டு முழு மாதத்திற்கும் 2½ நாள் வீதம் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும்.

கடைநிலை ஊழியருக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கான விதி முறைகளின்படியே ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படும். ஆனால் பணி வரண்முறை செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர், அரையாண்டின் துவக்கத்திலேயே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு இவர்கள் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு[தொகு]

தமிழக அரசில் பணிபுரியும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களுடைய சொந்த வேலையைக் கவனிக்கும் பொருட்டு அவர்களுடைய பணிக்காலம் முழுமைக்குமாக 180 நாட்கள் அரை சம்பள் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. ஊழியர் இவ்விடுப்பை அனுபவிக்கலாம் அல்லது பணி ஓய்வின்போது காசாக்கிக் கொள்ளலாம். இத்தொகைக்கு வருமானவரி செலுத்த வேண்டும். ஊழியருக்கு இவ்விடுப்பை அனுமதிப்பதில் சில வரைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. தகுதிகாண் பருவத்தினருக்கு இவ்விடுப்பு அக்காலம் முடியும் வரை கிடையாது.

2. 10 வருடம் வரை பணிக்காலம் உடையவருக்கு அதிகப்பட்சமாக 90 நாட்கள் இவ்விடுப்பு அனுமதிக்கப்படும்.

3. 10 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு அதிகப்பட்சமாக 180 நாட்கள் சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு அனுமதிக்கப்படும்.

ஓய்வூதியர்களுக்கு விடுப்பூதிய சலுகை[தொகு]

பணிக்காலத்தில் அரசு ஊழியர் சேமித்து வைத்துள்ள மேர்கண்ட விடுப்புகளை ஓய்வு பெறும் நாளில் பணமாக்கிக் கொள்ளும் சலுகையை அரசு வழங்கியுள்ளது. வய்து முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுகின்ற ஊழியர்கள், இயலாமை காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெறுகிறவர்கள், விருப்ப ஓய்வில் செல்பவர்கள், கட்டாய ஓய்வில் செல்பவர்கள், ஆகிய அனைத்து ஓய்வூதியர்களும் விடுப்பூதிய சலுகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

தற்காலிகப் பணி நீக்கக்காலத்தில் உள்ளவர்களுக்கு, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் முடிவுகட்டப்பட்டு விடுப்புகளை வரைமுறைப் படுத்திய பிறகு இச்சலுகை அனுமதிக்கப்படுகிறது.

அயல்பணி புரியும் அரசு ஊழியருக்கும் இச்சலுகை உண்டு.

விடுப்பூதிய பட்டுவாடா[தொகு]

ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பூதிய சலுகை பின்வருமாறு கணக்கிடப்பட்டு பட்டுவாடா செய்யப்படுகிறது.

  1. ஈட்டிய விடுப்பு 240 நாட்கள் அதாவது எட்டு மாத ஊதியம்
  2. சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு 180 நாட்கள் அதாவது மூன்று மாத ஊதியம்.

ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்தக் காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு காசாக்கப்படும்போது பெறக்கூடிய ஊதியம் என்பது அன்றைய தேதியில் நடைமுறையில் உள்ள அகவிலைப்படி, தகுதியான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.

அரசில் பணிபுரியும் அனைத்து ஊழியருக்கும் அவர்கள் பணிபுரியும் அலுவலக்த்தின் தலைவரே கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்து இத்தொகையை பெற்று வழங்குவார். தானே பணம் பெறும் அலுவலருக்கு துறைத்தலைவர் மூலமாக தகவல் பெற்று மாநிலக் கணக்காயர் அங்கீகரிப்பார், துறைத்தலைவர்கள் ஓய்வு பெறுகையில் விடுப்பூதிய சலுகை பெற அரசின் ஆணை தேவை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]