ஓம் முத்துமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாவலர் ஓம் முத்துமாரி

பாவலர் ஓம் முத்துமாரி, (இறப்பு: நவம்பர் 14, 2013) கிராமியக் கூத்துக்கலையில் சுமார் 45 ஆண்டு காலம் தடம்பதித்த, இடது சாரி - முற்போக்கு கலை இலக்கிய மேடைகளில் இயங்கிய கலைஞர்.[1]இவர் , தமிழக அரசின் கலைமணி, கலைச்சுடர் விருதுகளைப் பெறாமலே நேரடியாக கலைமாமணி விருது பெற்ற ஒரே கலைஞராவார்.[2]

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர் விருதுநகர் மாவட்டம் செவலூரில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரிடம் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கருப்பபிள்ளை மற்றும் சிங்கப்பிள்ளை என்று இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் சோழவந்தானில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.காங் கிரஸ் பள்ளிக்கூடம் ஒன்றும் அவர்கள் நடத்தி வந்தார்கள். அது இலவசப் பள்ளி. பை நிறைய எழுத்துப் பழக புளியமுத்து கொண்டுபோனால் போதும். அப்பள்ளியில் இவர் பள்ளியில் படித்தார். அங்கு பகலில் பாடம் நடக்கும். இரவுகளில் கூட்டம் நடக்கும். வெங்கிடு சுப்பய்யா, பூர்ணசுந்தரம் பிள்ளை என்று இரண்டு பேர்தான் பாரதியார் பாட்டு, வள்ளலார் பாட்டு பாடக் கற்றுக் கொடுத்தார்கள். நாட் டில் எது நடந்தாலும் அது பற்றிய பாடல்களைத் தேடிப்பிடித்து மனப்பாடம் செய்து தெருக்க ளில் பாடும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது.1949ல் அவரது அப்பா காலமாகிவிட்ட பிறகு குடும்பத்தோடு சொந்த ஊரான செவலூருக்கு வந்தார். அப்போது பஞ்ச காலம். புண்ணாக்கு தான் சாப்பாடு. ஆகவே அதை புண்ணாக்குப் பஞ்சம் என்பார்கள். என்ன பஞ்சமாக இருந்தாலும் அவரது கலைப் பைத்தியம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவர் தரத்துப் பையன்களாக ஒரு ஆறு பேரைச் சேர்த்துக் கொண்டு சினிமா மெட்டில் சில பாடல்களை எழுதி பயிற்சி கொடுத்து ஒரு குழுவை உருவாக்கினார்.[3]திருவேங்கடம் அருகே உள்ள வரகனூரில் இருந்து தனது கிராமியக் கலை வாழ்க்கையை துவக்கியவர்.தனது இளம் வயதிலிருந்தே பொதுவுடமைக் கட்சி மேடைகளிலும் இடதுசாரி இயக்கங்களின் மேடைகளிலும் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து நால்வர் கூத்து என்ற கூத்து வடிவத்தில் கிராமியக் கலை நிகழ்வுகளை ஊர்தோறும் அரங்கேற்றியவர்.தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வர்க்க வெகுஜன அமைப்புகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்(தமுஎகச) கலை இலக்கிய மேடைகள் என இடை விடாமல் உழைக்கும் மக்கள் மீது பற்றுறுதியோடு அவர்களது வாழ்வின் துயரங்களை பாடல்களாக முழங்கியவர்.[1]

பொது வாழ்க்கை[தொகு]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த ஓம் முத்துமாரி,மதுரையில் பி.ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வீதி வீதியாக கலைப் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தியவர். தனது இறுதி மூச்சு வரை தமுஎகசவில் ஓர் உறுதிமிக்க அங்கமாக தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். தமுஎகசவின் மாநிலக்குழுவிலும் திருநெல்வேலி மாவட்டக்குழுவிலும் உறுப்பினராக செயல்பட்டவர்.[1]

மக்களின் நிலை[தொகு]

பாவலர் ஓம் முத்து கிராமங்கள் தோரும் நடத்தப்படும் கூத்தில் மக்களின் நிலை குறித்து பாடும் பாடல் ஒன்று-[4]

விருதுகள்[தொகு]

தமிழக அரசின் இயல், இசை, நாடகம் மன்றத்தின் கலைமாமணி விருது பெற்ற ஓம் முத்துமாரி, தமுஎகசவால் முற்போக்கு முன்னணிக்கலைஞர் என்று பட்டம் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மூக்கையாத் தேவர்தான் அவருக்கு பாவலர் என்கிற பட்டத்தைக் கொடுத்தார்.[3] பாவலர் என்று தனது தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஓம் முத்துமாரி, நாட்டுப்புறக் கலைச்சுடர், நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்ரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்பது உட்பட பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.[1]

இறப்பு[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் குருவி குளம் ஒன்றியம் திருவேங்கடத்தில் வசித்து வந்த ஓம் முத்துமாரி, நவம்பர் 14 , 2013 இல் மரணமடைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "முற்போக்கு கிராமியக் கலைஞர் : பாவலர் ஓம் முத்துமாரி காலமானார்". தீக்கதிர் (நவம்பர் 14 , 2013). பார்த்த நாள் நவம்பர் 14 , 2013.
  2. "பல்லுபோனாலும் சொல்லுபோனதில்லை". செ. கவாஸ்கர்: pp. 8. 9 திசம்பர் 2013. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 திசம்பர் 2013. 
  3. 3.0 3.1 "செங்கொடியோடு சேர்ந்திசைத்த கலைஞன்". தீக்கதிர் (18 நவம்பர் 2013). பார்த்த நாள் 18 நவம்பர் 2013.
  4. வரப்பு வெளியில் றெக்கை ரெண்டு - பாவலர் ஓம் முத்துமாரி - சென்னை புக்ஸ், வெளியீடு-1990.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_முத்துமாரி&oldid=2418817" இருந்து மீள்விக்கப்பட்டது