ஓமானில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமானில் பெண்கள்
ஆட்டுச் சந்தையில் ஓர் ஓமானியப் பெண்.
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.340 (2012)
தரவரிசை59 வது இடம்
தாய் இறப்புவீதம் (100,000க்கு)32 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்9.6% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்47.2% (2010)
பெண் தொழிலாளர்கள்28.3% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.6053 (2013)
தரவரிசை122வது இடம் out of 136

வரலாற்றில், ஓமான் பெண்கள் (Women in Oman) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்தும் விலக்கப்பட்டனர், ஆனால் 1900 களில் வெளிநாடுகளில் பரவிய ஓமானியர்கள் மீண்டும் 1970 களின் முற்பகுதியில் ஓமான் திரும்பிய போது , வெளிநாடுகளில் அவர்கள் இருந்தகாலத்தில் அவர்களைப்பாதித்த, பாலின பாகுபாட்டு மரபுகளை உடைத்தெறியும் பிரித்தானிய காலனித்துவ மதிப்பீடுகளை சமகால ஒமனியர்களிடம் புகுத்தினர். இதன் விளைவாக தற்பொழுது ஓமான் பெண்கள் தங்களுடைய முந்தைய மரபார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல பொதுவட்டத்தில் கலந்துள்ளனர். தொழில் மற்றும் தொழிற்துறைகளில் பயிற்சி பெறவும் முன்வருகின்றனர். ஓமானில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் ஓமானிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றைய தினத்தில் விமரிசையாக நடத்தப்படுகின்றன.[2]

அரசியல்[தொகு]

1970 ஆம்ஆண்டில் ஒரு புதிய ஆட்சியாளரின் வருகையால், ஓமான் நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் பெரிதும் மாற்றங்கள் ஏற்பட்டன. பழமைவாத, மாற்றங்களை விரும்பாத சையத் பின் தைமூரை அவருடைய மகன் சுல்தான் கபூச் பின்சையத் ஒர் அரசியல் புரட்சியில் வீழ்த்தியபின் புதியாக ஆட்சிக்கு வந்தார். பல்லாண்டுகளாக வளர்ச்சிகள் ஏதுமின்றி உறங்கிக் கொண்டிருந்த சமூகத்தில் அவர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சமூகநலத் திட்டங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் முதலியவற்றைத் திறக்க ஆணையிட்டார். முறையான கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற ஓமானியர்கள் தங்கள் புதியநாட்டைக்கட்டி எழுப்புவதில் பங்கெடுப்பதற்காக நாடு திரும்பினர். அவ்வாறு திரும்பிய அவர்கள் தாங்கள் தங்கியிருந்த நாட்டிலிருந்து பாலின பாகுபாடு தொடர்பான தாராள மனப்பான்மை மற்றும் புதிய சிந்தனைகளுடன் திரும்பி வந்தனர்.[3]

சுல்தான் கபூச் தனது நாட்டில் கிடைத்த எண்ணெய் வருவாயை, வளர்ச்சி மற்றும் சமூக சேவைகளை இலக்காகக் கொண்டு செலவிட்டார். மேலும் இவர், மச்லிசு அல் சிகுரா என்ற கலந்தாய்வுக் குழுமம் ஒன்றையும் நியமித்தார். சட்டமியற்றலை மீள்பார்வை செய்யும் உரிமை கொண்ட இக்குழுவினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்புதிய சட்டம் மக்களை அரசாங்கச் செயல்பாடுகளில் பங்கேற்க வழிவகுத்தது. முன்னதாக அரசக் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் மக்களும் கட்டுப்படுத்த இயலும் என்ற நிலை உருவானது. 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மச்லிசு அல் சிகுரா அமைப்பில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட 83 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1996 ஆம் ஆண்டில் ஒமான் சுல்தான்களின் அடிப்படைச் சட்டம் என்ற எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை சுல்தான் வெளியிட்டார். ஓமானி மக்களுக்கு அவர்களுடைய அடிப்படை குடியுரிமைகளை இந்த ஆவணம் வழங்கியது. அத்துடன், சமத்துவம் மற்றும் பாதுகாப்பு அனைத்தையும் சட்டத்தின் கீழ் பெறலாம் என்ற உத்தரவாதத்தையும் இந்த ஆவணம் கொடுத்தது. 2002 ஆம் ஆண்டில், 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்ற உரிமையும் எல்லா ஓமானியர்களுக்கும் வழங்கப்பட்டது.[4]

மிக அண்மையில், 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுல்தானின் ஒரு அரசாணை பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை உறுதி செய்தது.[5] பெண்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை அளிக்கும் ஆணையிலும் சுல்தான் கபுச் சமீபத்தில் கையெழுத்திட்டார். சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகிய கூறுகளிலும் பெண்கள் முழுமையாக ஈடுபட இவ்வாணை வழி செய்தது.[6]

கல்வி[தொகு]

1940 ஆம் ஆண்டிற்கு முன் நவீன கல்வி என்பது ஓமானியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது[7]. சுல்தான் கபூச்சின் சீர்திருத்தக் நடவடிக்கைகளுக்கு முன்புவரை ஓமானில் சிறுவர்களுக்கான மூன்று தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தது. அப்பள்ளிகளில் 900 சிறுவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக குர் ஆனை மனப்பாடம் செய்வது, அடிப்படைக் கணக்கீடுகள் மற்றும் எழுத்துப் பயிற்சிகள் முதலானவையே கற்பிக்கப்பட்டன[8], 1970 ஆம் ஆண்டில் சுல்தான் கபூச் உலகளாவிய கல்விக் கொள்கையைஓமானில்அறிமுகப்படுத்தினார் [9]. இதனால் 1970 இல் 0%,ஆக இருந்த பெண்களின் வருகை 2007 இல் 49% ஆக உயர்ந்தது[10]. தொடர்ச்சியான ஆண்டுகளில் ஆண் பெண் மாணவர்களின் எண்ணிக்கை 1000 பள்ளிகளில் 600000 மாணவர்கள் என்ற உயர்வை அடைந்தது. இதனால் ஓமான், எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை நெருங்கியது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Global Gender Gap Report 2013" (PDF). World Economic Forum. pp. 12–13.
  2. Women’s Day celebrations today பரணிடப்பட்டது 2011-10-19 at the வந்தவழி இயந்திரம், 17 October 2011. Retrieved 2011-10-27.
  3. Chatty, Dawn. "Women Working in Oman: Individual Choice and Cultural Constraints." International Journal of Middle East Studies 32.2 (2000): 241-54
  4. "Oman - Leadership." Encyclopedia of the Nations. Web. 1 May 2012. http://www.nationsencyclopedia.com/World-Leaders-2003/Oman-LEADERSHIP.html
  5. Yusuf Issan, Salha. "Preparing for the Women of the Future: Literacy and Development in the Sultanate of Oman." Hawwa (Leiden) 8.2 (2010): 120-53
  6. Aslam, Neelufer, and Srilekha Goveas. "A Role and Contributions of Women in the Sultanate of Oman." International Journal of Business and Management 6.3 (2011): 232-39
  7. Skeet, Ian. Oman: Politics and Development. New York: St. Martin's, 1992.
  8. Al-Lamki, Salma M. "Higher Education in the Sultanate of Oman: The Challenge of Access, Equity and Privatization." Journal of Higher Education Policy and Management 24.1 (2002): 75-86.
  9. Al Riyami, Asya, and Mustafa Afifi. "Women Empowerment and Marital Fertility in Oman." The Journal of the Egyptian Public Health Association 78.1, 2 (2003): 55-72.
  10. Aslam, Neelufer, and Srilekha Goveas. "A Role and Contributions of Women in the Sultanate of Oman." International Journal of Business and Management 6.3 (2011): 232-39
  11. Al-Lamki, Salma M. "Higher Education in the Sultanate of Oman: The Challenge of Access, Equity and Privatization." Journal of Higher Education Policy and Management 24.1 (2002): 75-86.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமானில்_பெண்கள்&oldid=3355251" இலிருந்து மீள்விக்கப்பட்டது