ஓமக்குச்சி நரசிம்மன்
ஓமக்குச்சி நரசிம்மன் | |
|---|---|
நரசிம்மன் | |
| பிறப்பு | 1936 கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | மார்ச்சு 12, 2009 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1949, 1981-2008 |
| சமயம் | இந்து |
| வாழ்க்கைத் துணை | சரசுவதி |
| பிள்ளைகள் | மூன்று (மகள்கள்), ஒரு (மகன்). |
ஓமக்குச்சி நரசிம்மன் (Omakuchi Narasimhan, இறப்பு: 12 மார்ச் 2009) என அழைக்கப்பட்ட நரசிம்மன் என்பவர் இந்திய நாடக, திரைப்பட நடிகராவார். இவர் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நரசிம்மன் 14 இந்திய மொழிகளில் 1,500-இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் ஜூட்டு நரசிம்மம் என்று அழைக்கப்பட்டார்.
துவக்ககால வாழ்க்கை
[தொகு]நரசிம்மன் 1936 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு வெளியான ஔவையார் திரைப்படத்தில் அறிமுகமானார். இருப்பினும், அறிமுகமான பிறகு, படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நரசிம்மன் 1979 வரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
தொழில்
[தொகு]தமிழில் ஔவையார் (1953) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஓமக்குச்சி நரசிம்மன். பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டின் "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரி ராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், தலைநகரம் படத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.
நாடக இயக்குநர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்" என்ற நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். இக்காட்சி நகைச்சுவையாக அமைய வேண்டும் என்பதற்காக யப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கதாபாத்திரத்தின் பெயராக வைக்க இயக்குநர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து, அப்பெயரையே வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாள்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்" என அழைக்க ஆரம்பித்தனர்.
மறைவு
[தொகு]இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனது 73-ஆவது அகவையில் 2009, மார்ச் 12, வியாழன் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இறந்தார்.[1] இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மகன் ஒருவரும், மகள்கள் மூன்று பேரும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராஜன், அய்யனார். "``சாய்பாபா சொன்னார்; இயேசு சொன்னார், சாமியார் ஆகிட்டேன்!" - நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன்". www.vikatan.com/. Retrieved 2021-11-13.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/lsquoOmakuchirsquo-Narasimhan-dead/article16636032.ece
- நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம் - தினமலர் செய்தி
