ஓன் ஜாபார்
ஓன் ஜாபார், 1948 | |
| ஜொகூர் மந்திரி பெசார் | |
| பதவியில் 1 சூன் 1947 – 18 மே 1950 | |
| தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு 1-ஆவது தலைவர் | |
| பதவியில் 11 மே 1946 – 25 ஆகத்து 1951 | |
| முன்னையவர் | புதிய கட்சி |
| பின்னவர் | துங்கு அப்துல் ரகுமான் |
| மலாயா விடுதலை கட்சி 1-ஆவது தலைவர் | |
| பதவியில் 16 செப்டம்பர் 1951 – 16 மார்ச் 1954 | |
| நெகாரா கட்சி 2-ஆவது தலைவர் | |
| பதவியில் 10 திசம்பர் 1955 – 19 சனவரி 1962 | |
| கோலா திரங்கானு செலாத்தான் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 11 செப்டம்பர் 1959 – 19 சனவரி 1962 | |
| பெரும்பான்மை | 2,612 (1959) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Onn bin Jaafar 12 பெப்ரவரி 1895 (வயது 66) ஜொகூர் பாரு, ஜொகூர் |
| இறப்பு | 19 சனவரி 1962 ஜொகூர் பாரு, ஜொகூர் |
| அரசியல் கட்சி |
|
| துணைவர்(கள்) | ரபியா அப்துல்லா; ஜமிலா ஒசுமான்; செ கா; டத்தின் அலிமா உசேன் |
| உறவுகள் | இசாமுடின் உசேன் (பேரன்) |
| பிள்ளைகள் | உசேன் ஓன் |
| பெற்றோர் | ஜாபார் முகமது; ரொகாயா அனீம் |
டத்தோ, சர் ஓன் ஜாபார் எனும் ஓன் டத்தோ ஜாபார் (ஆங்கிலம்; மலாய்: Onn Jaafar அல்லது Onn bin Dato' Jaafar; சாவி: عون بن جعفر) (12 பெப்ரவரி 1895 – 19 சனவரி 1962) என்பவர் 1947 முதல் 1950 வரை ஜொகூர் மாநிலத்தின் 7-ஆவது மந்திரி பெசாராக பணியாற்றிய ஒரு மலேசிய அரசியல்வாதி; மற்றும் தேசியவாதி ஆவார். மலாயா ஒன்றியம் உருவாக்கப்பட்ட போது, அதற்கு அவர் தெரிவித்த எதிர்ப்புகள், 1946-இல் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு அல்லது அம்னோ (UMNO) எனும் ஒரு புதிய கட்சி தோன்றுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது. 1951-இல் அவர் பதவி துறப்பு செய்யும் வரை அம்னோவின் நிறுவனராகவும்; அதன் முதல் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.
பிரித்தானிய மலாயாவில், பிரித்தானியர்களின் அரசியல் மேலாதிக்க எதிர்ப்பு; மற்றும் தொடக்ககால மலாய் தேசியவாதத்தின் முன்னோடியாகவும் ஓன் ஜாபார் அறியப்படுகிறார்.
மலாய் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ்; உள்நாட்டு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தை (RIDA) 1951-இல் நிறுவினார். அவரே அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்த வாரியமே பிற்காலத்தில் கிராமப்புற மலேசியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாரா (MARA) எனப்படும் 'அமானா ராக்யாட் மன்றம்' என உருவெடுத்தது. இந்த வாரியத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்குத் தொழில் பயிற்சிகளும், வணிகக் கடன்களும் வழங்கப்பட்டன.
வாழ்க்கை
[தொகு]ஓன் ஜாபார் அவர்களின் தந்தை ஜாபார் முகமது, ஜொகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் ஆவார். தாயார் ரொகாயா அனீம் (1864–1904), உதுமானியப் பேரரசின் காகசஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2] ஓன் ஜாபாரின் குடும்பத்திற்கு ஜொகூர் அரண்மனையுடன் நெருங்கிய உறவுகள் இருந்ததால், ஜொகூர் சுல்தான் இபுராகிம் அல் மசூர் அவரைத் தன்னுடைய வளர்ப்பு மகனைப் போல நடத்தினார். ஓன் ஜாபார், தன் கல்வியை ஜொகூர் பாருவில் உள்ள ஒரு மலாய் பள்ளியில் தொடங்கினார். 1904-இல், அவர் இங்கிலாந்து சென்றார். அங்கிருந்த சபோக் நகரின் ஆல்டெபர்க் லாட்ஜ் எனும் தனியார் பள்ளியில் 1910-ஆம் ஆண்டு வரை பயின்றார். இதனால் ஆங்கில மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
அவர் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்; மற்றும் பள்ளியின் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து அணிகளுக்குத் தலைமை தாங்கினார். 1917-இல் ஜொகூர் இராணுவப் படையில் (Johor Military Forces) சாதாரண அதிகாரியாக இணைந்து லெப்டினண்ட் தகுதி வரை உயர்ந்தார்.
பொது
[தொகு]அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவர் ஒரு சிறந்த பத்திரிகையாளராகப் பணியாற்றினார். மலாய் மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார். 'லெம்பாகா மலாயு' (Lembaga Melayu) மற்றும் 'வார்த்தா மலாயா' (Warta Malaya) ஆகிய புகழ்பெற்ற மலாய் நாளிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். முதன்முதலில் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்ட மலாய் நாளிதழ் எனப் போற்றப்படும் 'வார்த்தா மலாயா' மூலம் மலாய் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.[3]
மலாயா ஒன்றியம்
[தொகு]
1946-இல் பிரித்தானிய மலாயா அரசு கொண்டு வந்த மலாயா ஒன்றியம் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மக்களை ஒன்றிணைத்துப் பெரும் போராட்டங்களை நடத்தினார். இவரின் தீவிர எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. மலாயா நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, அம்னோ கட்சியில் மலாய் அல்லாத பிற இனத்தவர்களையும் (சீனர்கள் மற்றும் இந்தியர்கள்) உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்[4] என்று அவர் வலியுறுத்தினார்.
அவரின் பல்லினக் கொள்கையை அம்னோவின் மற்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், 1951-இல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அம்னோ கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, மலேசியாவில் ஒரு பல்லினக் கூட்டணியை உருவாக்க அவர் தொடர்ந்து முயன்றார்.
பின்னர் அவர், மலாயா விடுதலை கட்சி (IMP); மற்றும் தேசியக் கட்சி (Parti Negara) ஆகிய கட்சிகளைத் தோற்றுவித்தார். அவர் தோற்றுவித்த மலாயா விடுதலைக் கட்சியில் மஇகா கட்சியின் (MIC) தொடக்கக்காலத் தலைவர்களும் இணைந்து மலாயா நகராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டனர். மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான், ஓன் ஜாபாரின் பல்லினக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் கூட்டணியை (Alliance Party)[5] வெற்றிகரமாக உருவாக்கினார்
குடும்பப் பின்னணி
[தொகு]ஓன் ஜாபார், மலேசியாவில் ஓர் உயரிய அரசியல் குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்டவர். இவருடைய தந்தை டத்தோ ஜாபார் பின் அஜி முகமமது, ஜொகூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ஆவார். இவருடைய மகன் துன் உசேன் ஓன், மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
இவருடைய பேரன் டத்தோ செரி இசாமுடின் உசேன், மலேசியாவின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராவார். இவருடைய கொள்ளுப்பேரன் டத்தோ ஓன் அபிஸ் காசி, தற்போதைய ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இறுதிக்காலம்
[தொகு]இனப் பாகுபாடு இல்லாமல்; அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பல்லின மலேசிய அரசியலுக்கு வித்திட்ட ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளராக மலேசிய வரலாற்றில் டத்தோ ஓன் ஜாபார் இன்றும் மதிக்கப்படுகிறார். அவரின் பல்லின அரசியல் பார்வையை அக்கால மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாததால், தேர்தல் அரசியலில் அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
இருப்பினும், 1959 பொதுத்தேர்தலில் கோலா திராங்கானு செலாத்தான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] சனவரி 19, 1962 இல் அவர் காலமானார்.[7] மலேசியாவின் பல்லின ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்த அவரின் சிந்தனைகள் இன்றும் மலேசிய வரலாற்றுப் பாட நூல்களில் கற்பிக்கப்படுகின்றன
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]
ஜொகூர்
- ஜொகூர் முடியாட்சி விருது (DK II) (1947)[8][9]
- ஜொகூர் பட்டத்து இளவரசர் விருது (DPMJ) – டத்தோ (1941)[10]
பேராக்
- (SPCM) – டத்தோ செரி (2015)[11]
வெளிநாட்டு விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mehmet Ozay; Ekrem Saltık (June 2015). "The Myth and Reality of Rukiye Hanim in the Context of Turkish Malay Relations (1864–1904)". İnsan & Toplum Dergisi (The Journal of Human & Society) 5 (9): 55–74. doi:10.12658/human.society.5.9.M0116.
- ↑ "Taking root, branching out". The Star Online. 1 April 2007. Archived from the original on 4 August 2017.
- ↑ Aristocrat who spoke his mind பரணிடப்பட்டது 4 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம். 18 June 2007. The Star.
- ↑ Bayly, Harper, Forgotten wars: Freedom and Revolution in Southeast Asia, pg 133-4
- ↑ Bayly, Harper, Forgotten wars: Freedom and Revolution in Southeast Asia, pg 211-2
- ↑ Wong Chin Huat (17 August 2007). "Splits in Umno and Opposition unity". The Sun (Malaysia). Retrieved 29 September 2021.
- ↑ Mohamed Abid (2003). Reflections of pre-independence Malaya. Subang Jaya, Selangor, Malaysia: Pelanduk Publications. p. 42. ISBN 967-978-865-2. கணினி நூலகம் 53896919.
- ↑ "STATE HONOUR FOR LADY IBRAHIM". Singapore Free Press. 17 September 1947. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/freepress19470917-1.2.106.
- ↑ Pengemudi Bahtera Merdeka Johor (in மலாய்). Abu Bakar bin Abdul Hamid, Zam Ismail, 1943-, Kamdi Kamil, 1949- (1st ed.). Johor Bahru, Johor: Yayasan Warisan Johor. 2012. p. 73. ISBN 978-983-2440-46-8. கணினி நூலகம் 870691698.
{{cite book}}: CS1 maint: others (link) - ↑ Mohamed Abid (2003). Reflections of pre-independence Malaya. Subang Jaya, Selangor, Malaysia: Pelanduk Publications. p. 12. ISBN 967-978-865-2. கணினி நூலகம் 53896919.
- ↑ "Perak honours six with posthumous awards". The Star (Malaysia). 28 November 2015. Retrieved 12 November 2019.
- ↑ "No. 39863". இலண்டன் கசெட் (Supplement). 1 June 1953. p. 2973.
நூல்கள்
[தொகு]- Ramlah Adam. (1992). Dato' Onn Ja'afar, pengasas kemerdekaan (1st ed.). Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. ISBN 983-62-2861-6. கணினி நூலகம் 29026780.
- Muhammad Faris Izzuwan, Adam, Ramlah binti, Samuri, Abdul Hakim bin & Fadzil, Muslimin bin (2004). Sejarah Tingkatan 3. Dewan Bahasa dan Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-62-8285-8.
- Goh, Cheng Teik (1994). Malaysia: Beyond Communal Politics. Pelanduk Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-978-475-4.