ஓட்டன் துள்ளல்
ஓட்டன் துள்ளல் என்பது கேரளத்தில் ஆடப்படும் புகழ்பெற்ற நாட்டுப்புற நடனம் ஆகும். இதற்கு ஏழைகளின் கதகளி என்றும் பெயருண்டு. இந்நடனத்தை பதினெட்டாம் நூற்றாண்டில், வாழ்ந்த குஞ்சன் நம்பியார் என்ற புகழ்பெற்ற கவிஞர் உருவாக்கியதாக பெரும்பாலோனர் கருதுகின்றனர். அவர் காலத்திற்கு முன்பே, இந்நாட்டுப்புற நடனம் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துள்ளல் நடனத்தில் ஓட்டன், சீதங்கன், பறையன் என்ற மூன்று வகை நடனங்கள் உள்ளன. இம்மூவகைத் துள்ளல்களுள், ஓட்டன் துள்ளலே மக்களால் பெரிதும் விரும்பப் படுவதால், துள்ளல் நடனைத்தைத் துள்ளல் என்று கூறாமல், ஓட்டன் துள்ளல் என்றே கூறுகின்றனர்.
குஞ்சன் நம்பியார்
[தொகு]இம்மூன்று வகைகளுக்குரியப் பாடல்களையும், குஞ்சன் நம்பியார் இயற்றியுள்ளார். இவை முறையே கணியர்(ஓட்டன்), புலையர்(சீதங்கன்), பறையர்(பறையன்) ஆகியவர்களால் ஆடப்படுகின்றன. பரம்பரைச் சூனியக்காரர்களும், சோதிடர்களுமான கணியர்கள் பேய், பிசாசுகளை ஓட்டுவதற்கு, ஓட்டன் துள்ளல் நடனத்தை நடத்துவர். கோயில்களில் நடக்கும் படையணி என்னும் விழாவின் போது, புலையர்கள் சீதங்கன் துள்ளல் நடனம் ஆடுவர். இவ்வாறு நீண்ட நாளாக நடைபெற்று வந்த சாக்கியார் (சாக்கையர்) கூத்து என்னும் துள்ளல் நடனங்களை, குஞ்சன் நம்பியார் ஒழுங்கு செய்து, மெருகிட்டுச் சிறந்த நடன வகையாகச் செய்தார். அவர் துள்ளல் பாடல்களைப் படிப்பில்லாத நாட்டுப்புற மக்களும் பாடும்படியாக எளிய நடையில் இயற்றியுள்ளார். இப்பாடல்கள் புராணக்கதைகளைப் பற்றியவை எனினும், காலத்திற்கு ஏற்ப மாற்றி, தனது கருத்துக்களை கூற, தக்கவாறு அமைத்துக் கொண்டார். நகைச்சுவை மூலம் புதியக் கருத்துக்களைக் கூறுவனவாக இருப்பதால் மக்களால் பெரிதும் பாரட்டப்படுகின்றன.
நடனமுறை
[தொகு]துள்ளல் நடனம், ஒருவர் மட்டுமே ஆடும் நடனமாகும். நடனமாடுபவர் ஈரடிப்பாடல் ஒன்றைப் பாடி, அதன் கருத்தை அபிநயங்களால் குறிப்பிடுவார். அவருக்குப் பின்புறம் நிற்கும் மத்தளக்காரர், அப்பாடலை மறுபடியும் பாடி, மத்தளம் அடிப்பார். அவர் பாடி முடித்ததும், நடனக்காரர் அடுத்த ஈரடிப்பாடலைப்பாடுவார். இவ்வாறு தொப்பி, மத்தளம் முழங்க, கைம்மணி இசைக்கக் கதையைப் பாடலாலும், அபிநயத்தாலும் நடித்துக் காட்டுவர்.
நடன ஒப்பனை
[தொகு]வேடம் புனைதல் நடனவகைக்கேற்ப வேறுபடும். ஓட்டன் துள்ளல் நடனமாடுபவர் முகத்தில் பச்சைச் சாயம் பூசிக் கொள்வர். கண்களிலும், புருவங்களிலும் கரியநிறக் கோடுகளை வரைந்து கொள்வர். மெல்லிய மரத்தாலும், புகைமணி என்னும் வர்ணக் காகிதத்தாலும், மயில் இறகுகளாலும் செய்யப்பட்ட அரைவட்டமான முடியைத் தலையில் அணிந்து கொள்வர். மார்பில் கவசம் பூணுவர். இடையில் கோவணங்களால் ஆன பாவாடையைக் கட்டுவர். ஒரு காலில் கெச்சைமணி அணிவர்.
சீதங்கன் துள்ளல் ஆடுபவர், முகத்தில் சாயம் பூசிக்கொள்வதில்லை. கரிய மையினால் கண்களை மட்டுமே கறுப்பாகச் செய்வார்கள். நெற்றியில் வெண்மையான திலகம் இருக்கும். தலையில் வெள்ளைத் துணிக்கு மேல் கருந்துணியைக் கட்டி, அதில் தென்னங்குருத்தோலைகளைக் கொண்டு அணி செய்வார்கள். குருத்தோலைகளால் பாம்பு வடிவமான அணி செய்து, அதனை மார்பில் அணிவர். கிண்கிணிகளையும், சதங்கைகளையும் இரண்டு கால்களிலும் அணிவார்கள். சீதங்கன் துள்ளல் ஆட்டம், மாலை நேரத்திலேயே நடைபெறும். பறையன் துள்ளல் ஆட்டத்தில் பாம்பு வடிவமான தலை அணியை அணிவார்கள். முகத்தில் சாயம் பூசுவதில்லை. பறையன் துள்ளல் வழக்கமாக்க் காலை நேரத்திலேயே நடைபெறும்.
ஊடகங்கள்
[தொகு]-
சாக்கையர் கூத்து
-
சாக்கையர்கூத்து
-
ஓ.துள்ளல் குழுவினர்
-
ஓட்டன் துள்ளல்
-
சீதங்கன்துள்ளல்