ஒலி மாற்றம்
மொழியியலில், ஒலி மாற்றம் அல்லது ஒலிப்பிறழ்வு என்பது ஒரு சொல்லை ஒலிக்கும் (பலுக்கும், உச்சரிக்கும்) பொழுது சில எழுத்தொலிகள் (ஒலியன்கள்) ஒன்று வேறொன்றாக திரிபுறும், இப் பலுக்கல் சொல்லமைப்பில் தாக்கத்தை உண்டாக்கும் மொழி மாற்ற வழிமுறை ஆகும். ஒலி மாற்றம் என்பது மொழியில் உள்ள ஓர் ஒலியனை இன்னொன்றால் (இன்னொரு ஒலியனால்) மாற்றீடு செய்தல், ஓர் ஒலியன் முற்றாகவே இல்லாது போதல் (அற்றுப்போதல்), அல்லது புதிய ஒலி வந்து புகுதல், முதலான மாற்றங்களை உள்ளடக்கி இருக்கக்கூடும். ஒலி மாற்றங்கள், பிற எழுத்தொலிகளுடன் வரும் ஒலிச் சூழலினால் தீர்மானிக்கப் படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட ஒலி மாற்றம் ஒரு வரையறுக்கப்பட்ட எழுத்தொலிச் சூழலிலேயே நடைபெறுகின்றது. அதே வேளை வேறுபிற எழுத்தொலிச் சூழல்களில் அதே எழுத்தொலி மாற்றம் அடைவதில்லை.
ஒலி மாற்றம் பொதுவாக ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே நடைபெறுவதாகக் கருதப்படுகிறது. அதாவது, எங்கெங்கே அதற்குரிய சூழ்நிலைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் அதே ஒலி மாற்றம் எதிர்பார்க்கப்படலாம். சில சமயங்களில், ஒழுங்கு முறைக்கு மாறாக, ஒலி மாற்றங்கள் எவ்வித ஒழுங்கும் இன்றி ஒரு சொல்லையோ அல்லது சில சொற்களை மட்டுமோ பாதிக்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
ஒலி மாற்றத்துக்கான குறியீட்டு முறை
[தொகு]- A > B
- என்பது A ஆனது, B ஆக மாறுகிறது என்று வாசிக்கப்படும். இங்கே A ஒரு மொழியின் முந்திய நிலையும், B அதன் பிந்திய நிலையும் என்பது சொல்லாமலே விளங்கும். மேற்காட்டிய தொடர்பை தலைகீழாக மாற்றி ">" குறியீட்டுடன் பின்வருமாறு எழுதலாம்.
- B > A
- இது B ஆனது, A யிலிருந்து பெறப்பட்டது என வாசிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக:
- POc. *t > Rot. f
- இது மூதுநிலை-ஓசியானிக் மொழியின் (POc.= Proto-Oceanic) *t ரொட்டுமான் மொழியில் (Rot.) [f] ஆக மாறியது என்பதைக் குறிக்கும்.
மேற்காட்டிய எடுத்துக் காட்டிலுள்ள தொடர்பில் தொடக்க ஒலிநிலையும், முடிவு ஒலிநிலையும் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில் இடையே நிகழ்ந்த/நிகழவல்ல மாற்றங்களின் தொகுப்பாக அல்லது சுருக்க உள்ளதர்கான ஒரு குறியீடு மட்டுமே. இடைநிகழ் மாற்றங்களில் சில பின்வருமாறு அமையும்: *t முதலில் பல் உரசொலியாகிய [θ] ("த" வை ஒத்த ஒலி) ஆகவும் பின்னர் அது [f] ('வகரம்) ஆகவும் மாறியது. இம் மாற்றங்களை விரிவாகப் பின்வருமாறு காட்டலாம்.
- t > θ > f
மேற்குறிப்பிட்டக் குறியீடு கட்டுப்பாடுகள் (நிபந்தனைகள்) எதுவும் அற்ற முறையில் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும். மாற்றம் நிகழ, ஒலிச்சூழலில் கட்டுப்பாடுகள் ஏதும் இருந்தால், சூழ்நிலை பற்றியும் குறிப்பிடப்படல் வேண்டும். இது பின்வருமாறு அமையும்:
- A > B /X__Y
- அதாவது A ஆனது X க்குப் பின்னும், Y க்கு முன்னும் வரும்போது B ஆக மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. முதல் பகுதி A ஆனது B ஆக மாறுகிறது என்று குறிக்கின்றது; அடுத்து வரும் /X__Y என்னும் குறியீடு X க்குப் பின்னும், Y க்கு முன்னும் வரும்போது, A ஆனது B ஆக மாறுகிறது என்பதைத் துல்லியமாகச் சுட்டுகின்றது.
எடுத்துக்காட்டாக:
- It. b > v /[உயிர்]__[உயிர்], என்பது பின்வருமாறு எளிமையாக்கப்படலாம்.
- It. b > v /V__V (இங்கே V ஏதாவது உயிரெழுத்தைக் குறிக்கும்.)
அதாவது b ஆனது, ஓர் உயிர் எழுத்துக்குப் பின்னும் (அடுத்தும்), அதே அல்லது வேறு ஓர் உயிரெழுத்துக்கு முன்னும் வருமாயின், v ஆக மாறும்.