ஒற்றுப் பிழைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒற்றுப் பிழைகள் என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். இது உரைநடையில் ஒரு சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கும். எனவே பொதுவாகத் தமிழில் ஒற்றுப் பிழைகள் இன்றி எழுதுவதே சிறப்பு ஆகும்.

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க ச த ப மிகும் விதவாதன மன்னே

என்ற நன்னூல் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் இயல்பாகவும் விதியின் படியும் உயிரெழுத்து வரும்பொழுது வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து மிகும். இது உயிரீற்றுப் புணரியல் எனப்படும்.[1]

சான்று

 1. இயல்பாக உயிரெழுத்து வரல்
கரும்பைக் கடி → இங்கு ப்+=பை ; எனவே உயிரெழுத்து இயல்பாக வந்துள்ளது.
 1. விதியின் படி உயிரெழுத்து வரல்
மரச் சட்டம் = மரம் + சட்டம்
மவ்வீறு ஒற்றொழிந்து உயிரீறு ஒப்பவும்

என்ற நன்னூல் விதிப்படி நிலைமொழியீற்று ம் கெட்டு மர+சட்டம் என்று தொக்கி நின்றது. இதன் பிறகு மேற்குறிப்பிட்ட விதியின் படி வல்லெழுத்து மிகும்.

வலிமிகும் இடங்கள்[தொகு]

 1. அப்படி, இப்படி என்னும் சொற்களின் பின் வலிமிகும்:- அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான், இப்படி + சொன்னார் = இப்படிச் சொன்னார்.
 2. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின:- பின் வலிமிகும். நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்.
 3. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்:- அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன். இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.
 4. இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்வரும் வலி மிகும்:- பையை + கொடு = பையைக் கொடு.
 5. நான்காம் வேற்றுமை உருபிற்கும் பின்வரும் வலிமிகும்:- சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச் சென்றான்.
 6. ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலிமிகும்:- தை + திங்கள் = தைத் திங்கள் தீ + பற்றியது = தீப் பற்றியது
 7. 'க்கு', 'ச்சு', 'ட்டு', 'த்து', 'ப்பு', 'ற்று' என முடியும் சொற்களின் (வன்றொடர்க் குற்றியலுகரம்)பின் மிகும்:- எடுத்துக்காட்டு, நச்சுப் புகை, தட்டுப்பாடு, பருப்புக் கூட்டு, மாற்றுச் சேலை.
 8. 'ங்கு', 'ஞ்சு', 'ண்டு', 'ந்து', 'ம்பு', 'ன்று' என முடியும் சொற்களின் (மென்றொடர்க் குற்றியலுகரம்) பின் பெயர்ச்சொல் வந்தால் மிகும் :- குரங்குத் தலை, கன்றுக் குட்டி, அன்புக் கரங்கள், இரும்புத் திரை, கூண்டுக் கிளி; வினைமுற்று வந்தால் மிகாது.[2]

வலிமிகா இடங்கள்[தொகு]

 1. எழுவாய்த் தொடரில் வலிமிகாது:- குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.
 2. வினைத் தொகையில் வலிமிகாது:- விளை + பயிர் = விளைபயிர்
 3. உம்மைத் தொகையில் வலிமிகாது:- செடி + கொடி = செடிகொடி
 4. அடுக்குத் தொடரில் வலிமிகாது:- தீ + தீ = தீ தீ
 5. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது:- நீர் + குடித்தான் = நீர் குடித்தான்.
 6. 'ங்கு', 'ஞ்சு', 'ண்டு', 'ந்து', 'ம்பு', 'ன்று' என முடியும் சொற்களின் (மென்றொடர்க் குற்றியலுகரம்) பின் வினைமுற்று வந்தால் மிகாது :- கரும்பு தின்றான், குரங்கு பார்த்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஒற்றுப்பிழைகள்
 2. 2.0 2.1 நற்றமிழ் இலக்கணம், சொ. பரமசிவம், பட்டுப் பதிப்பகம், 1990

வெளியிணைப்பு[தொகு]

 1. http://tyagas.wordpress.com/2009/09/20/hello-world/
 2. http://www.pudhucherry.com/pages/gram2.html
 3. http://www.pudhucherry.com/pages/gram3.html
 4. http://light-myothers.blogspot.com/2009/11/blog-post.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றுப்_பிழைகள்&oldid=2396139" இருந்து மீள்விக்கப்பட்டது