ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்
நூல் பெயர்:ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரை
துறை:சமயம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:viii +160
பதிப்பகர்:வானதி பதிப்பகம்,
13 தீனதயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2002
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் கல்கி இதழில் 1995 ஆம் ஆண்டு ஆகத்து முதல் கிழமைதோறும் தொடராக எழுதப்பட்ட 21 கட்டுரைகளின் தொகுப்பாகும்.[1] இக்கட்டுரைகள், பொறுக்கு மணியாகச் சில தலங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் திருத்தலச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்திச் சிறப்பு இவற்றோடு ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் அண்மைக் காலத்து வள்ளலார், பட்டினத்து அடிகள், கண்ணதாசன் உட்பட பலரும் பாடிப் பரவியிருக்கும் இலக்கியச் சிறப்பையும் இணைத்து எழுதப்பட்டிருக்கின்றன.[2] இக்கட்டுரைகளின் சுருக்கம் வருமாறு:-

ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம்[தொகு]

திருச்சிக் குன்றம்

திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டையில் மட்டுவார்குழலி உடனுறை தாயுமானவர் கோவில்கொண்டிருக்கிறார். ஆனால் இக்கோவில் காலத்தால் முந்திய தாயுமானவர் பெயரால் அழைக்கப்படாமல் உச்சிப்பிள்ளையார் கோவில் என அழைக்கபடுகிறது. மகப்பேற்றை ஈன இருந்த பெண்ணுக்கு காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அவளுக்கு உடனிருந்து அவள் தாயால் உதவ முடியவில்லை. அப்பொழுது சிவனே அவள் தாயாக வந்து மகப்பேறு பார்த்தார் என்னும் தொன்மத்தையும் சாரமா முனிவர் கொணர்ந்த செவ்வந்தி மலரை உறையூர்ப் பராந்தக சோழன் கவர்ந்துகொண்டதால், தாயுமானவர் மேற்கு திசையில் இருக்கும் உறையூரை கடிந்துநோக்க அங்கே மண்மழை பெய்தது என்பது தொன்மம். இம்மலையைப் பற்றிய திருஞானசம்பந்தரின் பின்வரும் தேவாரப் பாடல் கற்பனை நயம்மிக்கது:-

நன்றுடை யானை தீய திலானை

நரைவெள் ளேறுடை யானை
உமையொரு பாக முடையானைச்

சென்றடை யாததிரு வுடையானைச்

சிராப்பள்ளிக் குன்று டையானைக்
கூறவென் னுள்ளம் குளிரும்மே!

சிங்கமும் வணங்கும் சிங்கவேள் குன்றம்![தொகு]

சிங்கக்குகையில் (அகோபிலம்) எழுத்தருளி உள்ள சிங்கவேள்

இரணியகபுசு பகலிலோ இரவிலோ, மண்ணிலோ விண்ணிலோ, உள்ளிலோ வெளியிலோ, மனிதராலோ விலங்காலோ, ஆயுதத்தாலோ நெருப்பாலோ தனக்கு மரணம் வரக்கூடாது என வரம் பெற்றவன். அதனால் தனக்கு மரணம் இல்லை என ஆணவம்கொண்டு தன்நாட்டு மக்கள் நாராயண மந்திரத்திற்குப் பதிலாக “ஓம் இரண்யாய நமஹ” எனத் தன்னைத் தொழும் மந்திரத்தையே ஓத வேண்டும் உத்தரவிட்டான். ஆனால் அவன் மகனும் திருமாலிடம் சரணகதி அடைந்தவனுமாகிய பிரகலாதன் மறுத்தான். இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தில் பகலும் இரவும் இணையும் அந்தி வேளையில், வாசல் நிலைப்படியில், மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மர் என்னும் சிங்கவேள் தனது விரல்நகத்தால் கொன்றார். ஒரே நேரத்தில் பகைவனான இரணியனுக்கு சூரியனாகவும் பக்தனான பிரகலாதனுக்கு சந்திரனாகவும் திகழ்ந்த சிங்கப்பெருமானை திருமங்கையாழ்வார் பின்வருமாறு பாடுகிறார்:

அங்கண் ஞால மஞ்ச அங்கோரளி அரியா யவுணன்
பொங்கா கம்வள் உகிரால் போழ்ந்த புனித னிடம்
பைங்கணா னைக்கொம் புகொண்டு பக்தி மையால் அடிக்கீழ்ச்
செங்கணா ளியிட்டி றைஞ்சும் சிங்க வேள் குன்றமே!

இச்சிங்கவேள் குன்றம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தின் சிரவேல் வட்டத்தில் நந்தியால் என்னும் ஊரிலிருந்து முப்பத்தேழு மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரில் கருடன் தவமிருந்ததால் கருடாத்திரி [3] என்றும் சோமுகனிடமிருந்து திருமால் வேதத்தை மீட்டதால் வேதாத்திரி [4] என்றும் இரண்யவதம் நிகழ்ந்ததால் வீரஷேத்திரம் என்றும் ஆச்சரியமான குகை இருப்பதால் அகோபிலம் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இங்கே பாவநாசினி புண்ணிய தீர்த்தம், இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம் என்னும் ஐந்து நீர்நிலைகள் உள்ளன. இங்குள்ள குடைவரைக் கோயிலில் செஞ்சு லட்சுமி உடனுறை உக்கிர நரசிம்மர் எழுதருளி உள்ளார். இங்கே பின்வரும் பதினொரு நரசிம்மச் சிலைகள் இருக்கின்றன:

  1. காரஞ்ச நரசிம்மர்
  2. ஸ்தம்ப நரசிம்மர்
  3. ஜ்வாலா நரசிம்மர்
  4. கார்கோட நரசிம்மர்
  5. சத்தரவட நரசிம்மர்
  6. யோக நரசிம்மர்
  7. பாவன நரசிம்மர்
  8. பார்கவ நரசிம்மர்
  9. மாலோல நரசிம்மர்
  10. பிரஹ்லாத நரசிம்மர்
  11. யோகானந்த நரசிம்மர்

எமனை உதைக்கலாம் வாருங்கள்![தொகு]

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

பதினாறு வயதே நிரம்பிய மார்க்கண்டேயனை காலன் கைப்பற்ற வருகிறான். மார்க்கண்டேயன் சிவனைச் சரணடைகிறான். அவனுக்காக காலனை சிவன் கொன்றார். அதனால் அவர் காலசம்ஹார மூர்த்தி என அழைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தரங்கபாடிக்கும் சீர்காழிக்கும் இடையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருக்கடையூர் என்னும் திருக்கடவூர் ஆகும். இது வீரட்டானம் என்னும் வீரவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களில் ஒன்றாகும். பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதக்குடம் இறுகிய லிங்கம் இவ்வூரில் அமைந்திருப்பதால் இத்தல மூர்த்திக்கு அமிர்தகடேசுவரர் என்னும் கலயநாயனார் எனப் பெயர். அவருக்கு குங்கிலியப் பணி செய்த குங்கிலியக்கலய நாயனார், உய்யவந்த தேவர் ஆகியோர் பிறந்ததும் இவ்வூரே. பிரமனுக்கு ஞானத்தின் வரம்பு மோனம் என்பதை சிவன் உணர்த்திய பொழுது வில்வம் முளைத்ததால், இவ்வூருக்கு வில்வாரண்யம் என்றும் பெயர். தமிழில் வில்வங்காடு என்பர். அங்குள்ள அம்பிகையை வழிபட்டுப் பாடப்பட்ட பாடல்களே அபிராமி அந்தாதி ஆகும். பாற்கடல் நஞ்சை அருந்திய சிவனது கண்டத்தில் தன்கையை வைத்து அந்நஞ்சை அமுதாக்கியவள் இவ்வூர் அபிராமி என்கிறது அபிராமி பட்டர் எழுதிய அந்தாதி. அப்பாடல் வருமாறு:

பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
மனோண்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய
அம்பிகை அம்புயமேல்
திருந்திய சிந்தரி அந்தரி
பாதமென் சென்னியதே!

நாறும் பூ நாதரே[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றாங்கரையில் அமைந்திருக்கிறது திருப்புடைமருதூர் என்னும் சிற்றூர். மருத மரத்தின் புடை [5] ஒன்றில் மருதீசுவரர் என்னும் சிவலிங்கம் அமைந்திருந்து என்னும் தொன்மத்தின் அடிப்படையில் திருப்புடையை உடைய மருதமரம் இருக்கும் ஊர் என்பதன் சுருக்கமாக திருப்புடை மருதூர் என அழைக்கப்படுகிறது. இதனை தென்திசையில் இருக்கும் காசி என்னும் பொருளில் தட்சிணகாசி [6] என வடமொழியில் அழைப்பர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இங்குள்ள கோமதி அம்மை உடனுறை மருதீசுவரர் என்னும் நாறும்பூநாதர் கோயிலுக்கு ஐந்து சுற்றுகள் உண்டு. மூன்றாவது சுற்றில் கோபுரம் அமைந்திருக்கிறது. கோபுரத்தின் உட்சுவரில் உள்ள ஓவியங்களும் மரச்சிற்பங்களும் கலைவரங்கள்.

தேவகுருவின் ஆசியை இழந்த இந்திரன், பிரம தண்டத்தைப் பிந்தொடர்ந்து இங்கு வந்து மருத மரத்தின் பொந்தில் இருந்த மருதீசுவரரை வணங்கினான். அவனைத் தேடிவந்த இந்திராணியும் அவரை வணங்கி நதிக் கரையில் மோட்சம் பெற்றனர். அதனால் இந்நதிநீருக்கு சுரேந்திர மோட்ச தீர்த்தம் என்கிறது இத்தலபுராணம்.

ஆற்றின் மறுகரையில் நடந்துவந்த கருவூர் சித்தர், இக்கரைக்கு வர இயலாவண்ணம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. அதனால் இத்தல இறைவனின் பெயரை அறியாத சித்தர் இறைவன் இருக்கும் இடத்தில் உள்ள மருதமரத்துப் பூக்களின் நாற்றத்தை நுகர்ந்து “நாறும் பூ நாதரே” என அழைத்தார். தன் பக்தன் தன்னை எப்பெயர் ஈந்து அழைத்தாலும் அப்பெயருடையவராக மாறிவிடும் இறைவன், கருவூராருக்கு உதவினார். இதனால் மருதீசுவரர் அந்நாள் முதல் நாறும்பூநாதர் என அழைக்கப்பட்டார். கருவூரின் குரலை இடப்பக்கம் சாய்ந்து செவிமடுத்ததால் இங்குள்ள சிவலிங்கம் 15 பாகை அளவு இடப்பக்கம் சாய்ந்து இருக்கிறது. இக்கதையை பட்டினத்தார் பின்வருமாறு பாடுகிறார்:-

தான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின்கழலை நம்பினேன்
ஊன்சாயும் சென்ம மொழிந்திருவாய் கருவூரா னுக்காய்
மான்சாயும் செங்கை மழுவலம்சாய் வளைந்த கொன்றை
தேன்சாய நல்லநல்ல திருமேனி சாய்ந்தசிவக் கொழுந்தே!

மடிமீதிருக்கும் மலைவாசி![தொகு]

பொதினி என்னும் பழநிமலை

பழநி மலையில் பல்வேறு சித்தர்களின் கால்பட்டதால் அம்மலை சித்தன் வாழ்வு எனப்படுகிறது. இங்கு அடங்கிய உள்ள போகர் என்னும் சித்தரின் தலைவர் சித்தநாதன் எனப்படுகிறார். இவர் ஒன்பது நஞ்சுகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய சிலையான தண்டபாணி இவ்வூரில் உறையும் இறைவர் ஆவார். இவரை சங்க இலக்கியம் கடியுண் கடவுள் என்கிறது. புதிதாக விளைந்த நெல்லை தைப்பூச நாளில் உழவர்கள் காவடியாகச் சுமந்துவந்து படைக்க, முருகன் அவற்றை கடித்து உண்டு பார்ப்பார் என்பதால் இப்பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது. அவ்வழக்கின் தொடர்ச்சியாக இன்றும் பக்தர்கள் தைபூச நாளன்று பாதயாத்திரையாக வந்து முருகனைத் தொழுகிறார்கள்.

அகத்தியர் ஆணைப்படி சிவகிரி, சத்திகிரி என்னும் இருமலைகளையும் காவடியில் வைத்து எடுத்துவந்த இடும்பன், இளப்பாற இங்கிருந்த நெல்லிக்காட்டில் வைத்தான். சிவகரியில் உள்ள குரா மரத்தடியில் குமரன் அமர, இடும்பனால் தனது காவடியைத் தூக்க முடியவில்லை. போருக்கு வந்த இடும்பனை, முருகன் வதைத்தார். அவனை இடும்பியின் வேண்டுகோளுக்கு இணங்கி இடும்பனை முருகன் உயிர்பித்தார். இடும்பனைப் போலவே தன்பக்தர்கள் காவடி சுமந்துவர, இடும்பன் அவ்வூருக்கு காவல் தெய்வமாக இருக்குமாறு முருகன் பணித்தார் என்பது தொன்மம். இவர் உறையும் கோயிலைக் கட்டியவர் சேரமன்னன் என்கிறது இவ்வூர் தலபுராணம்.

கைலாயத்தில் நாரதர் கொண்டுவந்த பழத்தால் ஏற்பட்ட பிரச்சனையில், சினம்கொண்ட முருகன் இங்குவந்து குடியேற, “ஞானப் பழம் நீ” என பார்வதி அழைக்க இத்தலம் பழநி ஆனது என்கிறது இவ்வூரின் தலபுராணம். பழனம் என்னும் வயல்கள் நிறைந்தது பழநி என்பது அறிஞர்கள் கருத்து. பொதினி என்னும் பெயர் மருவி "பழநி" ஆனது என்கிறது ஓர் ஆய்வு. நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் இவ்வூரை திருவாவினன்குடி எனக் குறிக்கிறார். பழநி மலை என்பதை "பழ நிமலை" எனப் பிரித்து குற்றமற்ற பார்வதியின் மடியில் பிறந்த பெருமானே முருகன் எனப் பொருள் கூறுவார் கிருபானந்த வாரியார்.

இவ்வூரைப் பற்றி பழநிப் பிள்ளைத் தமிழ், பழநித் திருவாயிரம் ஆகிய சிற்றிலக்கியங்கள் உட்பட 1274 பாடல்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியிருக்கிறார். பழனாபுரி மாலை உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களை மாம்பழக்கவிச்சிங்க நாவலர் பாடியுள்ளார். பாம்பன் சுவாமிகள் என்னும் குமரகுருதாச சுவாமிகள் தான் எழுதிய குமாரஸ்தவத்தில் பழநியைப் பற்றி பத்து சருக்கங்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பழநியைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் திருவேரகத்தைப் பற்றிய திருப்புகழிலிலும் பழநியைப் பற்றிப் பாடிய திருப்புகழ் பாடல் வருமாறு:

அருணதள பாதபத்ம மதுநிதமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த அயில்வீரா!
அதிசயமநே கமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிரு வேரகத்தின் முருகோனே!

'கோழிக்குத் தெரிந்தது கோமதிக்குத் தெரியாதா?’[தொகு]

சங்கர நயினார் கோயில்

பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் எனப் பெயர் பெற்ற சங்கரன்கோவில் என்னும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு கோமதி அம்மன் உடனுறை சங்கரநயினார் கோயில் கொண்டுள்ளார். இவர் மனோன்மணி என்னும் சக்தியையுடைய சங்கரலிங்கர் எனவும் புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். அக்கோயிலுக்கு ஒன்பது நிலைமாடங்களும் 125 அடி உயரமும் உள்ள ராஜகோபுரத்தை 900 ஆண்டுகளுக்கு முன்னர் உக்கிரமப் பாண்டியர் கட்டியிருக்கிறார். கோயிலின் கிழக்குப் பிரகாரத்தில் வலது தூணில் உக்கிரமப் பாண்டியன் சிலையும் இடது தூணில் உமாபதி சிவாச்சாரியார் சிலையும் உள்ளன. மகாமண்டபத்தைச் சுற்றி சிற்பச் செறிவுமிக்க சிறுசிறு உருவங்கள் உள்ளன.

சங்கன், பதுமன் என்னும் பாம்பு அரசர்கள் இருவர் அரி பெரியவரா, அரன் பெரியவரா எனச் சண்டையிட்டனர். அவர்களுக்கு அரியும் அரனும் ஒன்றே என விளக்க சங்கரரும் நாராயணரும் ஒற்றை உடம்பில் தோன்றினர். அவரே சங்கர நாராயணர் என இவ்வூரில் வணங்கப்படுகிறார். இறைவனின் சங்கரநாராயணத் தோற்றத்தைக் காண விரும்பிய பார்வதி ஆடி மாதத்தில் இவ்வூரில் தவம் புரிந்தாள். அதுவே ஆடித் தபசாக இப்பொழுதுக் கொண்டாட்டப்படுகிறது. பார்வதி தவமிருக்கும் பொழுது இவ்வூரில் தேவர்கள் புன்னை மரங்களாக நின்று பூமாரிப் பொழிந்தனர். தேவப்பெண்கள் பசுவாக வந்து பால்மாரிப் பெய்து அம்மையப்பனை வழிபட்டனர். இவ்வாறு என்னும் பசுகள் சூழ அம்மையும் அப்பனும் இருப்பதால் ஆவுடையம்மன், ஆவுடையப்பன் என இறைவியும் இறைவனும் அழைக்கப்படுகின்றனர். கோ என்னும் பசு சூழ இருந்ததால் அம்மை கோமதி அம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவன், இறைவி, தேவர், தேவப்பெண்கள் என கைலாயத்தில் உள்ள அனைவரும் இங்கு எழுந்தருளி இருப்பதால், இவ்வூர் பூகைலாயம் எனப்படுகிறது என்கிறது இவ்வூர் தலபுராணம்.

கோழி தனது இறகுகளுக்குள் தன் குஞ்சுகளை மறைத்து, கழுகிடமிருந்து அவற்றைக் காப்பதுபோல, எமனிடமிருந்து கோமதி அம்மை தம்மைக் காக்க வேண்டும் என்கிறார் அழகிய சொக்கநாதர் பின்வரும் பாடலில்:

கேடாவரும் நமனைக்கிட் டவரா தேதூரப்
போடாயென் றோட்டியுன்றன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்
கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.

அன்புக்கு எதற்கு அளவு?[தொகு]

திருவையாற்றில் உள்ள ஐயாரப்பன் திருக்கோயில்

வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகளும் பாயும் இடம் ஐயாறு என்பது புவியியல். சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, நந்தி தீர்த்தம் ஆகிய ஐந்து தெய்விக நதிகளும் கலக்கும் இடம் ஐயாறு என்பது தொன்மம். இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஆகும். ஐயாறு பாயும் இடத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு ஐயாறப்பன் என்பது பெயர். இவரை வடமொழியில் பஞ்சநதீஸ்வரர் எனவும் மணிபிரளவத்தில் பஞ்சநதிவாணர் எனவும் அழைப்பர். அம்மைக்கு அறம்வளர்த்தநாயகி எனப் பெயர். இவரை வடமொழியில் தர்மசம்வர்த்தினி என்பர். அஞ்சலை, உலகுடைநாச்சியார் என்பன அவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள். இவ்வம்மனையும் அய்யனையும் இந்திரன், வாலி, இலக்குமி ஆகியோர் வழிபட்டனர் எனபதும் சுந்தரும் சேரமான் பெருமாள் நாயனாரும் அக்கரையில் உள்ள திருக்கண்டியூரிலிருந்து இக்கரையில் உள்ள திருவையாறுக்கு வருவதற்காக பெருக்கெடுத்து ஓடிய காவிரி நீர் சுவராக நின்று பாதை விட்டது என்பதும் தொன்மம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தத்தம் தேவராங்களும் மாணிக்கவாசகர் தமது திருவாசகத்திலும் இவ்விடத்தைப் பற்றிப் பாடியுள்ளனர்.

பங்குனி மாதத்தில் திருக்கண்டியூரார் நகைகள் வழங்க, திருப்பழனத்தினர் பழங்கள் வழங்க, திருப்பூந்துருத்தியினர் பூக்கள் வழங்க, திருச்சோற்றுத்துறையினர் சோறு வழங்க, திருநெய்தானத்தினர் நெய் வழங்க, திருவேதிக்குடியிலிருந்து வேதியர் வர திருமழப்பாடியில் நந்திதேவருக்கு நடைபெறும் திருமணத்தை நடத்திவைக்க ஐயாறப்பன் கிளம்பும் நந்திதேவர் திருமண விழாவும் சித்திரைத் திருவிழாவும் இவ்வூரின் பெருவிழாகள்.

திருநாவுக்கரசருக்கு ஆடி அம்மாவாசை நாளில் கையிலைநாதர் நேரில் காட்சிதந்து முக்தி அளித்தார் என்னும் தொன்மத்தின் அடிப்படையில் ஆடி அம்மாவாசை இன்றும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு கையிலைநாதரைக் கண்டதாகக் கருதி நாவுக்கரசர் பாடிய பாடல்களில் ஒன்று வருமாறு:

வளர்மதி கண்ணி னானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவுப டாததொர் காலம்
காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்
அளவுப டாத்தொர் அன்போடு
ஐயாறடை கின்ற போது
இளமனம் நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்
கண்டேன வர்திருப் பாதம்;
கண்டறி யாதன கண்டேன்.

இயற்கை நடத்தும் இறைவழிபாடு![தொகு]

அழகர் கோவில்

திருமால் இருக்கும் வைணவத் திருத்தலமான திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவில் உள்ள அழகர் மலை, முருகன் இருக்கும் கெளமாரத் திருத்தலமான பழமுதிர்சோலையாகவும் திகழ்கிறது. இங்குள்ள திருமாலுக்கு அழகுமலையான் எனப்பெயர். இதனை சமசுகிருதத்தில் சுந்தரராஜப் பெருமாள் என்பர். இவரை பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.

சிலப்பதிகாரம் இங்குள்ள பொய்கையை சரவணம் என்கிறது. பரிபாடல், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகிய இலக்கியங்கள் இங்குள்ள முருகனையும் சிலம்பாறு உள்ளிட்ட இயற்கையையும் போற்றிப் புகழ்கின்றன. அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பின்வருமாறு பாடுகிறார்:

அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
இருநிலம்மீதி லெளியனும்வாழ வெனதுமுன்னோடி வரவேண்டும்
மகபதியாகி மருவும்வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே
வனமுறைவேடன் அருளிய்பூசை மகிழ்கதிர்காம முடியோனே
செகுகணசேகு தகுதிமிதோதி திமியெனவாடும் மயிலோனே
திருமளவான பழமுதிர்சோலை மலைமிசைமேவு பெருமாளே!

அற்புதம் நிகழ்த்தும் கற்பக விநாயகர்![தொகு]

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில்

விநாயகர் நடனமாடியதைக் கண்டு எள்ளல் சிரிப்பை உதிர்த்தான் சந்திரன். அதனை அறிந்த விநாயகர், அவன் ஒவ்வொரு கலையாகத் தேய வேண்டும் என சாபமிட்டார். சந்திரன் மன்னிப்புக் கோர, வளர்பிறைச் சதுர்த்தியில் அவனைக் காண்போர் வீண்பழியிலிருந்து விடுபடுவர் என விநாயகர் விமோசனம் அழித்தார். அந்நாளை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பது தொன்மம்.

சிறுத்தொண்ட நாயனார், பரஞ்சோதி என்னும் பெயரினராக நரசிம்மவரம பல்லவன் படையில் தளபதியாக இருந்தார். அவர் வாதாபிப் போரில் வென்று திரும்பி வரும்பொழுது சாளுக்கிய நாட்டில் இருந்து விநாயகர் சிலையொன்றை எடுத்துவந்தார் என்பது வரலாறு. அதனாலேயே விநாயகர் கோவிலில் புதுச்சிலை வைக்காமல் மற்றொரு கோயிலிருந்து திருடி வந்து வைக்கும் வழக்கு ஏற்பட்டது என்பது ஆய்வு. இவ்வாறு திருட முடியாதவாறு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிள்ளையார் உருவம் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. இப்பிள்ளையாருக்கு பின்வரும் பத்துப் பெயர்கள் உள்ளன:

  1. தேசி விநாயகர்
  2. கற்பக விநாயகர்
  3. கற்பக மூர்த்தி
  4. கற்பகப் பிள்ளையார்
  5. வரத கணபதி
  6. கற்பகக் களிறு
  7. கணேசன்
  8. கணேச புரேசன்
  9. மருதங்கூர் அரசு
  10. மருதங்கூர் ஈசன்

குடைவரைக் கோயிலில் திருவீங்கைக்குடி மகாதேவர் என்னும் சிவனும் சிவகாமி என்னும் அம்மையும் உள்ளனர். எடுத்துக்கட்டப்பட்ட கோயிலில் மருதங்குடி நாயனார் என்னும் சிவனும் வாடாமலர்மங்கை என்னும் அம்மையும் உள்ளனர்.

இங்குள்ள தெய்வங்கள் மீது, தேசி விநாயகப்பிள்ளையார் ஒருபா ஒருபது, வாடாமலர்மங்கை பதிகம், மருதீசர் பதிகம், கற்பகவிநாயகர் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய சிற்றிலக்கியத்தை ராய. சொக்கலிங்கம் பாடியுள்ளார். கண்ணதாசன் பின்வரும் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைப் பாடியிருக்கிறார்:

அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தித் தெய்வக்
களஞ்சியம் இருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை கண்ட உண்மை

சித்தம் கவர்ந்த சித்தர் மலை![தொகு]

சித்தேசுவரர் கோயில்

திருமூலர் குரு; காலாங்கி நாதர் சீடர். திருமூலர் இளைஞர்; காலாங்கி நாதர் கிழவர். ஒருநாள் கருகிக்போன உணவை உண்ட காலாங்கிநாதக் கிழவர், திருமூலரைவிட இளைஞராகி விட்டார் என்பது தொன்மம். இந்நிகழ்வு நடந்தாதாக் கருதப்படும் இடம், சேலத்திற்கு மேற்கே 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இளம்பிள்ளை என்னும் ஊர் ஆகும். கலிங்கத்தில் இருந்து வந்த்தாகக் கருதப்படும் இக்காலாங்கிநாதர் சமாதி அடைந்த திருக்கோயிலே சித்தர்மலை எனப்படுகிறது. இது கஞ்சமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்கு சித்தேஸ்வரர் எனப் பெயர்; கஞ்சமலை சித்தர் எனவும் அழைப்பர். கோயிலைச் சுற்றி பொன்னி ஆறு சித்தர் சிற்றருவி ஓடுகிறது. இம்மலை பற்றிய பழம்பாடல் வருமாறு:

அவனிதனில் அட்டாங்கம் அணிமாதி சித்தியால்
அங்கங்கு விளையாடியே
அருமைக்கரு முகில்சூழும் அழகான கஞ்சமலை
அதில்வச மாக எண்ணி
கவின்மிக்க கருநெல்லி கருவாழை கருநொச்சி
கருங்காடு வாசமாகி
காசினியில் ஏற்றமிகு கஞ்சமலை மேற்கதாய்
கருணையுடன் வில்வ மருகில்
பலவினைகள் அழிவுற பலர்கண்டு தொழுதெழ
பட்சம்வைத் தாள்வதற்கு
பாலருடன் கூடிகுழ லூதிவிளை யாடியடி
பட்டிங்க மர்ந்த தேவா
தவமுனிவர் பாமரர்கள் அமாவாசைக் கூட்டமாய்
தாந்தொழுகும் காந்தல்நதி
வாழ்சத்து சித்தான பரமானந்த தெய்வமே
சித்தீஸ்வரக் கடவுளே!

கொக்கின் கீழே குயில்![தொகு]

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் - 1811ஆம் ஆண்டைய ஓவியம்

அட்சம் என்னும் வடசொல்லுக்கு விழி என்று பொருள். எனவே கரியவிழிகளை உடைய அம்பிகையை கருவிழியாள், கருங்கண்ணி எனவும் பெரியவிழிகளை உடைய அம்பிகையை பெருவிழியாள், முட்டைக்கண்ணி எனவும் கயலைப் போன்ற விழிகளை உடைய அம்பிகையை கயல்விழியாள், கயற்கண்ணி எனவும் காமம்துலங்கும் [7] விழிகளை அம்பிகையை காமவிழியாள் எனவும் அழைக்கிறோம். அவர்களை வடமொழியில் முறையே நீலாயதாட்சி, விசாலாட்சி, மீனாட்சி, காமாட்சி என அழைப்பர். இவர்களுள் காமாட்சி என்னும் காமவிழியாள் கோயில் கொண்டுள்ள இடம் காஞ்சிபுரம் ஆகும். அங்குள்ள சிவாலயங்களில் அம்மன் கோவில் கிடையாது. அனைத்துச் சிவாலயங்களுக்கும் காமாட்சியே அம்மன்; காமாட்சி அம்மன் கோயிலே அனைத்துச் சிவாலங்களுக்கும் அம்மன் கோயில். கண்களை இழந்த சமயக் குரவர் சுந்தரர் காஞ்சி காமாட்சி கோயிலுக்கு வந்து தனது இடதுகண் பார்வையைப் பெற்றார் என்பது தொன்மம். ஆகாசபூபதி என்னும் அரசர் காலத்தில் காஞ்சியில் காமாட்சி பொன்மழை பெய்வித்தார் என்பது மற்றொரு தொன்மம். இங்கு, குயில் போன்ற குரல்வளம் உடைய காமாட்சி தன்மீது கோபம்கொண்ட சிவனை, கோபத்தைத் துறந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கொக்கு என்னும் மறுபெயருடைய மாமரத்தின் கீழிருந்து தவம் செய்தார் என்னும் தொன்மத்தை அடியாகக் கொண்டு, காளமேகப் புலவர் பின்வருமாறு பாடுகிறார்:

மாக்கைக் கிரங்கும் குருகும்
வளர்சக் ரவாகப் புள்ளும்
தாக்கச் சாபம் குழைந்த
தெவ்வா றுசக தலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருவறச்
சாலையி லன்ன மிட்டுக்
காக்கைக் கொருகொக் கின்கீ
ழிருக்கும் கருங்குயிலே

குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா![தொகு]

பேரருவி

மூன்று சிகரங்களை உடைய மலை இருக்கும் ஊர் என்பதனால் திரிகூடமலை என அழைக்கப்படும் குற்றாலத்தில் சிவன் குற்றாலநாதராக வீற்றிருக்கிறார். அவருகு திரிகூடநாதர் என்னும் பெயரும் உண்டு. குழல்வாய் மொழியம்மை என்பது அம்மனின் பெயர். தேனருவி, செண்பக அடவி என்னும் இடத்தில் செண்பக அருவி, பேரருவி, ஐந்தருவி என்னும் அருவிகள் இங்குள்ளன. மூலிகை வளம் உடைய குற்றால அருவியில் கொட்டும் நீர் நேரே தரையில் விழாமல், இடையில் உள்ள பாறையில் விழுந்து பொங்கி பின்னர் தரையில் விழுவதால் அவ்விடம் பொங்குமாங்கடல் எனப்படுகிறது. குறும்பலா இவ்வூர் கோயிலின் தலமரம். அப்பலாவைப் பற்றி திருஞானசம்பந்தர் குறும்பலாப் பதிகம் என்னும் செய்யுளை இயற்றி இருக்கிறார். வேதமே குறும்பலாவாக விளைகிறது என்பது தலபுராணம். இங்குள்ள கோயில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது திருமாலின் கோயிலாக இருந்ததாகவும் அகத்தியர் வைணவர் வடிவில் வந்து திருமால் சிலையின் மீது கை வைத்து குறுக்கி அதனை சிவலிங்கம் ஆக்கிவிட்டார் என்று ஒரு கதை உண்டு. சிவன் நடனமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ஒன்றான சித்திரசபை இங்கே இருக்கிறது. கங்கை வந்தபுரம், முனிக்குறுகும் பேரூர், வேதசக்தி பீடபுரம், வேதம் பூசித்தபுரம், ஞானம் பாக்கம், நன்னகரம், திருநகரம், விசேடபுரம், சிவமுகுந்தபுரம், முத்துவேலி, தேவகூடபுரம் என்பன குற்றாலத்தின் வேறு பெயர்கள். இவ்வூர் இறைவன் மீது மாணிக்கவாசகர் பாடிய திருவாசப் பாடல்:

உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பதுவு மினியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.

கவலைக் கடலும் கருணைக் கடலும்![தொகு]

திருச்செந்தூர் கோயில்

அலைவாய், திருச்சூர் அலைவாய் என அழகுத்தமிழில் அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் குடிகொண்டிருக்கும் ஆறு படைவீடுகளில் ஒன்று. சூரபதுமன் என்னும் ஆணவ அசுரனை முருகன் கொன்ற இடம் இது என்பது தொன்மம். அவ்வாறு கொன்ற வெற்றியைக் கொண்டாட ஜயாபிஷேகம் என்னும் வெற்றி முழுக்காடிய ஜயந்திபுரம் என்னும் பெயர் செந்தி என்றாகி செந்தில் ஆனது என்பது வடமொழி அன்பர்களின் கருத்து. இங்குள்ள மூலவரான செந்திலாண்டவரை வடமொழியில் ஜெயந்திநாதர் என்பார். உற்சவர் என்னும் உலாநாதருக்கு ஆறுமுக நயினார் எனப் பெயர். கருவறையில் மூலவருக்குப் பின்னால் வடமேற்கு மூலையில் பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன. மூலவர் ஒரு முகத்துடனும் அபயம், வரதம், பூ, ஜெபமாலை ஆகியவற்றை ஏந்திய நான்கு கைகளுடனும் கிழக்கு நோக்கி நிற்கிறார். இங்கு மாசி, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாகள் நடைபெறுகின்றன. தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி ஆறுநாள்கள் விரதம் இருந்த பின்னர் நடைபெறும் சூரசம்காரம் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பெருந்திருவிழா ஆகும். இத்தலத்தைப் பற்றி, “திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎய்” என அகநானூறும் “வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்” என புறநானூறும் “கயிலை மலையனைய செந்தில்பதி” என அருணகிரிநாதரின் திருப்புகழும் “பூமேவு செங்கமலம்” என குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவும் பாடுகின்றன. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலைப் பாடிய பகழிக் கூத்தர் என்னும் வைணவர்,

மெள்ளத் தவழ்ந்து குறுமூரல் விளைத்து மடியின் மீதிருந்து
விம்மிப் பொதுமி முகம்பார்த்து….”

என குழந்தை முருகன் அழும் காட்சியை வர்ணிக்கிறார்.

உடன்பிறப்பான உத்தம தெய்வம்![தொகு]

பாதிரி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட சிவாலயம் அமைந்துள்ள ஊர் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இவ்வூர் கடலூருக்கு மிக அருகில் உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு தோன்றாத்துணை நாதர் எனப்பெயர். இவரைப் புகழ்ந்து, ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தம் பாடிப் போற்றி உள்ளனர். திருநாவுக்கரசர் சிவனைத் தன் உடன்பிறப்பாய்க் கண்டு பாடிய பாடல்களுள் ஒன்று வருமாறு:

ஈன்றாளுமா யெனக்கெந்தை யுமாயுடந்தோன் றினராய்
மூன்றாயுல கம்படைத்து கந்தான்மனத் துள்ளிருக்க
ஏன்றானிமை யவருக்கன் பந்திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத்துணை யாயிருந்தனன் தனடியோங் களுக்கே

பொன்மேனி காண்போம்![தொகு]

உலகலந்த பெருமாள் கோயில்

கோபாலன் இருக்கும் ஊர் திருக்கோவலூர். கடையெழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, சைவநெறிநின்ற மெய்ப்பொருள் நாயனார், சுந்தரரைப் புரந்த நரசிங்க முனையரையர், பாரி மகளிரை மணந்த தெய்வீகன் ஆகியோரால் ஆளப்பட்ட ஊர் இது. இங்குள்ள கபிலக்கல்லில்தான் கபிலர் தீப்பாய்ந்து இறந்தார் என நம்பப்படுகிறது.

இவ்வூரில் எழுந்தருளி இருக்கும் திருமாலுக்கு பூங்கோவல் நாச்சியார் உடனுறை ஆயனார் எனப் பெயர். உலகளந்த பெருமாள் என்னும் திரிவிக்ரமன் என்றும் பெயர். உற்சவ நாச்சியாருக்கு புஷ்பவள்ளி நாச்சியார் எனப் பெயர். இத்திருமாலின் வழக்கத்திற்கு மாறாக வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் இடம்பெற்றுள்ளன. இத்திருமேனி மரத்தால் ஆனது. இவ்வூரில்தான் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் சந்தித்தனர் என்பது தொன்மம். அப்பொழுது பேயாழ்வார் பாடியதாகக் கூறப்படும் வெண்பா:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு
மருக்கண்கண ணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.

அவன் புகழ்பாட அவன் அருள் வேண்டும்![தொகு]

மால் என்னும் மாயையும் நான்முகன் என்னும் ஒருமுகச் சிந்தனை இன்மையும் முடியையும் அடியையும் காணமுடியாது என்பதனை எடுத்துரைக்கும் இடம் திருவண்ணாமலை ஆகும். உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் இங்கு கோயில் கொண்டுள்ளார். அண்ட முடியாத மலையான அவரை அருணாசலேவரர் என்பர் வடமொழியில். இவர் மீது நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தடிகள், மாணிக்கவாசகர், அப்பர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், எல்லப்ப நாவலர், ரமணர், அருணகிரிநாதர் என பற்பல அறிஞர்கள் எண்ணற்ற இலக்கியங்களைப் படைத்துள்ளனர். அவற்றுள் அருணகிரிநாதர் பாடிய பாடல் ஒன்று:

இரவுபகல் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்
திறமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞான
அரனருள்சத் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே!

”காவிரிக் கரையில் கடல்நிறக் கடவுள்”[தொகு]

திருவரங்கர் கோயில் கோபுரம்
குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தெந்திசை இலங்கை நோக்கி

திருமால் நெடுமாலாகப் பாம்பனையில் காவிரிக்கு நடுவில் உள்ள தீவில் படுத்திருக்கும் இடம் திருவரங்கம். ஏழு உலகமும் திருமாலுக்கு உரியது என்பதனை எடுத்துரைப்பதைப் போல இங்கு ஏழு பிரகாரங்கள் இருக்கின்றன. இங்குதான் கம்பன் தன்னுடைய இராம காதையை அரங்கேற்றினார். நாலாயிர திவிய பிரபந்தங்களும் இசையோடு பாடி ஆடும் அரையர் சேவை என்னும் நடனத்தை நாத முனியால் இவ்விடத்தில்தான் உருவாக்கப்பட்டது. இக்கோயிலின் நிர்வாகத்தைச் சீர்செய்த இராமானுசர், அவை சீராக நடக்கின்றனவா என்பதனைக் கண்காணிக்க அவர் இங்குள்ள மண்டபத்தில் எழுந்து அமர்ந்திருப்பதாக ஐதீகம்.

சிறீதேவி, பூதேவி ஆகியோர் திருமாலுடன் உறைய அரங்கநாயகி, உறையூர் சோழன் மகளான கமலவல்லி, குலசேகரன் மகள் சேர குலவல்லி, டில்லி பாதுஷாவின் மகளான துலுக்க நாச்சியார், சூடிக்கொடுத்த மலர்கொடியாகிய ஆண்டாள் ஆகிய நாச்சியார்கள் இங்கு எழுந்தருளி உள்ளனர்.

இக்குள்ள இறைவனை எவ்வாறு வழிபட வேண்டுமென பின்வரும் பாடலில் குலசேகரர் கூறுகிறார்:

காயாம்பு மலர்ப்பிறங்க லன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மனத்தூணே பற்றி நின்றென்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

தலமோங்கு கந்தவேளே![தொகு]

திருப்போரூரில் சிறீ முத்துக்குமார சுவாமி கோயில்கொண்டு இருந்தார். அந்நியப் படையெடுப்பின் பொழுது அவரைக் காக்க விரும்பிய சிலர், அவரை ஒரு வேப்ப மரத்தடியில் ஒளித்து வைத்தனர். அதன்பின்னர் ஒருநாள், பேரி செட்டியார் அன்னும் ஆயிர வைசிய மரபினைச் சேர்ந்த மாரி செட்டியார் முத்துக்குமாரரை வணங்க திருப்போரூர் கோயிலுக்கு வந்தார். மூலவரைக் காணாமல் திகைத்தார். அவரைப் புதைத்த இடத்தை அறிந்து, அவ்விடத்தில் தோண்டி அவரை எடுத்து தனது தோளில் சுமந்துகொண்டு சென்னைக்கு வந்தார். ஓரிடத்தில் அவரை நிறுவி கோயில் எழுப்பினார். அக்கோயிலே இன்று ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள ஶ்ரீ கந்தசுவாமி கோயில் என்னும் கந்தகோட்டம் ஆகும். அக்கோயிலுக்கு முன்னே சரவணப் பொய்கை என்னும் குளம் அமைத்தார். இக்கந்த கோட்டத்தின் மீது வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள் என்னும் குமரகுருபர சுவாமிகள், கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பலரும் பாடல்கள் புனைந்துள்ளனர்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா

என்னும் எதிர்மறைப் பாட்டிற்கு மாற்றாக பின்வரும் உடன்பாட்டுப் பாட்டை இராமலிங்கர் பாடியதும் இக்கந்தகோட்டத்தில்தான்:

ஒருமையுடன் நினதுதிரு மலரடிநினைக் கின்ற
உத்தமர் தமுறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப்புற மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெரு நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறிபிடித் தொழுகவேண் டும்மத மானபேய்
பிடியாதி ருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவேவேண் டுமுனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

ஆழ்வாரா? ஆண்டவரா?[தொகு]

குருகு என அழைக்கப்படும் நாரை, கோழி, குருக்கத்தி ஆகியன போன்ற பறவைகள் நிறைந்த ஊர் குருகூர். இது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. இவ்வூரை ஆண்ட சிற்றரசரான காரியருக்கும் அவர்தம் மனைவியார் உடையநங்கைக்கும் மகனாகப் பிறந்தவர் சடகோபன். சடம் போன்ற உலக மாயைக் கோபித்தவர் என்பது இப்பெயரின் பொருளாகும். இவ்வூரில் ஆதிநாத வல்லி உடனுறை ஆதிநாதர் கோயில் என்னும் திருமால் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலுக்குள் கைக்குழந்தையான சடகோபரை அவர் பெற்றோர் தூக்கிச் சென்றனர். அவர் அங்கிருந்த புளிய மரத்தின் பொந்திற்குள் புகுந்து பதினாறு ஆண்டுகள் தவமியற்றி நம்மாழ்வார் ஆனார் என்பது தொன்மம். இப்புளிய மரம் திருப்புளி ஆழ்வார் என அழைக்கப்படுகிறது. வேதம் தமிழ் செய்த வித்தகர், வகுள பூஷண பாஸ்கரர், உலகுய்யத் தோன்றிய குருநாதர் என்று புகழப்படும் குருக்கூர் சடகோபர் என்னும் நம்மாழ்வார் திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய பாசுரங்களைப் படைத்தார். இவர் வாழ்ந்த குருக்கூர் இவர் நினைவாக ஆழ்வார்திருநகரி என அழைக்கப்படுகிறது. இவரை தன் குருவாக ஏற்றுக்கொண்ட மதுரகவி ஆழ்வார்

இதுவோ திருநகரி ஈதோ பொருநை
இதுவோ பரமபதத் தெல்லை – இதுவோதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபர் ஊர்

என அவர் வாழ்ந்த ஊரைப்பாடி, பின்னர் சடகோபரையும் பாடி மகிழ்ந்தார்.

நம்மாழ்வாரும் மணவாள மாமுனியும் தோன்றிய இவ்வூரில் விழுந்த எச்சிலை உண்டு வாழ்ந்த நாய்க்கும் மோட்சம் கிடைத்ததாகக் கூறுகிறது பின்வரும் பாடல்:

வாய்க்கும் குருகைத் திருவீதி
எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரம பதமளித்தா
யந்த நாயோ டிந்தப்
பேய்க்கும் பதமளித் தால்பழுதோ
பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்கவி சொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!

கடவுள் அளவு கருணை காட்டுகிற கமலை![தொகு]

திருவாரூர் கோயில்

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட கோயிலை உடைய ஊர்களுள் ஒன்று திருவாரூர். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீரோடை ஐந்து வேலி எனப் பெரும் நிலப்பரப்பை உடைய பூங்கோயில் என அழைக்கப்படும் திருவாரூர் அல்லியங்கோதை உடனுறை தியாகராசர் கோயிலுக்குள் அசலேசுவரம், ஆடகேசுவரம், ஆனந்தேசுவரம், விசுவகர்மேசுவரம், சித்தீசுவரம், கமலாம்பாள் தியாகராசர் சந்நிதி எனப் பல கோயில்கள் உள்ளன. உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் “தியாகராசர்” ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு “கொண்டி” எனப் பெயர். தியாகராசருக்கு வலது பக்கத்தில் இருக்கும் பெட்டிக்குள் வீதிவிடங்கர் என்னும் மரகதலிங்கம் இருக்கிறது.

தியாகராசருக்கு தியாகப் பெருமாள், ஆடவரக் கிண்கிணிக் காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித் தோடழகர், தியாக விநோதர், கருணாகரத் தொண்டமான் என்னும் விருதுப் பெயர்கள் உள்ளன.

சிவாலயங்களில் நந்திதேவர் அமர்ந்த நிலையிலேயே காணப்படுவார். ஆனால் அவர் இங்கு நிற்கும் நிலையில் காணப்படுகிறார். அதனைக்கண்ட மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுந்தரரின் மனைவியிடம் சிவன் தூதாக நடந்து சென்றதை அறிந்து நந்தி, ஆலயத்தைவிட்டு வெளியேவரும் சிவன் உடனே தன்மீது அமர்வதற்கு ஏற்ப எப்பொழுதும் நின்ற நிலையில் இருப்பதாகக் கற்பனை செய்து தியாகராஜ லீலையில் இயற்றிய பாடல் வருமாறு:

பிணையடியார் குறைக்கிரங்கிப் பெருமான்நீ எழுந்தருளில்
துணையடிகள் கன்றமுனம் தூதுசென்றால் போலடையா(து)
அணைகுதியென் வெறிநிவர்ந்தென் றருள்நோக்கி நிற்பதுபோல்
இணையில்விடங் கப்பெருமா னெதிர்நிற்கும் மால்விடையே

உள்ளமே கோயில்; உடலே ஆலயம்[தொகு]

திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் என்னும் சிவபக்தர் தனது மனக்கண்ணில் சிவனுக்குப் கற்பனைக் கோயில் ஒன்றைக் கட்டினார். அதேவேளையில் காஞ்சியில் கைலாயத்திற்கு இணையான கைலாசநாதர் கோயில் என்னும் கற்கோயிலைக் கட்டினான் பல்லவ மன்னன். கற்பனைக் கோயிலுக்கும் கற்கோயிலுக்கும் ஒரேநாளில் திருக்குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டது. பூசலாரின் அன்பை உலகிற்கு அறிவிக்க விரும்பிய சிவன், விழா நாளிற்கு முந்தைய நாள் இரவில் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி, “நாளை திருநின்றவூரில் உள்ள எனது கோயிலுக்கு திருக்குட முழுக்கு நடைபெற இருப்பதால், நீ கட்டிய கோயிலின் திருக்குடமுழுக்கை வேறொரு நாளில் வை” எனக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த மன்னன், தான் கட்டிய கற்கோயிலின் திருக்குட முழுக்கை நிறுத்திவிட்டு திருநின்றவூருக்குச் சென்றான். ஆனால் அங்கு எந்தக் கோயிலும் இல்லை. இறுதியில் பூசலாரை அழைத்து அவர் கட்டிய கோயில் எங்கே என வினவ, அவர் மன்னனைக் கண்களை மூடிக்கொள்ளும்படி கூறிவிட்டு தான்கட்டிய கற்பனைக் கோயிலை வர்ணித்தார். மன்னன் மனக் கண்ணில் அக்கோயில் தெரிந்தது. மன்னனும் பூசலாரும் கண்ணீர் உகுத்து சிவனைத் தெழுதனர் என்பது தொன்மம். ஆனால் பட்டினத்தாரோ உடம்பே கோயில், வாய் கோபுரம்வாசல், உயிர் சிவலிங்கம், ஐம்புலன்களும் மணிவிளக்குகள் என்றார் பின்வரும் திருமந்திரப் பாடலில்:

உள்ளம் பெருங்கோ யிலூனுடம் பாலயம்
வள்ளல் பிரானார்க் குவாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க் குசீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கு

அடிக்குறிப்பு[தொகு]

  1. முன்னுரை, ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம், ஐந்தாம் பதிப்பு திசம்பர் 2005, பக்.iv & v
  2. பதிப்புரை, ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம், ஐந்தாம் பதிப்பு திசம்பர் 2005, பக்.iv
  3. அத்ரி என்றால் மலை. கருடன் தவமிருந்த மலை கருடாத்திரி. தமிழில் கருடமலை
  4. வேதம் மீட்கப்பட்ட மலை வேதாத்ரி. தமிழில் மறைமலை
  5. புடை என்றால் பொந்து எனப் பொருள்
  6. ஶ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்சுனம் எனப்படும் மருதூர் உத்தரகாசி (வடகாசி) எனவும் நாகை மாவட்டத்தில் உள்ள திருவிடை மருதூர் மத்தியகாசி (நடு காசி) எனவும் அழைக்கப்படுகின்றன.
  7. காமம்துலங்கும் என்றால் விரும்பம் துலங்கும் என்று பொருள்