ஒரு கடவுட் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இறையியலில், ஒரு கடவுட் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை (Monotheism) என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும்.[1] ஒரு கடவுட் கொள்கையில், ஆபிரகாமிய மதங்கள் என அழைக்கப்படும், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவற்றிலுள்ள கடவுள் பற்றிய கருத்துருவுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு உள்ளது.

ஒரு கடவுட் கொள்கை பொதுவாக பல கடவுட் கொள்கை, இயற்கை அனைத்தும் கடவுளே என்னும் கொள்கை என்பவற்றுக்கு முரண்படுகின்றது என்னும் வகையிலேயே வரையறுக்கப்படுகின்றது. ஒரு கடவுட் கொள்கை, பல கடவுட் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. எனினும், பல கடவுள்களை வணங்கினாலும், எல்லாக் கடவுளருமே ஒரு கடவுளின் வெவ்வேறு அம்சங்களே எனக் கொள்ளும் பல கடவுட் கொள்கையினர் இத்தகைய வாதத்தை முன்வைப்பதில்லை.

கிறித்தவத்தில்[தொகு]

ஒரு கடவுட் கொள்கையிலும், இறைவனின் பன்மைநிலை பற்றியக் கருத்துருக்கள் காணப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக கிறிஸ்தவ சமயத்திலுள்ள திரித்துவக் கோட்பாட்டைக் குறிப்பிடலாம். இங்கே இறைவன் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆள்-நிலை உள்ளவர் எனவும் கடவுள் தன்மையில் ஒருவர் எனவும் கூறப்படுகிறது.

இயேசுவின் இறைத்தன்மையை ஏற்கும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு இறைவன், மனிதன் என்னும் இரண்டு இயல்புகள் உள்ளதாக நம்புகின்றனர். கத்தோலிக்க திருச்சபை, மரபுவழி திருச்சபைகள் உட்பட பெறுவாரியான கிறித்தவப்பிரிவுகள் பின்பற்றும் நைசின் விசுவாச அறிக்கையின் படி, கிறித்துவின் மனிதம் மற்றும் இறை இயல்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாத்தாக இருப்பதாகவும், இயேசு முழுவதும் கடவுளாகவும், முழுவதும் மனிதனாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் போதிலும் அவர் தூய ஆவியோடும், தந்தையோடும் ஒரே பொருளானவராய் இருக்கின்றார். ஆகவே அவருக்கு செலுத்தப்படும் வழிபாடு, குறிப்பாக நற்கருணையிலும், நற்கருணை ஆராதனையிலும் அவரின் மனிதம் மற்றும் இறைத்தன்மைக்கும் சேர்த்தே அளிக்கப்படுகின்றது. ஆயினும் நைசின் விசுவாச அறிக்கையினைப் புறக்கணிக்கும் கிறித்தவப்பிரிவுகள் இயேசுவின் இறைவன், மனிதன் என்னும் இரண்டு இயல்புகளில் "இறை" அம்சமான இயேசுவையே வழிபாட்டுக்கு உரியவராக ஏற்றுக்கொள்கின்றனர்.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் முதலிய சபைகள், பிறருக்கு எடுத்துக்காட்டான புனிதமான வாழ்வு வாழ்ந்து, இறப்புக்குப்பின் கடவுளோடு இருக்கிறார் என்று கருதப்படுகின்ற மரியாள் உட்படப் பல புனிதர்களையும் வணங்குகிறார்கள், ஆனால் வழிபடுவதில்லை.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

ஒரு கடவுட் கொள்கைக்கான கருத்துரு; ஒரு கடவுளையே வணங்கினாலும், இவ்வாறு வணங்கப்படக்கூடிய பல கடவுள்கள் இருக்கலாம் என்னும் தேர்வு கடவுள் கொள்கை (henotheism); பல கடவுள்களில் ஒருவரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வணங்கும் முதன்மைக் கடவுட் கொள்கை (monolatrism) என்பவற்றிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்ததாகக் கொள்ளப்படுகின்றது. பண்டைய தூரகிழக்கில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு முதன்மைக் கடவுள் இருந்ததாகத் தெரிகிறது. லார்சா நகருக்கு ஷமாஸ் என்னும் கடவுளும், ஊர் நகருக்கு சின் என்னும் கடவுளும் முதன்மைக் கடவுளாக இருந்ததை எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.

உசாத்துணை[தொகு]

  1. "Monotheism", Britannica, 15th ed. (1986), 8:266.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கடவுட்_கொள்கை&oldid=2303050" இருந்து மீள்விக்கப்பட்டது