ஒய்யாரத்து சந்து மேனன்
ராவ் பகதூர் ஒ. சந்து மேனன் | |
---|---|
பிறப்பு | 9 ஜனவரி 1847 கெலலூர், கண்ணூர், மலபார் மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கண்ணூர், கேரளம், இந்தியா) |
இறப்பு | 7 செப்டம்பர் 1899 தலச்சேரி, கண்ணூர் |
மற்ற பெயர்கள் | ஒய்யாரத்து சந்து மேனன் |
பணி | எழுத்தாளர், புதின ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி |
பெற்றோர் | சந்து நாயர் எடப்பாடி பார்வதி அம்மா சித்தேழத்து |
வாழ்க்கைத் துணை | இலட்சுமிகுட்டி அம்மா |
விருதுகள் | ராவ் பகதூர் |
ஒய்யாரத்து சந்து மேனன் (Oyyarathu Chandu Menon) (பிரபலமாக ஒ. சந்து மேனன் என்று அறியப்படுகிறார்) (1847-1899) மலையாளப் புதின எழுத்தாளராவார். 1889இல் மலையாளத்தில் வெளிடப்பட்ட வெளியிடப்பட்ட முதல் நீண்ட புதினமான "இந்தூலேகா"வை இவர் எழுதியுள்ளார்..
வாழ்க்கை
[தொகு]இன்றைய கோழிக்கோடு மாவட்டத்தில் நடுவண்ணூருக்கு அருகிலுள்ள ஒய்யாரத்து வீட்டில் 1847 சனவரி 9 ஆம் தேதி சந்து மேனன் பிறந்தார். [1] இவர் குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பம் தலச்சேரிக்கு குடிபெயர்ந்தது.
சந்து மேனன், பக்கத்துவீட்டுக்காரரான கோரன் குருக்களிடமிருந்து தனது ஆரம்பப் பாடங்களைக் கற்றார். பண்டிதர் குஞ்சான்பூ நம்பியார் என்பவரிடமிருந்து சமசுகிருத கவிதை, நாடகம், இலக்கணம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். அதே நேரத்தில், இவர் ஒரு உள்ளூர் பள்ளியிலிருந்தும் பின்னர் கே. குஞ்சன் மேனனிடமிருந்தும் ஆங்கிலப் பாடங்களையும் கற்றார். இவர், தலச்சேரியிலுள்ள பாசல் கிறித்தவ தொண்டு நிறுவன பார்சி உயர்நிலை பள்ளியில் உயர் கல்வியைக் கற்றார். 1857ஆம் ஆண்டில், 52 வயதான இவரது தந்தை நீரிழிவு நோயால் இறந்தார். 1864 ஆம் ஆண்டில் இவர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படிக்கும்போது இவரது தாயாரும் இறந்தார். இதனால் இவர் படிப்பைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [2]
திருமணம்
[தொகு]சந்து மேனன் 1872 இல் இலட்சுமிகுட்டி அம்மா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் இருந்தன.
பணிகள்
[தொகு]சந்து மேனன் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். மருமக்கதாயம் குறித்து விசாரிக்கவும் மலபார் திருமணச் சட்டம் குறித்து அறிக்கை அளிக்கவும் அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த நேரத்தில் நாயர்களிடையே நிலவிய திருமணத்தைப் பற்றிய இவரது அவதானிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. [3] சிறந்த சேவைக்காக இவருக்கு 1898 இல் ராவ் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர், தலச்சேரியிலுள்ள தனது ஒய்யாரத்து வீட்டில் 7 செப்டம்பர் 1899 அன்று இதய அடைப்பு காரணமாக இறந்தார் [4]
இலக்கிய வாழ்க்கை
[தொகு]இவர் தனது முதல் நீண்ட புதினமான இந்துலேகாவை எழுத தனது மனைவியால் ஈர்க்கப்பட்டார். அந்த நாட்களில் பிரபலமான ஆங்கில நூல்களைப் போல இந்தப் பணியை வடிவமைக்க முயன்றார். [5] இந்த நூலில், ஒரு உயர் சாதி பெண்ணின் அன்பையும் வாழ்க்கையையும் அவளது விதியையும் சித்தரித்தார். நிலப்பிரபுத்துவம், பலதார மணம், சாதி ஒடுக்குமுறை ஆகிய தலைப்புகளை விவாதிக்க இந்த நூல் முயன்றது. [6]
இவர், "சாரதா" என்ற இரண்டாவது நூலைத் தொடங்கினார், அதன் முதல் பகுதி 1892 இல் வெளியானது. இதை இரண்டு பகுதிகளாக வெளியிட முடிவு செய்தார். இருப்பினும், அதன் தொடர்ச்சியை இவரால் முடிக்க முடியவில்லை. அது ஒருபோதும் வெளிவரவேயில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- ↑ Biography
- ↑ Genealogy
- ↑ "Important Personalities". Sreekeshu.xp3.biz. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Daily News Online Edition - Sri lanka :: Print Page". Archives.dailynews.lk. 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Voice of rebellion". The Hindu. 2004-09-07. Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.