உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்த ஈந்தணைவி மற்றும் பல்லின ஈந்தணைவிச் சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒத்த ஈந்தணைவி மற்றும் பல்லின ஈந்தணைவிச் சேர்மங்கள் (Homoleptic and heteroleptic compounds) என்பவை உலோக அணுவுடன் ஈந்தணைவிகள் பிணைக்கப்பட்டிருக்கும் வகை கனிம வேதியியல் சேர்மங்களாகும். உலோக அணுவுடன் ஒரே வகையான ஈந்தணைவிகள் பிணைக்கப்பட்டு உருவாகும் சேர்மங்கள் ஒத்த ஈந்தணைவிச் சேர்மங்கள் என்றும்,[1] ஒரே வகையான ஈந்தணைவிகள் இல்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வகை ஈந்தணைவிகள் உலோக அணுவுடன் இணைந்திருந்தால் அவை பல்லின ஈந்தணைவிச் சேர்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒத்த ஈந்தணைவிச் சேர்மங்கள் எனத் தோன்றும் பெயர்களைக் கொண்ட சில சேர்மங்கள், உண்மையில் பல்லின ஈந்தணைவிச் சேர்மங்கங்களாகும். ஏனெனில், அவற்றின் பெயரில் குறிப்பிடப்படாத ஈந்தணைவிகளும் அவற்றில் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, ஈதர் கரைப்பானில் உள்ள கிரிக்கனார்டு வினைப்பொருளின் கரைசலில் நிலவும் சமநிலையில் காணப்படும் டை ஆல்க்கைல் மக்னீசியம் அணைவுச் சேர்மங்களில், ஒவ்வொரு மக்னீசியம் மையத்துடனும் இரண்டு ஈதர் ஈந்தணைவிகள் இணைந்திருக்கும். மற்றொரு எடுத்துக்காட்டு, ஈதர் கரைப்பானில் உள்ள டிரைமெத்தில் அலுமினியக் கரைசலாகும். டிரை அரைல் அல்லது டிரை ஆல்க்கைல் போரேன்களுக்கும் இதேபோன்ற வேதியியல் தன்மையே எதிர்பார்க்கப்பட வேண்டும்.

இருமெத்தில் சல்பாக்சைடு போன்ற சில ஈந்தணைவிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு ஒருங்கிணைப்பு முறைகளில் பிணைவது சாத்தியமாகும். ஒரே ஒரு வகை ஈந்தணைவியைக் கொண்டு, ஆனால் வெவ்வேறு ஒருங்கிணைப்பு முறைகளைக் கொண்ட ஓர் அணைவுச் சேர்மத்தை ஒத்த ஈந்தணைவி எனக் கருதுவது பொருத்தமானதாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, டை குளோரோடெட்ராகிசு(டைமெத்தில் சல்ஃபாக்சைடு)ருத்தேனியம்(II) என்ற அணைவுச் சேர்மத்தில், இருமெத்தில் சல்பாக்சைடு கந்தகம் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் இரண்டின் வழியாகவும் ஒருங்கிணைக்கிறது. இருப்பினும், இதில் குளோரைடு ஈந்தணைவிகளும் இருப்பதால் இது ஒத்த ஈந்தணைவிச் சேர்மம் அல்ல.

ஒத்த ஈந்தணைவிச் சேர்மங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]