ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம்
Choctaw flag.svg
ஒக்லஹோமா சொக்ட்டோ தேசத்தின் கொடி
மொத்த மக்கள்தொகை
250,000 மொத்தக் குடிமக்கள். 70,000 சொக்ட்டோக்கள்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஒக்லஹோமா
மொழி(கள்)
ஆங்கிலம், சொக்ட்டோ
சமயங்கள்
புரட்டஸ்தாந்தம், மரபுவழி நம்பிக்கைகள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சொக்ட்டோ, மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியர் குழு, ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்
பிற தொல்குடி அமெரிக்கக் குழுக்கள்

ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம், ஐக்கிய அமெரிக்கா, ஒக்லஹோமா ஆகியவற்றின் அரசுகளுடன் சிறப்புத் தொடர்புகளைப் பேணிவருகின்ற பகுதியளவு தன்னாட்சி ஒரு பகுதி ஆகும். இங்கே சுமார் 250,000 மக்கள் வாழ்கின்றனர். சொக்ட்டோ தேசத்தின் தலைமையகம் ஒக்லஹோமாவின் துரந்த் நகரில் அமைந்துள்ளது. ஒக்லஹோமாவின் துஷ்கஹோமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கவுன்சில் ஹவுஸ் இன்று சொக்ட்டோ அருங்காட்சியகத்தையும், நீதித்துறையின் நீதிமன்றத் தொகுதியையும் கொண்டுள்ளது. சொக்ட்டோ தேசம், ஒக்லஹோமா சொக்ட்டோக்கள் எனப்படும் தொல்குடி அமெரிக்கர்களின் இன்றைய தாயகமாக உள்ளது. இவர்கள் 1831 க்கும் 1838 க்கும் இடையில் அவர்களில் மூலத் தாயகப் பகுதிகளிலிருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவின் இப்பகுதிக்கு அகற்றப்பட்டனர். இங்கே அவர்கள், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இவ் வெளியேற்றம் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 1903 ஆம் ஆண்டில் 300 சொக்ட்டோக்கள் ஒக்லஹோமா சொக்ட்டோ தேசத்துக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

புவியியல்[தொகு]

ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் சுமார் 11,020 சதுரமைல் (28,500 கிமீ2) பரப்பளவு கொண்டது. இதில், தென்கிழக்கு ஒக்லஹோமாவிலுள்ள 10 1/2 கவுண்டிகள் அடங்கியுள்ளன. இவை அட்டோக்கா கவுண்டி, பிரையன் கவுண்டி, சொக்ட்டோ கவுண்டி, கோல் கவுண்டி, ஹஸ்கெல் கவுண்டி, ஹியூகெஸ் கவுண்டியின் அரைப்பகுதி, லாட்டிமெர் கவுண்டி, லே புளோர் கவுண்டி, மக்கர்ட்டன் கவுண்டி, பிட்ஸ்பர்க் கவுண்டி, புஷ்மத்தாஹா கவுண்டி என்பனவாகும்.

அரசு[தொகு]

இத் தேசத்தின் பழங்குடித் தலைமையகம், ஒக்லஹோமாவின் தூரத்தில், மூன்று மாடிக் கட்டிடங்களையும், ஒரு தளக் கட்டிடங்களையும் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளது. சொக்ட்டோ பழங்குடி, சொக்ட்டோ தேச அரசியலமைப்பினால், ஆளப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு, 1984 ஜூன் 9 ஆம் தேதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசியலமைப்பின் கீழ், அரசின் நிறைவேற்றுப் பிரிவு, சட்டவாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு என்னும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்ட்டோப் பழங்குடிகளின் தலைவர் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இவர் பழங்குடிப் பேரவையின் (Tribal Council) வாக்களிக்கும் உரிமையுள்ள ஒரு உறுப்பினர் அல்ல. பழங்குடியின் சட்டவாக்க அதிகாரம் 12 உறுப்பினரைக் கொண்ட பழங்குடிப் பேரவையிடம் உள்ளது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் சொக்ட்டோ மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]