ஒக்சித்தானியா
ஒக்சித்தானியா அல்லது ஆக்சித்தானியா (Occitania) என்பது தெற்கு ஐரோப்பாவில் ஒக்சித்தானிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு வரலாற்று ரீதியான பகுதி. கலாச்சார ரீதியாக பிரான்சின் தெற்கே அரைவாசிப் பகுதி, மற்றும் மொனாக்கோ, இத்தாலியின் சிறிய பகுதி (ஒக்சித்தான் பள்ளத்தாக்குகள், கார்டியா பெய்மொண்டேசி), எசுப்பானியாவின் ஆரன் பள்ளத்தாக்கு ஆகியவை ஒக்சித்தானியின் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு இப்போதும் ஒக்சித்தானிய மொழி இரண்டாம் மொழியாக உள்ளது. நடுக் காலம் முதல் மொழியியல், மற்றும் கலாச்சார ரீதியாக ஒக்சித்தானியா ஒரு தனிப்பகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், சட்டபூர்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒக்சித்தானியா என்ற பெயரில் ஒரு தனிநாடாக விளங்கவில்லை. ஆனாலும், ரோமன் காலத்தில் இப்பிராந்தியம் செப்டெம் மாகாணம் எனவும்[1], நடுக்காலத்தின் ஆரம்பத்தில் பிரெஞ்சு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த 1200களுக்கு முன்னரும் இப்பிராந்தியத்தில் ஒற்றுமை நிலவியது.
தற்போதுள்ள 16 மில்லியன் மக்களில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களே ஒக்சித்தானிய மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்கள்[2]. பெரும்பான்மையாக பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி, காட்டலான் மொழி, எசுப்பானியம் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் காத்தலோனியாவில் ஒக்சித்தானிய மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரன் பள்ளத்தாக்கில் 1990 முதல் அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளது.
கிபி 355 இற்குப் பின்னரான ரோமன் ஆட்சிக் காலத்தில் அக்கித்தானியா என அழைக்கப்பட்ட ஒக்சித்தானியா[3] பாரிய புரவன்சு பிராந்தியத்தின் பகுதியாக இருந்தது.
புவியியல்
[தொகு]ஒக்சித்தானியா பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது:
- பிரான்சின் தெற்குப் பகுதி. இங்கு ஒக்சித்தானிய மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.
- இத்தாலியின் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள ஒக்சித்தான் பள்ளத்தாக்குகள், இங்கு ஒக்சித்தானிய மொழி 1999 ஆம் ஆண்டில் சட்டபூர்வ நிலையைப் பெற்றது.
- எசுப்பானியாவின் காத்தலோனியாவில் உள்ள ஆரன் பள்ளத்தாக்கு. 1990 இல் இருந்து ஒக்சித்தானிய மொழி அதிகாரபூர்வ மொழியாக்கப்பட்டது.
- மொனாக்கோ. இங்கு மொனெகாஸ்க்கு மொழியும் ஒக்சித்தானிய மொழியும் பாரம்பரியமாகப் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Map of the Roman Empire, ca400 AD
- ↑ World Directory of Minorities and Indigenous People
- ↑ Jean-Pierre Juge (2001) Petit précis - Chronologie occitane - Histoire & civilisation, p. 14