ஐயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா என்பது தமிழில் வழங்கப்படும் ஒரு சொல்லாகும். இச்சொல் தமிழர் பேச்சு வழக்கில் பல்வேறு விதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒருவரை கௌரவமாக அல்லது உயர்வாக அழைப்பதற்கு "ஐயா" எனும் சொல் பரவலாகப் பயன்படுகிறது.

கௌரவப் பெயர்[தொகு]

ஐயா எனும் சொல் உயர் சான்றோர், உயர் பணிகளில் கடமையாற்றுவோர், வயதில் முதிர்ந்தோர் போன்ற ஆண் பாலினத்தவரை கௌரவமாகவும் உயர்வானவராகவும் விழித்துப் பேசுவதற்கு பயன்படுகிறது.

ஐயா எனும் சொல் ஆங்கிலத்தில் "Sir" என்பதற்கு இணையான சொல்லாகப் பலவிடங்களில் பயன்படுகிறது. அதேவேளை எல்லாவிடங்களிலும் அவ்வாறே பயன்படுகிறது என்றும் கூறமுடியாது. ஆங்கிலத்தில் வயதில் இளையவரையும் "Sir" என்று அழைப்பதுப்போன்ற பயன்பாடு தமிழில் இல்லை. குறிப்பாக வயதில் ஓரளவேணும் முதர்ச்சியடைந்தோரையும், சான்றோரையும், உயர்பணிகளில் இருப்போரையும் "ஐயா" என்று அழைக்கும் வழக்கு என்பது, ஒருவரை ஏதோவொரு வகையில் உயர்வானவராக கௌரவப்படுத்தி பேசுவதற்கான சொல்லாடலாகவே பார்க்க முடியும்.

எழுத்துவடிவில்[தொகு]

எழுத்துவடிவிலும் "ஐயா" எனும் சொல் ஆங்கிலத்தில் "Sir" எனும் சொல்லிற்கு இணையானப் பயன்பாடு போன்றே பயன்படுகின்றது. குறிப்பாக கடிதங்கள் எழுதும் பொழுது ஒருவரின் பெயர் தெரியாவிட்டால், பெயருக்கு பதிலாக "ஐயா" என எழுதுதல் தமிழரிடையே வழக்கில் உள்ளது.

எடுத்துக்காட்டாக:

  • கனம் ஐயா!
  • கனம் ஐயா அவர்களுக்கு,

அதேவேளை பெயர் தெரிந்தோரையும் "ஐயா" என முன்னொட்டாக இட்டு எழுதுதலும் வழக்கில் உள்ளது. (சிலர் அய்யா என எழுதுவதும் உண்டு.)

  • குணசிங்கம் ஐயா அவர்களுக்கு

இலக்கியத்தில்[தொகு]

தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக தலைவனை "ஐயா" என்று அழைப்பதை பலவிடங்களில் காணலாம்.

இலங்கைத் தமிழரின் பேச்சு வழக்கில்[தொகு]

முந்தைய நாட்களில் அதிகளவு இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ் தமிழரிடம், பேச்சு வழக்கில் தகப்பனை "ஐயா" என்று அழைக்கும் வழக்கு இருந்திருந்தது. இந்நாட்களில் அவ்வழக்கு அருகிவிட்டது. அவ்வாறே அம்மாவின் தகப்பனை "அம்மையா", அப்பாவின் தகப்பனை "அப்பையா" என்று அழைக்கும் வழக்குகள் அண்மை காலம் வரை ஒருசில இடங்களில் இருந்துள்ளது. இவ்வழக்கு தற்போது அருகிவருகின்றது எனலாம்.

  • அப்பா = ஐயா
  • அப்பாவின் அப்பா = அப்பையா
  • அம்மாவின் அப்பா = அம்மையா

சிங்களவரிடையே[தொகு]

இலங்கை சிங்களவரிடையே "ஐயா" எனும் சொல் சகோதரனை அழைக்கும் உறவுச் சொல்லாகப் பயன்படுகிறது.

  • அய்யா - அண்ணா (சகோதரன்)
  • மகே அய்யா - எனது அண்ணா

அதேவேளை சகோதரன் அல்லாத வயதில் தன்னையும் விட கூடிய ஒருவரை (தமிழர்கள் "அண்ணை" என்று அழைப்பதுப்போன்று) "ஐயா" என்று அழைக்கும் வழக்கம் இலங்கையில் எல்லாவிடங்களிலும் காணப்படுகின்றது.

காதலனை அழைத்தல்[தொகு]

சகோதரன் அல்லாத ஆண்களை சகோதரத் தன்மையுடன் "ஐயா" என்று அழைக்கும் முறை, காலப்போக்கில் அது காதலாக மாறியப் பின்பும், காதலன் காதலியை "ஐயா" அல்லது "ஐயே" என்று அழைக்கும் வழக்கு சிங்களப் பெண்களிடையே உள்ளது.

தமிழர்களின் பண்பாட்டில் ஒரு பெண் ஒரு ஆடவனை "அண்ணா" என அழைக்கத்தொடங்கிவிட்டால், அங்கே காதல் பெரும்பாலும் தற்போதைய காலங்களில் ஏற்படுவதில்லை. தமிழ் ஆண்களும் அவ்வாறே "தங்கை" என அழைக்கத்தொடங்கிவிட்டால், அந்த பெண்ணை காதலியாக நினைக்கும் நிலை பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் சிங்களவரிடையே, "அண்ணா" என்று அழைத்த ஒருவரை காதலிக்கக்கூடாது எனும் கருத்து எங்கும் இருப்பதாக இல்லை. அனேகமான சிங்கள காதலர்கள் "ஐயா" (அண்ணா) என்று காதலனை காதலியும், "நங்கி" (தங்கை) என்று காதலியை காதலனும் அழைப்பதே சிங்களவரிடையேயான பெருவழக்காக உள்ளது.

இந்த சொல் வழக்கு முறை திருமணமான தம்பதிகளிடையேயும் சிலவிடங்களில் காணமுடிகிறது.

[[பகுப்பு:தமிழ்ச் சொற்கள்]ன] தமிழில் ஐயை என்று ஒரு சொல் உண்டு. அது ஓரு பெண் தெய்வத்தின் பெயர். பாட்டி என்னும் பொருளிலும் வரும். அம்மா என்றும் பொருள் கொள்ளலாம். இந்த ஐயை யின் எதிர்ச்சொல்லாக ஐயா இருக்கிறது. ஐயை×ஐயா அம்மா×அப்பா பாட்டி×தாத்தா

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயா&oldid=3746049" இலிருந்து மீள்விக்கப்பட்டது