ஐபீரிய மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம். இதில் எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளன

ஐபீரிய மூவலந்தீவு அல்லது ஐபீரிய குடாநாடு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று மூவலந்தீவில் இதுவே தென்மேற்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும், வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ2 (km²).

வரலாறு[தொகு]

இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த முன்மாந்த இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அட்டாப்புயெர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் [1]. இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் பாசுக் மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் யூசுக்கால்டுனாக் (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசும் மனிதர்கள்

கடலோடிகளாகிய ஃவினீசியர்களும், கிரேக்கர்களும், கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ஐபீரியா என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால இலத்தீன் பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).

புவியியல்[தொகு]

ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை ஆபிரிக்காவின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன.

இந்த மூவலந்தீவின் தென் முனையாக புன்ரா டி டரிபாவும் (36°00′15″N 5°36′37″W) வட முனையாக புன்ரா டி எஸ்ரகா டி பரேசும் (43°47′38″N 7°41′17″W) அமைந்துள்ளன. இந்த இரு முனைகளுக்கும் இடையிலான அகலம் ஏறத்தாழ 865 கிலோமீட்டர் ஆகும். இதன் மேற்கு முனையாக கபோ டா றொக்காவும் (38°46′51″N 9°29′54″W) கிழக்கு முனையாக கப் டி கிரியசும் (42°19′09″N 3°19′19″E) விளங்குகின்றன. இது ஏறத்தாழ 1,155 கிலோமீட்டர் நீளம் ஆகும். இதன் சீரற்ற கிட்டத்தட்ட எண்கோணமான வடிவமானது புவியியலாளர் சிடிரபோவினால் எருதுத் தோலிற்கு ஒப்பிடப்பட்டது.

எசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது. ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது. இது மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன.

கடற்கரை[தொகு]

ஐபீரிய மூவலந்தீவின் மொத்தக் கடற்கரை 3,313 கிலோமீட்டர் (2,059 மைல்) நீளமானதாகும். இதில் 1660 கிலோமீட்டர் (1,030 மைல்) மத்தியதரைக்கடல் பக்கத்திலும் 1,653 கிலோமீட்டர் (1,027 மைல்) அத்திலாந்திக் பெருங்கடல் பக்கத்திலும் உள்ளது.

ஆறுகள்[தொகு]

எப்ரோ ஆறு, டோவுரோ ஆறு, தாகசு ஆறு, குவாடியானா ஆறு, குவாடல்குவிர் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இந்த மூவலந்தீவில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. இவற்றின் நீர் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இவற்றுள் மிகப்பெரியதான தாகசு ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து போர்த்துக்கல் ஊடாகச் செல்கிறது. டோவுரோ ஆறும் மேற்கு நோக்கிப் பாய்கிறது. குவாடியான ஆறு தெற்கு நோக்கிப் பாய்ந்து அதன் இறுதியில் நீண்ட தூரத்திற்கு எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது.

மலைகள்[தொகு]

ஐபீரிய மூவலந்தீவின் பெரும்பான்மை நில அமைப்பானது மலைகளால் ஆனது. இவற்றுள் பிரதான மலைத் தொடர்களாகப் பின்வருவன அமைகின்றன.

  • பிரனீசு மலைத்தொடரும் அதன் சிறு குன்றுகளான முன்-பிரனீசு மலைகளும். இதன் உச்சி 3,404 மீட்டர் உயரமான அனெற்றோ ஆகும்.
  • வடக்கு கரையில் அமைந்த கன்ரபிரியன் மலைத்தொடர்.
  • கலிசியா/டிராஸ்-ஒஸ்-மொன்ரெஸ் மலை வடமேற்கில் அமைந்துள்ளது.
  • ஐபீரிக்கோ முறைமை எனப்படும் மலைத்தொடரானது மூவலந்தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. 2,313 மீட்டர் உயரமான மொன்காயோ இதன் உச்சி ஆகும்.
  • மத்திய முறைமை எனும் மலைத்தொடர் ஐபீரிய மேட்டு நிலத்தை வடக்குத் தெற்காக இரண்டாகப் பிரிக்கிறது.
  • மொன்ரெசு டி ரொலிடோ கிழக்குக் கரையில் உள்ளது.
  • சியெர்ரா மொரெனா
  • பயேற்றிக் முறைமை

காலநிலை[தொகு]

ஐபீரிய மூவலந்தீவானது இரு பெரும் காலநிலை வகைகளைக் கொண்டுள்ளது. அவை அத்திலாந்திக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் நிலவும் கடல்சார் காலநிலை மற்றும் மத்தியதரைக்கடல் பக்கமாக நிலவும் மத்தியதரைக் காலநிலை ஆகும். கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது. எனினும் போர்த்துக்கல் மற்றும் எசுப்பானியாவின் பெரும்பாலான பகுதிகள் வேறுபட்ட பனிப்படிவைக் கொண்டனவாகவும் கடலிலிருந்தான தூரம் மற்றும் உயரத்தைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலைகளை உடையனவாகவும் உள்ளன.

நாடுகள்[தொகு]

எசுப்பானியா

போர்த்துக்கல்

பிரான்சு

அந்தோரா

ஜிப்ரால்ட்டர்

நகரங்கள்[தொகு]

மட்ரிட்

பார்சிலோனா

லிஸ்பன்

போர்ட்டோ

வாலேன்சியா

குறிப்புகள்[தொகு]

  1. "'First west Europe tooth' found". BBC News. 2007-06-30. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6256356.stm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபீரிய_மூவலந்தீவு&oldid=3817399" இலிருந்து மீள்விக்கப்பட்டது