உள்ளடக்கத்துக்குச் செல்

ஐன் ஜலுட் போர்

ஆள்கூறுகள்: 32°33′02″N 35°21′25″E / 32.5506°N 35.3569°E / 32.5506; 35.3569
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன் ஜலுட் போர்
மங்கோலியர்களின் சிரியா மீதான படையெடுப்புகளின் ஒரு பகுதி

இரண்டு படைகளின் நகர்வைக் காட்டும் வரைபடம். இறுதியில் அவை ஐன் ஜலுட்டில் சந்தித்தன.
நாள் 3 செப்டம்பர் 1260
இடம் ஐன் ஜலுட்டிற்கு அருகில், கலிலேயா, இசுரேல்[1]
எகிப்திய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
மங்கோலியர்களால் வெல்லப்பட்ட பகுதிகள் எகிப்தியர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
பிரிவினர்
எகிப்திய அடிமை வம்சத்தவர்
கெரக் மற்றும் அமாவின் அய்யூப்பிய அமீர்கள்
மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசு

ஓம்சு மற்றும் பனியாசின் அய்யூப்பிய அமீர்கள்

தளபதிகள், தலைவர்கள்
சயீபதீன் குதூஸ்
பைபர்சு
அமாவின் அல்-மன்சூர்
கித்புகா  
ஓம்சின் அல்-அஷ்ரப்
பனியாசின் அல்-சயீத்
படைப் பிரிவுகள்
இலகுரகக் குதிரைப்படை மற்றும் குதிரை வில்லாளர்கள், கனரகக் குதிரைப்படை, காலாட் படை மங்கோலிய வாள்வீரர்கள் மற்றும் குதிரை வில்லாளர்கள்கள், சிசிலிய ஆர்மீனியத் துருப்புக்கள், சார்சியா படைப்பிரிவு, உள்ளூர் அய்யூப்பிய படைப்பிரிவுகள்
பலம்
15,000–20,000[2][3][4] 10,000–20,000[5][6][7][8][9][10]
இழப்புகள்
தெரியவில்லை பெரும்பாலான இராணுவம்[11][10][12]

ஐன் ஜலுட் போர் (Battle of Ain Jalut, அரபு மொழி: عين جالوت‎, "கோலியாத் ஊற்று", அல்லது கரோத் ஊற்று, எபிரேயம்: מעין חרוד) என்பது எகிப்தின் பகிரி அடிமை வம்சத்தவர் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கு இடையே தென்கிழக்கு கலிலேயாவிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கில் 3 செப்டம்பர் 1260ஆம் ஆண்டு நடைபெற்ற போர் ஆகும். இசுரேலிலுள்ள செசுரீல் பள்ளத்தாக்கின் தற்போதைய அழிந்துபோன கிராமமான சிரினின் தளத்திற்கு அருகில் இது நடைபெற்றது. மங்கோலியப் படையெடுப்புகளின் நீட்சியாக இந்தப் போர் நடைபெற்றது. முதன் முறையாக ஒரு மங்கோலிய முன்னேற்றமானது போர்க்களத்தில் நடந்த நேரடியான சண்டையில் நிரந்தரமாக தோற்கடிக்கப்பட்டது இந்தப் போரில் தான்.[13][14][15]

மங்கோலியப் பேரரசின் மேற்கு நோக்கிய விரிவாக்கத்தைத் தொடர்ந்த குலாகுவின் இராணுவங்கள், 1258ஆம் ஆண்டு பகுதாதுவைக் கைப்பற்றிச் சூறையாடின. சிறிது காலத்திற்குப் பிறகு, அய்யூப்பியத் தலைநகரானத் திமிஷ்குவையும் கைப்பற்றின.[16] எகிப்தைச் சரணடைய வைக்குமாறு குதூஸிற்குக் கோரிக்கை வைக்கக் கெய்ரோவிற்குத் தூதுவர்களைக் குலாகு அனுப்பினார். தூதுவர்களைக் கொன்ற குதூஸ் அவர்களது தலைகளைக் கெய்ரோவின் வாயிற்கதவான பாப் சுவேயிலாவில் காட்சிக்கு வைத்தார்.[16] இந்நிகழ்வுக்குச் சிறிது காலத்தில், மங்கோலியப் பாரம்பரியப்படித் தன்னுடைய இராணுவத்தின் பெரும்பகுதியுடன் மங்கோலியாவிற்குக் குலாகு திரும்பினார். தளபதி கித்புகாவின் தலைமையில் புறாத்து ஆற்றுக்கு மேற்குப் புறம் 10,000 துருப்புக்களை விட்டு விட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொண்ட குதூஸ் வேகமாகத் தன்னுடைய இராணுவத்தை கெய்ரோவில் இருந்து பாலத்தீனத்தை நோக்கிக் கூட்டிச் சென்றார்.[17] கித்புகா சிதோன் நகரத்தைச் சூறையாடினார். பிறகு தனது இராணுவத்தைத் தெற்கு நோக்கி அரோடு ஊற்றிற்கு குதூஸின் படைகளைச் சந்திப்பதற்காகக் கூட்டி வந்தார். கொரில்லாத் தாக்குதல்கள் மற்றும் தோற்று ஓடுவது போல் நடிப்பது ஆகிய நடவடிக்கைகளை மம்லூக் தளபதி பைபர்சு மேற்கொண்டார். இறுதியாகக் கித்புகாவின் இராணுவத்தைக் குதூஸ் சுற்றி வளைத்தார். பிசான் நகரை நோக்கிப் பின்வாங்குமாறு மங்கோலிய இராணுவமானது கட்டாயப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு மம்லூக்குகள் கடைசித் தாக்குதலை நடத்தினர். இதன் முடிவில் ஏராளமான மங்கோலியத் துருப்புகள் இறந்தனர். கித்புகா கைது செய்யப்பட்டார்.

மங்கோலியர்கள் தங்களது எல்லையை விரிவுபடுத்தும் நிகழ்வானது நிரந்தரமாகத் தடுக்கப்பட்டது முதல் முறையாக இந்தப் போரில் தான் எனக் கருதப்படுகிறது.[13] மேலும், தவறாக, முதல் பெரிய மங்கோலியத் தோல்வி எனவும் இந்தப் போர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.[17] எகிப்து மற்றும் லெவண்ட் மீதான படையெடுப்பு முயற்சிகளின் போது மங்கோலியர்கள் அடைந்த இரண்டு தோல்விகளில் முதல் தோல்வியாக இது அமைந்தது. மற்றொரு தோல்வி 1303ஆம் ஆண்டு மர்ஜ் அல் சபர் போரில் அடைந்த தோல்வியாகும். எந்த ஒரு இராணுவச் சண்டையிலும் கைப்பீரங்கி முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டதாகப் பதியப்பட்டது இந்த போரில் தான். அதை மம்லூக்குகள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் மங்கோலிய இராணுவத்தைப் பயமுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர் என 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டு அரபி இராணுவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[18][19][20][21][22]

பின்புலம்[தொகு]

1251ஆம் ஆண்டு மோங்கே கான் ககானாகப் பதவியேற்றவுடன் தனது தாத்தா செங்கிஸ் கானின் திட்டமான ஒரே உலகப் பேரரசைச் செயல்படுத்த ஆரம்பித்தார். மேற்கு நோக்கி இருந்த நாடுகளை அடிபணிய வைக்கும் செயலுக்குத் தலைமை தாங்க தனது தம்பியும் செங்கிஸ் கானின் மற்றொரு பேரனுமாகிய குலாகு கானைத் தேர்ந்தெடுத்தார்.[16]

இராணுவத்தைத் திரட்ட குலாகுவுக்கு ஐந்து வருடங்கள் ஆனது. 1256ஆம் ஆண்டு வரை குலாகு படையெடுப்புகளுக்குத் தயாராகவில்லை. பாரசீகத்திலிருந்த மங்கோலியத் தளங்களில் இருந்து செயல்பட்ட குலாகு, தெற்கு நோக்கிப் பயணித்தார். அமைதியாகச் சரணடைந்தவர்களை நல்ல விதமாக நடத்துமாறும், மற்றவர்களை அழிக்குமாறும் மோங்கே ஆணையிட்டார். இவ்வாறாக, குலாகு மற்றும் அவரது இராணுவம் அக்காலத்தில் இருந்த சில அதிக சக்திவாய்ந்த மற்றும் நீண்ட காலமாக ஆட்சி செய்த அரசமரபுகளை வெற்றிகொண்டன.

மங்கோலியர்களின் வழியில் இருந்த மற்ற நாடுகள் மங்கோலிய அதிகாரத்திற்குச் சரணடைந்தன. அவர்கள் மங்கோலிய இராணுவத்திற்குத் துணையாகப் படைகளை அனுப்பினர். மங்கோலியர்கள் பகுதாதுவை அடைந்த போது, அவர்களது இராணுவமானது சிசிலிய ஆர்மீனியர்கள் மற்றும் அடிபணிந்த அன்டியோக் சமஸ்தானத்தில் இருந்து வந்த சில பிராங்கிய படைகளையும் கொண்டிருந்தன. பாரசீகத்தில் இருந்த அசாசின்கள், பகுதாதுவிலிருந்த 500 ஆண்டுகள் பழமையான அப்பாசியக் கலீபகம் (பகுதாது முற்றுகையைப் பார்க்க) மற்றும் திமிஷ்குவில் இருந்த அய்யூப்பிய வம்சம் ஆகிய அனைத்தும் வீழ்ந்தன. குலாகுவின் திட்டமானது, பிறகு தெற்கு நோக்கிச் சென்று எருசலேப் பேரரசு வழியாக முக்கியமான இஸ்லாமிய சக்தியான எகிப்திய அடிமை வம்சத்தை எதிர்கொள்வதாகும்.[16]

மத்திய கிழக்கில் இருந்த அடிமை வம்சத்தவர்கள் மீதான மங்கோலியத் தாக்குதலின் போது பெரும்பாலான அடிமை வம்சத்தவர்கள் கிப்சாக்குகளாக இருந்தனர். கிப்சாக்குகளை அடிமை வம்சத்தவர்களுக்குத் தங்க நாடோடிக் கூட்டமானது அடிமை வணிகம் மூலம் விற்றது. மங்கோலியர்களை எதிர்த்துப் போரிட அடிமை வம்சத்தவர்களுக்கு உதவியது.[23]

கெய்ரோவில் மங்கோலியத் தூதுவர்கள்[தொகு]

1260ஆம் ஆண்டு குலாகு தனது தூதுவர்களைக் கெய்ரோவில் இருந்த குதூஸிடம் அனுப்பி அவரைச் சரணடையுமாறு கூறினார்:

இதைப் படித்த குதூஸ் தூதுவர்களைக் கொன்றார்.[16]

மங்கோலியாவுக்குக் குலாகு புறப்படுதல்[தொகு]

போருக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தனது இராணுவத்தின் பெரும் பகுதியுடன் லெவன்ட் பகுதியிலிருந்து குலாகு வெளியேறினார். புறாத்து ஆற்றுக்கு மேற்கில் இருந்த படைகளில் ஒரு தியுமனை (பெயரளவில் 10,000 வீரர்கள். ஆனால் பொதுவாகக் குறைவானவர்களே இருப்பர்) மட்டும் விட்டுச் சென்றார்.[2][8] மேலும் கப்பம் கட்டும் நாடுகளிலிருந்து வந்த சிறிதளவு துருப்புகளை நெசுத்தோரிய நைமர் தலைவராகிய கித்புகா நோயனின் தலைமையில் விட்டுச் சென்றார்.[25] போர்க் காலத்தில் வாழ்ந்த அடிமை வம்ச வரலாற்றாளர் அல்-யூனினி தன் "தயில் மிரத் அல்-சமன்" நூலில் கித்புகா தலைமையில் இருந்த மங்கோலிய இராணுவத்தில் கப்பம் கட்டும் நாடுகளிலிருந்து வந்த படைகள் உட்பட மொத்தமாக 1,00,000 பேர் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது ஒரு அப்பட்டமான மிகைப்படுத்தலாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.[26]

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை குலாகு திடீரென வெளியேறியதன் காரணமானது சாங் அரசமரபுச் சீனாவில் படையெடுப்பில் ஈடுபட்டிருந்த பெரிய கான் மோங்கேயின் இறப்பால் ஏற்பட்ட அதிகாரம் மாறுதல் தான் என வரலாற்றாளர்கள் எண்ணினர். இதன் காரணமாக குலாகு மற்றும் பிற மூத்த மங்கோலியர்கள் தங்களது தாயகத்திற்குத் திரும்பி மோங்கேவுக்கு அடுத்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெளியேறியதாக எண்ணினர். எனினும் குலாகுவின் காலத்தில் எழுதப்பட்ட, 1980களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் இது உண்மையல்ல என நமக்குக் கூறுகின்றன. அவ்வளவு பெரிய இராணுவத்தை அந்த இடத்தில் குலாகுவால் வைத்திருக்க முடியவில்லை. குதிரைகளுக்குத் தீவனங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு விட்டன. மேலும் கோடைகாலத்தில் குளிரான நிலப் பகுதிகளுக்குச் செல்வது என்பது மங்கோலியப் பாரம்பரியம் ஆகும். குலாகுவாலேயே இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.[27]

பாலத்தீனத்துக்குக் குதூஸ் முன்னேறுதல்[தொகு]

குலாகு கிளம்பிய செய்தியை அறிந்த அடிமை வம்சச் சுல்தான் குதூஸ் உடனடியாக ஒரு பெரிய இராணுவத்தைக் கெய்ரோவில் திரட்டினார். பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்தார்.[17] ஆகத்து மாதத்தின் பிற்பகுதியில் கித்புகாவின் படைகள் தங்களது தளமான பால்பேக்கிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டனர். கலிலேயக் கடலின் கிழக்குப் பகுதியில் கீழ் கலிலேயாவுக்குச் சென்றனர். அடிமை வம்சச் சுல்தான் குதூஸ் பிறகு மற்றொரு அடிமை வம்சத்தவரான பைபர்சுடன் கூட்டணி வைத்தார். மங்கோலியர்கள் திமிஷ்கு மற்றும் பெரும்பாலான பிலத் அல்-ஷம் பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பெரிய எதிரியை எதிர்நோக்கி இருந்த சமயத்தில் பைபர்சு குதுஸுடன் இணைந்துகொண்டார்.[13]

சிலுவைப் போர் அரசுகள் மீதான மங்கோலியப் படையெடுப்பு[தொகு]

மங்கோலியர்கள் ஒரு பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்தனர் அல்லது குறைந்தது அக்ரேவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சிலுவைப்போர் எருசேல இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளை அடிபணியவாவது கோரினர். ஆனால் திருத்தந்தை நான்காம் அலெக்சாந்தர் அதற்குத் தடை விதித்தார். பிராங்குகள் மற்றும் மங்கோலியர்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் அதிகமானது. சிதோனின் சூலியன் கித்புகாவின் பேரன்களில் ஒருவர் இறப்பதற்குக் காரணமான ஒரு நிகழ்வை ஏற்படுத்தினார். கோபமடைந்த கித்புகா சிதோனைச் சூறையாடினார். அக்ரேவின் சீமான்கள் மற்றும் எஞ்சிய சிலுவைப்போர் புறக்காவல் நிலையங்கள் மங்கோலியர்களால் தொடர்பு கொள்ளப்பட்டன. அதே நபர்களை மங்கோலியர்களுக்கு எதிராக இராணுவ உதவி கோருவதற்காக அடிமை வம்சத்தவர்களும் தொடர்பு கொண்டனர்.[13]

பிராங்குகளின் பாரம்பரிய எதிரிகளாக அடிமை வம்சத்தவர்கள் இருந்த போதிலும் அக்ரேவின் சீமான்கள் மங்கோலியர்களை அதிகப்படியான மற்றும் உடனடி அச்சுறுத்தலாகக் கருதினர். எனவே சிலுவைப் போர் வீரர்கள் இரண்டு படைகளுக்கும் ஆதரவின்றி கவனத்துடன் நடுநிலையாக இருக்கும் முடிவை எடுத்தனர்.[28] வழக்கத்திற்கு மாறான செயலாக, அவர்கள் எகிப்திய அடிமை வம்சத்தவர் வடக்கே தங்களது சிலுவைப்போர் அரசுகளின் வழியாகத் தொல்லைக்கு உட்படுத்தப்படாமல் கடக்கச் சம்மதித்தனர். அக்ரேவுக்கு அருகில் அவர்கள் இராணுவத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்ப முகாம் அமைத்து கொள்ளவும் கூட சம்மதித்தனர். யோர்தான் ஆற்றை மங்கோலியர்கள் கடந்த செய்தி வந்தபோது சுல்தான் குதூஸ் மற்றும் அவரது படைகள் தென்கிழக்கு திசையில் செசுரீல் பள்ளத்தாக்கில் இருந்த ஐன் ஜலுட்டின் ஊற்றை நோக்கிச் சென்றன.[29]

போர்[தொகு]

ஐன் ஜலுட் குறித்த ஓர் ஓவியம்.

முதன்முதலில் மங்கோலியர்கள் முன்னேறினர். அவர்களது படையில் மங்கோலிய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட சார்சியா இராச்சியம் மற்றும் சிசிலியாவின் ஆர்மீனிய இராச்சியத்தின் 500 துருப்புகள் உள்ளிட்ட துருப்புகள் இருந்தன. அந்த நிலப்பகுதியை அறிந்திருந்ததால் குதூஸ் நன்மை அடைந்திருந்தார். இதன் காரணமாகத் தனது படையில் பெரும்பாலானவற்றை உயர்நிலப் பகுதிகளில் மறைத்து வைத்தார். பைபர்சு தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி மங்கோலியர்களுக்குத் தூண்டில் இடலாம் என நம்பினார்.

இரண்டு இராணுவங்களும் பல மணி நேரங்களுக்குச் சண்டையிட்டன. மங்கோலியத் துருப்புக்களைக் கோபமூட்டுவதற்காக தாக்கி விட்டு ஓடும் தந்திரங்களைப் பைபர்சு செயல்படுத்தினார். அவர்களது துருப்புகளில் பெரும்பாலானவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பைபர்சு ஒரு தப்பியோடியவராகத் தனது வாழ்க்கையை முன்னர் இந்தப் பகுதியில் வாழ்ந்து இருந்ததால் அவருக்கு இப்பகுதியை பற்றி நன்கு தெரிந்திருந்தது. அவரே பெரும்பாலான போர்த் தந்திரங்களை திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. மங்கோலியர்கள் மற்றொரு கடினமான தாக்குதலை நடத்தியபோது, பைபர்சு மற்றும் அவரது வீரர்கள் கடைசியாகத் தோற்று ஓடுவதுபோல் ஓடி, மங்கோலியர்களை உயரமான நிலப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மரங்களிடையே மறைந்திருந்த அடிமை வம்சத்தவர்கள், மங்கோலியர்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். பைபர்சு மற்றும் அவரது துருப்புகள் தொடர்ந்து ஓடியதால் கோபப்பட்டிருந்த மங்கோலியத் தலைவர் கித்புகா ஒரு பெரும் தவறைச் செய்தார். தந்திரத்தைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக, தப்பி ஓடியவர்களின் பின் தனது அனைத்துத் துருப்புகளுடன் அணி வகுத்தார். மங்கோலியர்கள் உயரமான நிலப்பகுதிகளை அடைந்தபோது அடிமை வம்சத்தவர்கள் மறைவிலிருந்து வெளிவந்தனர். மங்கோலியர்கள் மீது அம்புகளை எய்தும், தங்களது குதிரைப்படையைக் கொண்டும் தாக்கினர். தாங்கள் அனைத்து பக்கங்களிலும் சூழப்பட்டதை மங்கோலியர்கள் உணர்ந்தனர். மேலும், மங்கோலியர்களின் சிரியக் கூட்டாளிகள் அடிமை வம்சத்தவர்கள் பக்கம் சேர்ந்தது இந்த போரின் ஒரு முக்கியமான கணம் என்ற கருதுகோளை திமோதி மே என்ற வரலாற்றாளர் கூறுகிறார்.[30]

இந்தச் சூழலில் இருந்து வெளியேற மங்கோலிய இராணுவமானது மிகக் கடினமாகவும், மிக ஆக்ரோஷமாகவும் சண்டையிட்டது. சற்று தொலைவில் தனது பாதுகாவலர்களுடன் குதூஸ் கவனித்துக் கொண்டிருந்தார். எப்படியாவது வெளியேறுவதற்கு ஒரு வழியைத் தேடிய மங்கோலியர்களின் தாக்குதலால் அடிமை வம்சத்தவர்களின் இராணுவத்தின் இடது பிரிவானது கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததைக் கண்டு, போர்க் களத்தை நோக்கி வேகமாக விரைந்தார். தனது இராணுவத்தை நிலையாகப் போரிடுமாறு அறிவுறுத்தினார். பலவீனமான பகுதியை நோக்கித் தனது பிரிவுடன் விரைந்தார். மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிசன் நகருக்கு அருகே இருந்த பகுதிக்குத் தப்பினர். அவர்களை குதூஸின் படைகள் துரத்தின. ஆனால் மங்கோலியர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து போர்க்களத்திற்கு வந்தனர். வெற்றிகரமாகப் பதில் தாக்குதல் நடத்தினர். எனினும் போரானது மம்லூக்குகள் பக்கம் சாய்ந்தது. மம்லூக்குகள் புவியியல் மற்றும் உளவியல் அனுகூலத்தைக் கொண்டிருந்தனர். கடைசியாகச் சில மங்கோலியர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கித்புகா மற்றும் கிட்டத்தட்ட அப்பகுதியில் இருந்த எஞ்சிய மங்கோலிய இராணுவம் முழுவதும் அழிந்தது.

போருக்குப் பிறகு[தொகு]

மங்கோலிய இராணுவம் ஐன் ஜலுட்டில் தோல்வியடைந்த தகவலை அறிந்ததற்குப் பிறகு பிடிக்கப்பட்டிருந்த அலெப்போ மற்றும் திமிஷ்குவின் கடைசி அய்யூப்பிய அமீரான அன் நசீர் யூசுப் மற்றும் அவரது சகோதரரை மரண தண்டனைக்கு உட்படுத்த குலாகு கான் ஆணையிட்டார்.[31] எனினும் ஐன் ஜலுட் போர் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு திமிஷ்குவை மம்லூக்குகள் கைப்பற்றினர். ஒரு மாதத்திற்குள்ளாகவே அலெப்போவையும் கைப்பற்றினர்.

ஐன் ஜலுட் வெற்றிக்குப் பிறகு கெய்ரோவிற்குத் திரும்பும் வழியில் பைபர்சு தலைமையிலான சதித் திட்டத்தின்படி பல அமீர்களால் குதூஸ் கொல்லப்பட்டார்.[32] பைபர்சு புதிய சுல்தானானார். உள்ளூர் அய்யூப்பியர்கள் அடிமை வம்சத்தவர்களுக்கு விசுவாசமாக இருப்பதென உறுதி எடுத்தனர். பின்னர் ஓம்சு நகரில் 6,000 பேர் அடங்கிய மற்றொரு மங்கோலியப் படையைத் தோற்கடித்தனர். இதன் மூலம் சிரியா மீதான முதல் மங்கோலியச் சோதனை ஓட்டம் முடித்து வைக்கப்பட்டது. 1291ஆம் ஆண்டின் முடிவில் பைபர்சு மற்றும் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் திருநாட்டில் இருந்த கடைசிச் சிலுவைப்போர் அரசுகளைக் கைப்பற்றினர்.

இந்தப் போரில் கித்புகா பிடிக்கப்பட்டார். அடிமை வம்சச் சுல்தான் பைபர்சு முன் விலங்கிடப்பட்ட கித்புகா கொண்டுவரப்பட்டார். சுல்தானை எதிர்த்து நின்றார். வெற்றி பெற்ற அவர்களுக்கு நிகழப்போகும் மங்கோலியப் பழிவாங்கல் பற்றிக் கூறினார். தன் தலைவனுக்குத் தான் என்றுமே எவ்வாறு விசுவாசமாக இருந்தார் என்பதையும், அதேநேரத்தில் அடிமை வம்சத்தவர்கள் தங்களது சுல்தான் குதூசை எவ்வாறு பைபர்சின் தலைமையில் கூட்டுச் சதி செய்து கொன்றார்கள் என்பதையும் கூறி அடிமை வம்ச அமீர்களை இகழ்ந்தார்.[33] முதிய அடிமை வம்சத்தவரான ஜமாலல்தீன் அகோசு அல் சம்சியின் கைகளால் கித்புகா படுகொலை செய்யப்பட்டார்.

அடிமை வம்ச வரலாறுகள் கித்புகாவைப் பற்றி மரியாதையுடன் பேசுகின்றன. ஐன் ஜலுட் போரில், மங்கோலியர்கள் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தபோதும், பின்வாங்கக் கித்புகா மறுத்தார். பின்வாங்கி அவமானப்படுவதற்குப் பதிலாக போரில் மடியத் தீர்மானித்தார். இதனால் வரலாறுகள் இவரை மாவீரனாகக் கருதுகின்றன. கித்புகாவின் மரணத்திற்குக் குலாகு பழிவாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மங்கோலியத் தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கேவுடனான உட்புறச் சண்டை பழி வாங்க விடாமல் குலாகுவைத் தடுத்தது. கித்புகாவின் மரணம் மற்றும் ஐன் ஜலுட் போரில் மங்கோலியர்களின் தோல்வி ஆகியவை மங்கோலியப் பேரரசின் மேற்கு நோக்கிய விரிவின் முடிவின் தொடக்கமாக அமைந்தன. மங்கோலியர்கள் அறுதியாகத் தோற்கடிக்கப்பட்டு, அத்தோல்விக்குப் பழிவாங்காத முதல் நிகழ்வு இது தான். எனினும், மங்கோலியர்கள் தொடர்ந்து சிரியா, சப்பான், அங்கேரி, போலந்து மற்றும் தென்கிழக்காசியா மீது அடுத்த பல தசாப்தங்களுங்குத் தொடர்ந்து படையெடுத்தனர்.[34]

மங்கோலியர்களுக்குள்ளே ஏற்பட்ட சண்டைகள் ஐன் ஜலுட்டில் ஏற்பட்ட முக்கியத் தோல்விக்கு அடிமை வம்சத்தவர்களைப் பழிவாங்க குலாகு கான் தனது முழு சக்தியையும் பயன்படுத்துவதைத் தடுத்தன. ஈல்கானரசுக்கு வடக்கே இருந்த தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கே கான் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாமின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமான அப்பாசியக் கலீபகத்தைத் தனது தம்பி குலாகு அழித்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். இஸ்லாமிய வரலாற்றாளரான ரசீத்தல்தீன், சீனாவில் மோங்கே இறந்ததை அறியாத பெர்கே, மோங்கே கானுக்கு பாகுதாது மீதான குலாகுவின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: "அவன் (குலாகு) முஸ்லிம்களின் அனைத்து நகரங்களையும் சூறையாடி விட்டான். கலீப்பையும் கொன்றுவிட்டான். கடவுளின் துணையோடு ஏராளமான அப்பாவி மக்களின் இரத்தத்திற்கு நான் அவனிடம் பதில் கேட்பேன்."[35] பெர்கே ஒரு முஸ்லிம் மற்றும் அவருக்கு குலாகுவைப் பிடிக்காது என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அடிமை வம்சத்தவர்கள் கவனமாகப் பெர்கே மற்றும் அவரது கானரசுடன் தங்களது உறவை வலுப்படுத்தினார்.

ஐன் ஜலுட்டிற்குப் பிறகு, அலெப்போவிலிருந்த அடிமை வம்சத்தவர்களைத் தாக்குவதற்கான தனது ஒரே முயற்சியில், திசம்பர் 1260ல் குலாகுவால் இரண்டு தியுமன்கள் அடங்கிய ஒரு சிறிய இராணுவத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. கித்புகாவைக் கொன்றதற்குப் பழிவாங்க அவர்கள் ஏராளமானவர்களைக் கொன்றனர். ஆனால் இரு வாரங்களுக்குப் பிறகு எந்த முன்னேறத்தையும் அடையாத காரணத்தால் பின்வாங்கினர்.[36]

பெரிய கான் யாரென்ற பிரச்சனையில், கடைசியாகக் குப்லாய் கான் கடைசிப் பெரிய கானாகப் பதவியேற்ற பிறகு, குலாகு தனது நிலங்களுக்கு 1262ஆம் ஆண்டு வந்தார். அடிமை வம்சத்தவர்களைத் தாக்க மற்றும் ஐன் ஜலுட்டிற்குப் பழிவாங்கத் தனது இராணுவங்களைத் திரட்டினார். எனினும் பெர்கே தொடர்ச்சியான பல தாக்குதல்களை நடத்தி குலாகுவை லெவண்ட் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி அவரைச் சந்திப்பதற்காக இழுத்தார். 1263ஆம் ஆண்டு காக்கேசியாவிற்கு வடக்கே நடத்திய ஒரு படையெடுப்பு முயற்சியில் குலாகு கடும் தோல்வியைச் சந்தித்தார். இப்போர் தான் மங்கோலியர்களுக்கு இடையிலான முதல் வெளிப்படையான போர். ஒன்றுபட்ட பேரரசின் முடிவிற்கு இது அறிகுறியாக அமைந்தது. 1265ஆம் ஆண்டு குலாகு கான் இறந்தார். அவருக்குப் பின் அவர் மகன் அபகா ஆட்சிக்கு வந்தார்.

மம்லூக்குகள் மங்கோலியர்களை ஒரு போரைத் தவிர மற்ற அனைத்து போர்களிலும் தோற்கடித்தனர். ஐன் ஜலுட் போரைத் தவிர இரண்டாவது ஓம்சு யுத்தம், எலுபிசுதான் யுத்தம், மற்றும் மர்ஜ் அல் சபர் யுத்தம் ஆகிய போர்களில் மங்கோலியர்கள் மம்லூக்குகளிடம் தோல்வியடைந்தனர். மம்லூக்குகளுடனான ஐந்து போர்களில் மங்கோலியர்கள் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்தனர். வாடி அல் கசுநதர் போரில் மட்டும் மங்கோலியர்கள் வெற்றி பெற்றனர்.[37] மங்கோலியர்கள் மீண்டும் சிரியாவுக்குத் திரும்பி வரவில்லை.

மரபு[தொகு]

பல்வேறு மொழிகளில் உள்ள ஏராளமான ஆதாரங்கள், மங்கோலிய வரலாற்றாளர்களைப் பொதுவாகப் பேரரசின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே காணச் செய்தன. அப்பார்வையின் படி, ஐன் ஜலுட் போரானது ஏராளமான கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான வரலாற்றாளர்கள் மங்கோலியர்களின் முன்னேற்றமானது நிரந்தரமாக நிறுத்தப்பட்ட முதல் நிகழ்வை கொண்ட ஒரு சகாப்தப் போர் என்று இந்த போரைக் கருதினர். மேலும் மங்கோலியர்களின் முதல் தோல்வி என்று கூட கருதினர்.[13][38]

ஐன் ஜலுட் போருக்கு முன்னர், மங்கோலிய ஒருங்கிணைப்புப் போர்களின் போது, சமுக்கா மற்றும் கெரயிடுகளிடம் தெமுசினின் தோல்விகளைத் தவிர்த்தாலும் கூட, மங்கோலியர்கள் பலமுறை தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். 1215 மற்றும் 1217ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மங்கோலியத் தளபதி போரோகுலா, சைபீரிய துமத் பழங்குடியினரால் பதுங்கியிருந்து தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதன் காரணமாகச் செங்கிஸ் கான் தோர்பேய் தோக்சினை அனுப்பினார். அவர் உத்திகள் மூலம் பழங்குடியினத்தை வென்றார்.[39] 1221ஆம் ஆண்டு மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசை வெற்றிகொண்டதன் ஒரு பகுதியான பர்வான் போரின் போது சிகி குதுகு, சலாலத்தீனால் தோற்கடிக்கப்பட்டார். இதன் விளைவாகச் செங்கிஸ் கான் தானே படைகளுடன் சுல்தான் சலாலத்தீனை போர் செய்து சிந்து ஆற்றுப் போரில் தோற்கடிக்க வேண்டி வந்தது. ஒக்தாயி கானின் ஆரம்ப கால ஆட்சியின் போது அவரது தளபதி தோல்கோல்கு, சின் தளபதிகள் வன் என்-யி மற்றும் புவாவால் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டார். இதற்குப் பதிலளிக்க, ஒக்தாயி பிரபலமான சுபுதையை அனுப்பினார். கடுமையான எதிர்ப்பை சந்தித்த பிறகு, மங்கோலியர்கள் தங்களது முழு இராணுவத்தையும் கொண்டுவந்து சின் பேரரசைத் தனித்தனியாக ஒக்தாயி, டொலுய் மற்றும் சுபுதை தலைமையிலான இராணுவங்கள் மூலம் சுற்றி வளைத்தனர்.[40] இறுதியாகச் சின் இராணுவங்கள் தோற்கடிக்கப்பட்டன. 1233இல் சுபுதை கைபேங்கைக் கைப்பற்றினார். சின் அரசமரபும் திறம்பட அழிக்கப்பட்டது.

ஐன் ஜலுட் போர் தான் முதன் முதலில் ஒரு மங்கோலியப் படையானது தோற்கடிக்கப்பட்டு, தோல்விக்குப் பழி தீர்க்க ஒரு வலிமையான படையுடன் உடனே திரும்பி வராத நிகழ்வாகும். இந்த போர் மற்ற போர்களுடன் கவனிக்கப்படும் பொழுது சிறியதெனினும், எதிர்கால மங்கோலிய விரிவாக்க முயற்சிகளுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை வெளிக்காட்டியது. தாக்கவோ அல்லது பழி தீர்க்கவோ முற்படும் மங்கோலியப் படைகள் அடிக்கடி ஒரு முக்கியக் கான் இறப்பதாலோ அல்லது மற்ற மங்கோலிய கானரசுகளுடன் சண்டையிடுவதன் காரணமாகவோத் தங்களது கவனத்தில் இருந்து திசை மாற்றப்பட்டன.

13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளின் அரேபிய இராணுவக் கட்டுரைகளின் படி, ஐன் ஜலுட் போரில் மங்கோலியர் இராணுவங்களைப் பயமுறுத்த மம்லூக் பிரிவினர் கைப்பீரங்கிகளைப் பயன்படுத்தினர். இதன் மூலம் கைப்பீரங்கி பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட முதல் போர் இதுதான். அக்கையேடுகளில் பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.[18][22][41][19][20][21]

ஒரு சமீபத்திய ஆய்வின்படி மங்கோலியர்களின் தோல்விக்கு ஒரு காரணம், குறுகிய காலத்திற்கு நீடித்த காலநிலை மாறுபாடு ஆகும். அக்காலநிலை மாறுபாடு சில ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்துத் சிதறிய சமாலசு எரிமலையால் ஏற்பட்டது. "கி. பி. 1260ஆம் ஆண்டின் கோடை காலத்தில் கதகதப்பான மற்றும் வறண்ட காலநிலை உருவானது, […] இது மங்கோலியர்கள் எளிதாகச் செயல்படுவதைத் தடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம். இதன் காரணமாக ஏராளமான மங்கோலியர்கள் மொத்தமாக அப்பகுதியிலிருந்து பின்வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது மம்லூக்குகளின் வெற்றியில் ஒரு பங்காற்றியது."[42]

புனைவு[தொகு]

இராபர்ட்டு ஷியாவின் வரலாற்றுப் புதினமான சரசன், ஐன் ஜலுட் போரைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடந்த சுல்தான் குதூஸின் அரசியல் கொலையைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Encyclopedia Grammatica
 2. 2.0 2.1 John, Simon (2014). Crusading and warfare in the Middle Ages : realities and representations. Burlington, VT: Ashgate Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4724-0741-2.
 3. D. Nicolle, The Mongol Warlords: Genghis Khan, Kublai Khan, Hülägü, Tamerlane. Plates by R. Hook, Firebird books: Pole 1990, p. 116.
 4. Waterson, p. 75
 5. Fisher, William Bayne; Boyle, J. A.; Boyle, John Andrew; Frye, Richard Nelson (1968). — Cambridge: Cambridge University Press, 1968. — Vol. 5: The Saljuq and Mongol Periods. — P. 351. — 778 p. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-06936-6. பார்க்கப்பட்ட நாள் October 17, 2020.
 6. Cowley, p.44, states that both sides were evenly matched at 20,000 men. Cline says that "In short, the . . . armies that were to meet at 'Ayn Jalut were probably of approximately the same size, with between ten thousand and twenty thousand men in each.", p. 145. Fage & Oliver, however, state that "the Mongol force at Ayn Jalut was nothing but a detachment, which was vastly outnumbered by the Mamluk army", p. 43.
 7. Smith Jr, J. M. (1984). Ayn Jālūt: Mamlūk Success or Mongol Failure?. Harvard Journal of Asiatic Studies, p.310.
 8. 8.0 8.1 Blair, S. (1995). A compendium of chronicles: Rashid al-Din's illustrated history of the world. Nour Foundation.
 9. John Masson Smith, Jr. (1984) Mongol Armies And Indian Campaigns, University of California, Berkeley.
 10. 10.0 10.1 "Battle of ʿAyn Jālūt". பார்க்கப்பட்ட நாள் October 17, 2020.
 11. "Battle of ʿAyn Jālūt". பார்க்கப்பட்ட நாள் October 17, 2020.
 12. Amitai-Preiss, p. 43
 13. 13.0 13.1 13.2 13.3 13.4 Tschanz, David W. "Saudi Aramco World : History's Hinge: 'Ain Jalut". Archived from the original on 2015-02-11. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
 14. "Battle of Ayn Jalut | Summary". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
 15. Hemmings, Jay (2019-02-28). "When The Egyptian Mamluks Crushed The Formerly Unstoppable Mongol Army". WAR HISTORY ONLINE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 Man, John (2006). Kublai Khan: From Xanadu to Superpower. London: Bantam Books. pp. 74–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-553-81718-8.
 17. 17.0 17.1 17.2 p. 424, 'The Collins Encyclopedia of Military History' (4th edition, 1993), Dupuy & Dupuy,
 18. 18.0 18.1 Ahmad Yousef al-Hassan (2005). "Transfer of Islamic Technology to the West Part III: Technology Transfer in the Chemical Industries; Transmission of Practical Chemistry". Archived from the original on November 20, 2016. பார்க்கப்பட்ட நாள் February 14, 2017.
 19. 19.0 19.1 Ahmad Y. al-Hassan (2003). "Gunpower Composition for Rockets and Cannon in Arabic Military Treatises in the Thirteenth and Fourteenth Centuries". ICON (International Committee for the History of Technology) 9: 1–30. பன்னாட்டுத் தர தொடர் எண்:1361-8113. 
 20. 20.0 20.1 Broughton, George; Burris, David (2010). "War and Medicine: A Brief History of the Military's Contribution to Wound Care Through World War I". Advances in Wound Care: Volume 1. Mary Ann Liebert. pp. 3–7. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1089/9781934854013.3 (inactive 2020-01-22). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934854-01-3. The first hand cannon appeared during the 1260 Battle of Ain Jalut between the Egyptians and Mongols in the Middle East.{{cite book}}: CS1 maint: DOI inactive as of சனவரி 2020 (link)
 21. 21.0 21.1 Books, Amber; Dickie, Iain; Jestice, Phyllis; Jorgensen, Christer; Rice, Rob S.; Dougherty, Martin J. (2009). Fighting Techniques of Naval Warfare: Strategy, Weapons, Commanders, and Ships: 1190 BC – Present. St. Martin's Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-55453-8. Known to the Arabs as midfa, was the ancestor of all subsequent forms of cannon. Materials evolved from bamboo to wood to iron quickly enough for the Egyptian Mamelukes to employ the weapon against the Mongols at the battle of Ain Jalut in 1260, which ended the Mongol advance into the Mediterranean world.
 22. 22.0 22.1 Ancient Discoveries, Episode 12: Machines of the East. History (U.S. TV channel). 2007. (Part 4 and Part 5)
 23. Halperin, Charles J. 2000. "The Kipchak Connection: The Ilkhans, the Mamluks and Ayn Jalut". Bulletin of the School of Oriental and African Studies, University of London 63 (2). Cambridge University Press: 229–45. https://www.jstor.org/stable/1559539.
 24. Tschanz, David W. "Saudi Aramco World : History's Hinge: 'Ain Jalut". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2007-09-25.
 25. René Grousset (1970). The Empire of the Steppes: A History of Central Asia. Rutgers University Press. pp. 361, 363. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-1304-1.
 26. Yunini, "Dhayl," Vol. 4, p. 93.
 27. Paul Meyvaert, “An Unknown Letter of Hulagu, Il-khan of Persia, to King Louis IX of France,” Viator 11 (1980): 258; 249: "Since it is our custom to prefer the cooler places of the snowy mountains in the heat of summer, we decided to return for a while to the mountains of Greater Armenia, especially as the greater part of the food and fodder had been consumed after the devastation of Aleppo and Damacsus. However, we left a few of our men behind to destroy any Assassin strongholds that were still standing. They lay in hiding because they were so few in number and the Babylonian dog mice came out of their caves and attacked them. Some, who disobeyed our orders, invaded French possessions and, receiving their deserts, were bitten by the aforementioned mice. Although revenge on these recreants would please us somewhat, and they have not caused any real harm, it is nevertheless our intention shortly to complete our plan against the said infidel Babylonians of the canine race exactly as we did against the other rebels."
 28. Morgan, p. 137.
 29. Bartlett, p. 253
 30. Timothy May, the Mongol Art of War (2016).
 31. Irwin 1999, ப. 616
 32. Although medieval historians give conflicting accounts, modern historians assign responsibility for Qutuz's assassination to Baibars, as Baibars had been promised Syria as a reward for his efforts in Ain Jalut, but when it was time to claim his prize, Qutuz commanded him to be patient. See Perry (p. 150), Amitai-Preiss (p. 47, "a conspiracy of amirs, which included Baybars and was probably under his leadership"), Holt et al. (Baibars "came to power with [the] regicide [of Qutuz] on his conscience"), and Tschanz. For further discussion, see article on "Qutuz".
 33. Runciman 1987, ப. 313.
 34. Amitai-Preiss, Reuven. Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281 (first edition). Cambridge: Cambridge University Press, 1998.
 35. The Mongol Warlords quotes Rashid al Din's record of Berke Khan's pronouncement; the quote is also found in Amitai-Preiss's The Mamluk-Ilkhanid War.
 36. Runciman 1987, ப. 314.
 37. Amitai-Preiss, Reuven (1995) Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281. Cambridge University Press, Cambridge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-46226-6 PAGE 1
 38. Jack Weatherford, Genghis Khan and the Making of the Modern World.
 39. Timothy May, The Mongol Empire: A Historical Encyclopedia, 203-4.
 40. Christopher P. Atwood, Pu'a's Boast and Doqolqu's Death: Historiography of a Hidden Scandal in the Mongol Conquest of the Jin.
 41. Al-Hassan, Ahmad Y. (2008). "Gunpowder Composition for Rockets and Cannon in Arabic Military Treatises In Thirteenth and Fourteenth Centuries". History Of Science And Technology In Islam. பார்க்கப்பட்ட நாள் November 20, 2016.
 42. Nicola Di Cosmo, Sebastian Wagner, Ulf Büntgen, Climate and environmental context of the Mongol invasion of Syria and defeat at ‘Ayn Jālūt (1258–1260 CE).2021 Erdkunde, 75, 2, doi=10.3112/erdkunde.2021.02.02 |url=https://www.erdkunde.uni-bonn.de/archive/2021/climate-and-environmental-context-of-the-mongol-invasion-of-syria-and-defeat-at-2018ayn-jalut-125820131260-ce
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்_ஜலுட்_போர்&oldid=3813854" இலிருந்து மீள்விக்கப்பட்டது