ஐந்திணைகளும் உரிப்பொருளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐந்திணைகளும் உரிப்பொருளும்

திணை

‘திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது, நிலப்பரப்பு என்பது இதன் பொருள்’ என்று திணை என்னும் சொல்லுக்கு விளக்கம் தருகிறார் ந.சி.கந்தையா பிள்ளை. திணை என்ற சொல் சங்கப் பாடல்களில் குடி, குடியிருப்பு, கணம் ஆகிய பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. இப்பொழுது ‘ஒழுக்கம்’ என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது. ‘ஒழுக்கத்திணைத் திணை என்பாரும், நிலத்திணை திணை என்பாரும் இருபகுதியர் ஆசிரியர், அது பொருந்தாது. ஒழுக்கமே திணை எனப்படும்’ என்பதனால் திணை ஒழுக்கமே என்பது உறுதியாகிறது.

ஐந்திணை

தொல்காப்பியர் குறிப்பிடும் ஏழு அகத்திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை ஐந்திணைகளாகும்.

உரிப்பொருள்

அகப்பொருள் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருளும் பயின்று வரும். இவை மூன்றில் உரிப்பொருள்(நிலத்திற்கு உரிய பொருள்) என்பதே பாடலின் அடிக்கருத்து ஆகும். இம்மூன்று பொருளும் பாடல்களும் உண்டு. முதற்பொருளும் கருப்பொருளும் இன்றி உரிப்பொருள் மட்டுமே அமையும் பாடல்களும் உண்டு. முதலும் கருவும் இன்றிப் பாடல் அமையலாம். உரிப்பொருளின்றிப் பாடல் அமையாது. உரிப்பொருளே பாடலின் அடிப்படையாகும்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே. - தொல், அகம், 13

என்ற நூற்பாவில் ஐந்திணைகளுக்கான உரிப்பொருளை முறைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

ஐந்திணைகளும் உரிப்பொருளும்

குறிஞ்சியும் புணர்தலும் தலைவனும் தலைவியும் தனிமையில் ஒருவரை ஒருவர் கூடி மகிழும் நிலை புணர்தல் எனப்படும்.

முல்லையும் இருத்தலும் தலைவி, தலைவன் கூறிய பருவம் வரை தன் கற்புத்திறம் காத்து, அப்பருவம் வந்தவுடன் தன் தலைவனோடு இன்புற இல்லத்தில் இருக்கும் நிலை இருத்தல் ஆகும்.

மருதமும் ஊடலும் தலைவன் மாறுபட்டுப் போதல் இயல்பே. அவ்வாறு மாறுபட்டுப் போகிற தலைவனைத் தன் வழிப்படுத்துவதற்காகத் தலைவி கையாளுகிற கருவி ஊடல். வயல்நிலம் வாழ்வுக்கு வேண்டிய பொருள் தந்து வளம் சேர்ப்பது போலவே ஊடலும் இன்பத்திற்கு மேலும் இன்பமூட்டி வாழ்வில் புத்தெழில் சேர்க்கிறது.

நெய்தலும் இரங்கலும் கடல்மேல் சென்ற தலைவன் வராததால், அவன்நிலை குறித்து தலைவிக்கு ஏற்படும் ஏக்கம் இரங்கல் ஆகும்.

பாலையும் பிரிவும் பாலை எனத் தயலம் அமையாது எல்லா நிலத்தின் திரிபாகவும் இருப்பது போன்றே பிரிவும் எல்லா நிலையிலும் அமையும். கூடிய பின் பிரிதலும், இல்லத்திலிருந்துபின் பிரிதலும், ஊடலின் காரணமாகப் பிரிதலும், பிரிவின் நிமித்தமாகவே இரங்கலும் ஏற்படுகின்ற காரணத்தினால் பிரிவு என்பது பாலை என வழங்கலாயிற்று.

முடிவுரை

திணை என்பது ஒழுக்கம் எனக் கொள்ளின் அது ஐந்திணையில் உரிப்பொருள் என்றே சிறப்பித்துச் சொல்லலாம். உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே -தொல்காப்பியர். மாறாததும் உயரியதும் மாண்பு மிக்கதாய் இருந்து தமிழரின் இன்பியல் வாழ்வின் நிலைகளை எடுத்தியம்பும் பாங்கு இவ்வைந்திணை நெறிகளுக்கு உண்டு.

[1] [2]

[3]

  1. திராவிட இந்தியா - த.சி.கந்தையாபிள்ளை
  2. இறையனார் அகப்பொருள் உரை
  3. தொல்காப்பியம் பொருளதிகாரம்