ஐதரோபுளோரோகார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐதரோபுளோரோகார்பன்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐதரோபுளோரோகார்பன்கள் (Hydrofluorocarbons) என்பவை புளோரின் மற்றும் ஐதரசன் அணுக்களைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் ஆகும். பொதுவாக இவை கரிமபுளோரின் சேர்மங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. காற்றுப் பதனப்படுத்தலில் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட டைகுளோரோடைபுளோரோமீத்தேன்ஆர்-12 எனப்படும் குளோரோபுளோரோகார்பன், ஆர்-21 எனப்படும் ஐதரோகுளோரோபுளோரோகார்பன் போன்ற குளிர் பதனப் பொருள்களுக்கு மாற்றாக இவை பயன்படுத்தப்படுகின்றன [1]. ஆர்-12, ஆர்-21 போல இவை ஓசோன் அடுக்கை பாதிப்பதில்லை. ஆனால் இவை புவி வெப்பமடைவதற்கு பங்களிக்கின்றன. இவற்றின் வளிமண்டல செறிவும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கான பங்களிப்பும் விரைவாக அதிகரித்து வருகின்றன. இதனால் விளையும் புவியின் கதிர்வீச்சு சமநிலை ஏற்றத்தாழ்வுகள் குறித்து சர்வதேச கவலையை ஏற்படுத்துகின்றன.

சில C–F பிணைப்புகளைக் கொண்டுள்ள புளோரோகார்பன்கள் அவற்றின் பெற்றோர் ஐதரோகார்பன்களைப் போலவே செயல்படுகின்றன. ஆனால் இவற்றின் வினைத்திறனை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்ற இயலும். உதாரணமாக யுராசில் மற்றும் 5-புளோரோயுராசில் இரண்டும் நிறமற்றும் உயர்-உருகு படிகத் திண்மங்களாகவும் உள்ளன. ஆனால் இரண்டாவதாகக் கூறப்பட்ட 5-புளோரோயுராசில் சேர்மம் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகும். மருந்துவகைப் பொருட்களில் இத்தகைய C-F பிணைப்புகளின் மாற்றத்தை முன்கணித்து பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [2]. பல மருந்துகள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்கள் ஒரே ஒரு புளோரின் மையத்தை அல்லது ஒரு டிரைபுளோரோமெத்தில் குழுவைக் கொண்டிருக்கின்றன. பாரிசு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பசுமை இல்ல வாயுக்களைப் போல அல்லாமல் ஐதரோபுளோரோகார்பன்களுக்கென்று வேறு அனைத்துலக பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன [3].

செப்டம்பர் 2016 இல், உலகளாவிய அளவில் வனப்பகுதிகளில் ஐதரோபுளோரோகார்பன்கள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று நியூயார்க் பிரகடனம் வலியுறுத்தியது [4]. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, காலநிலை மாற்றத்திற்கு இந்த இரசாயனங்கள் அளிக்கும் பங்களிப்பு குறித்து ருவாண்டா நாட்டின் கிகாலியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உச்சி மாநாடு சந்திப்பு பேச்சுவார்த்தைகளில் 197 நாடுகள் கலந்து கொண்டன. படிப்படியாக ஐதரோபுளோரோகார்பன்களின் பயன்பாட்டை சட்டப்படியாக குறைப்பது என்ற ஒரு திருத்தம் மாண்ட்ரீயல் நெறிமுறையில் மேற்கொள்ளப்பட்டது [5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Milman, Oliver (22 September 2016). "100 countries push to phase out potentially disastrous greenhouse gas". The Guardian (London, UK). https://www.theguardian.com/environment/2016/sep/22/100-countries-phase-out-hydrofluorocarbons-greenhouse-gas. 
  2. G. Siegemund, W. Schwertfeger, A. Feiring, B. Smart, F. Behr, H. Vogel, B. McKusick "Fluorine Compounds, Organic" in "Ullmann's Encyclopedia of Industrial Chemistry" 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a11_349
  3. Davenport, Carol (23 July 2016). "A Sequel to the Paris Climate Accord Takes Shape in Vienna". New York Times. https://www.nytimes.com/2016/07/24/world/europe/vienna-sequel-paris-climate-accord.html. 
  4. "The New York Declaration of the Coalition to Secure an Ambitious HFC Amendment". Washington, DC: US Department of State. 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  5. Johnston, Chris; Milman, Oliver; Vidal, John (15 October 2016). "Climate change: global deal reached to limit use of hydrofluorocarbons". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
  6. "Climate change: 'Monumental' deal to cut HFCs, fastest growing greenhouse gases". BBC News. 15 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
  7. "Nations, Fighting Powerful Refrigerant That Warms Planet, Reach Landmark Deal". New York Times. 15 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோபுளோரோகார்பன்&oldid=2750128" இலிருந்து மீள்விக்கப்பட்டது