ஐசுலாந்து மீதான படையெடுப்பு
ஐசுலாந்து மீதான படையெடுப்பு (Invasion of Iceland) என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐசுலாந்து மீது பிரித்தானியப் படைகள்[1] படையெடுத்து ஆக்கிரமித்த நிகழ்வைக் குறிக்கிறது. மே 10, 1940 அன்று நடைபெற்ற இப்படையெடுப்பு ஃபோர்க் நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் ஆரம்பித்த போது மிகப்பெரும்பாலான இசுக்கேண்டிநேவிய நாடுகள் நடு நிலை வகித்து வந்தன. அச்சு மற்றும் நேசக் கூட்டணிகளில் இடம்பெறுவதைத் தவிர்த்தன. ஆனால் இரு அணிகளும் தமது போர் முயற்சிக்கு சாதகமாக இருக்க இந்நாடுகளை வலியுறுத்தி வந்தன. ஏப்ரல் 9, 1940 அன்று நாசி ஜெர்மனி வெளிப்படையாக டென்மார்க் மற்றும் நார்வே மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிவிட்டது. நேச நாடுகளும் இதற்கு எதிர்வினையாக பரோயே தீவுகள், ஐசுலாந்து ஆகியவற்றை ஆக்கிரமித்தன.
மே 10, 1940 அன்று ஐசுலாந்து மீதான நேச நாட்டு படையெடுப்பு தொடங்கியது. இதில் பிரித்தானிய வேந்திய மரைன் படைப்பிரிவுகளும் கனடியப் பிரிவுகளும் பங்கேற்றன. ஐசுலாந்திய தலைநகர் ரெய்க்கியாவிக்கில் கடல்வழியாகத் தரையிறங்கிய இப்படைகளை ஐசுலாந்து அரசும் மக்களும் நேரடியாக எதிர்க்கவில்லை. ஆனால் தங்கள் நடுநிலையை மதிக்காமல் படையெடுத்தை வன்மையாகக் கண்டித்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த, ஐசுலாந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என பிரிட்டன் அறிவித்தது. மேலும் படையெடுப்பினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்குதல், ஐசுலாந்துக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள், போர் முடிந்தவுடன் படைகளை விலக்கிக் கொள்வதாக உறுதிமொழி அளித்தல் போன்ற சமாதான நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. இதன் பின்னர் ஐசுலாந்திய அரசும் மக்களும் ஆக்கிரமிப்பு படைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
மே 10ம் தேதி ஐசுலாந்தில் முதலில் தரையிறங்கியது 746 பேர் கொண்ட ஒரு சிறு அடையாள ஆக்கிரமிப்புப் படை மட்டுமே[2]. மே 17ம் தேதி அவர்களுக்குத் துணையாக மேலும் 4000 பிரித்தானியப் படைவீரர்கள் ஐசுலாந்தில் தரையிறங்கினர். படிப்படியாக இவ்வெண்ணிக்கை 25,000 ஆக உயர்த்தப்பட்டது. ஜூலை 7, 1941ல் பிரித்தானியப் படைகள் ஐசுலாந்தைக் காலி செய்துவிட்டன. அவற்றுக்குப் பதிலாக அமெரிக்கப் படைகள் ஐசுலாந்தை ஆக்கிரமித்தன. அதிகாரப்பூர்வமாக நடுநிலைக் கொள்கையை ஐசுலாந்து கைவிடாவிட்டாலும், போரில் அமெரிக்கர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தது. போர் முடிந்ததும் நேச நாட்டுப் படைகள் ஐசுலாந்தைக் காலி செய்து விட்டன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
- ↑ Bittner 41.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Franklin D. Roosevelt's message to Congress on the US occupation of Iceland" US State Department (7 சூலை 1941)