ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 64°08′35″N 21°54′53″W / 64.142952°N 21.914603°W / 64.142952; -21.914603

ஐசிலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது1997
அமைவிடம்லவுகவேகுர் 116, ரெய்க்யவிக், ஐசுலாந்து
சேகரிப்பு அளவு280 ஆண்குறிகள்[1]
170 cm (67 in)–2 mm (0.08 in)
வருனர்களின் எண்ணிக்கைஆண்டுக்கு 11,000 [2]
வலைத்தளம்www.phallus.is
The Icelandic Phallological Museum's sign
திமிங்கிலங்களின் ஆண்குறிகள்

ஐசுலாந்தின் ஆண்மையியல் அருங்காட்சியகம் (Icelandic Phallological Museum, இசுலேன்சுக மொழி:Hið Íslenzka Reðasafn), ஐசுலாந்தின் ரெய்க்யவிக்கில் ஆண்குறிகளையும் ஆண்குறி உள்ளுறுப்புக்களையும் காட்சிப்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியாகும். 93 உயிரினங்களின் 280 மாதிரிகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளது; திமிங்கலங்களிலிருந்து 55 ஆண்குறிகளும் சீல்களிலிருந்து 36 ஆண்குறிகளும் நிலப்பரப்பு பாலூட்டிகளிலிருந்து 118 ஆண்குறிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2011 சூலையில் தனது முதல் மனித ஆண்குறியைப் பெற்றது. உறுதிமொழி கொடுத்திருந்த நான்கு கொடையாளிகளிலிருந்து ஒருவரிடமிருந்து பெறப்பட்டது. கொடையாளியின் உடலில் இருந்து ஆண்குறியைப் பிரித்தெடுப்பது திட்டமிட்டபடி செல்லாததால் பழுப்புநிற வாடி வதங்கிய சதைத்துண்டமாக பார்மால்டிஹைடு ஜாடி ஒன்றில் ஊறவைக்கப்பட்டுள்ளது. இன்னமும் "இளைய வயதுக்காரரின் பெரிய மற்றும் நல்ல" ஒன்றிற்காக அருங்காட்சியகம் தேடி வருகிறது.[2]

சிகுரோர் யார்டார்சான் என்ற ஆசிரியரால் 1997இல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை அவரது மகன் யோர்ட்டூர் கிசுலி சிகுரோசான் நடத்தி வருகிறார். சிகுரோருக்கு சிறுவயதில் கொடுக்கப்பட்ட எருதின் ஆண்குறியிலிருந்து வேயப்பட்ட மாட்டுச் சாட்டையே இத்தகைய ஆண்குறிகளில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது. ஐசுலாந்திலுள்ள விலங்குகளின் உறுப்புக்களை நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சேகரித்தார். 170 cm (67 in) நீளமுள்ள நீல திமிங்கலத்தின் ஆண்குறியின் முனையிலிருந்து, உருப்பெருக்கும் கண்ணாடி மூலமாக மட்டுமே காணக்கூடிய 2 mm (0.08 in) நீளமுள்ள வெள்ளெலியின் ஆண்குறி எலும்பு வரை சேகரித்துள்ளார். ஐசுலாந்து நாட்டுவழக்கில் காணவியலாது எனக் கூறப்படுகின்ற எல்வ் மற்றும் டிரால்கள் எனப்படும் இன விலங்குகளின் ஆண்குறிகளையும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. எருதுகளின் விரைப்பைகளிலிருந்து உருவாக்கப்பட்ட விளக்குக் கவிப்புகள் போன்ற பல ஆண்மைவியல் கலைப்பொருட்களும் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு பல்லாயிரம் பார்வையாளர்களை, முக்கியமாக பெண்களை[3], ஈர்க்கின்ற சுற்றுலாத் தலமாக இது புகழ் பெற்று வருகிறது. பன்னாட்டு ஊடக கவனத்தையும் பெற்றுள்ள இந்த அருங்காட்சியகத்தைக் குறித்து தி பைனல் மெம்பர் என்ற கனடிய ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்குறிகளைக் குறித்த ஒருமுகப்படுத்தப்பட்ட, அறிவியல்சார்ந்த முறையில் ஆய்வு மேற்கொள்ள தனிநபர்களுக்கு இயலபடுத்துவதே தனது நோக்கமாக இந்த அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]