உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கே காமர்லிங்கு ஓன்னசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு
பிறப்புஐக்கே காமர்லிங்கு ஒன்னசு
(1853-09-21)21 செப்டம்பர் 1853
குரோனிங்கென், நெதர்லாந்து
இறப்பு21 பெப்ரவரி 1926(1926-02-21) (அகவை 72)
லெய்டன், நெதர்லாந்து
தேசியம்Netherlands
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லெய்டன் பல்கலைக் கழகம்
TU Delft
கல்வி கற்ற இடங்கள்Heidelberg University
University of Groningen
ஆய்வு நெறியாளர்Rudolf Adriaan Mees
Other academic advisorsRobert Bunsen
Gustav Kirchhoff
Johannes Bosscha
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Jacob Clay
Claude Crommelin
Wander de Haas
Gilles Holst
Johannes Kuenen
Remmelt Sissingh
Ewoud van Everdingen
Jules Verschaffelt
Pieter Zeeman
அறியப்படுவதுOnnes-effect, Superconductivity
விருதுகள்நோபல் பரிசு (1913)

ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு (Heike Kamerlingh Onnes) ( 1853 செப்டம்பர் 21- 1926 பிப்ரவரி 21) நெதர்லாந்து இயற்பியலறிஞர். தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் நீர்ம ஈலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் பரிசு பெற்றவர்.[1]

வரலாறு

[தொகு]

நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கென் என்ற ஊரில் 1853 செப்டம்பர் 21 ஆம் நாள் ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு பிறந்தார். இவர் தந்தை 'ஆரம் காமர்லிங்கு ஓன்னசு' என்ற இடச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் 'அன்னா கெர்தினார கோயர்சு'.[2] இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். 'ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு' 1887 -ல் 'மரியாஅட்ரியானா வில்லெமினா எலிசபெத்து பிசுலாவெல்ட்டு' என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு 'ஆல்பிரடு' என்ற ஒரு மகனும் உண்டு.

கல்வி

[தொகு]

இவர் பிறந்த ஊரிலேயே இருந்த ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கு மொழிப்பாடம் கற்பிக்கப்படவில்லை. எனவே பள்ளி நேரம் போக, பிற நேரங்களில், அப்பள்ளியின் இயக்குநர், பின்னாளில் வேதியல் பேராசிரியராகப் புகழ்பெற்ற ஜே. எம். லெய்டன்வான் பெம்மலென் என்பவரிடம், கிரேக்க இலத்தீன் மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.

1870 -ல் குரோனிங்கென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்ற போது உட்கரெட்டு பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆவி அடர்த்தி என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் 1871 -இல் இடாய்ச்சுலாந்தில் உள்ள ஐடல்பர்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் புன்சன் மற்றும் கிர்க்கார்ப் என்ற அறிவியலறிஞர்கள் ஆவர். இராபர்த்து கிர்க்காப்பு என்ற இடாய்ச்சுலாந்திய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்கு ஓன்னசு பணி புரிந்தார்.

தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் 1878 -ல் முதுகலைப் பட்டமும், பின்னர் 1879 -ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ' புவியியல் சுழற்சிக்கான புதிய நிறுவல்கள் '(New proofs for the rotation of the earth) என்பதாகும்.

பணிகள்

[தொகு]

1878 -ல் லெப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பாஸ்சா என்ற அறிவியல் அறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். அதே நிலையில் 1881-1882 ஆம் ஆண்டுகளில் விரிவுரையாற்றுகின்ற வாய்ப்பும் கிடைக்கப்பெற்றார். இங்கு ' இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் பாய்பொருள்களின் பொதுக் கோட்பாடு ( General Theory of the nature of fluids from the perspective of Kinetic theory) என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். பாய்பொருள்களின் பொதுக் கோட்பாட்டை உருவாக்க அவற்றின் பருமனளவு, அழுத்தம், வெப்பநிலை ஆகிய அளவுகளின் சரியான அளவீடுகள் அவசியம் என்பதை உணர்ந்தார். அப்பொழுதுதான் தாழ்ந்த வெப்ப நிலைகளை அறிந்து செயல்படுவதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
1882 -ல் இவருக்கு 29 அகவை இருக்கும்போது இலெய்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியல் (experimental physics) துறையில் பேராசிரியராகவும், அங்குள்ள ஆய்வுச்சாலையின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இங்கு தாழ்ந்த வெப்பநிலைகளைப் பற்றிய ஆய்வுகளை மீண்டும் தொடங்கினார். இதற்கு தாழ்வெப்பநிலையியல் என்று பெயர்.[3] கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் (1882-1923) இதே இலெய்டன் ஆய்வுச்சாலையில் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தார்.

ஆய்வுகள்

[தொகு]

அக்காலத்தில் தாழ்ந்த வெப்பநிலையியல் என்பது புதிய துறையாகும். இவருக்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்ப நிலையில் திரவமாக்குவது என்பது நடைமுறைப் படுத்தப் படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்ட போது , பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். ஆக்சிசன், ஐதரசன், ஈலியம் முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார்.

இக்கால கட்டத்தில், திரவம் ஆவியாகும் போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது என்பதை சுவீடன் நாட்டு அறிவியலறிஞர் ஆர்.பி.ஃபிக்டெட் என்பவர் கண்டறிந்த்தார். அதே வருடத்தில் பிரெஞ்சு இயற்பியலாளர் எல்.பி கெயிட்லெட் என்பவர் அதிக அழுத்தத்திற்கு ஆக்சிசனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்ப நிலை உருவானதைக் கண்டறிந்தார். இறுதியாக, சே. பி. சூல்சு மற்றும் வில்லியம் தாம்சன்‎ (இலார்டு கெல்வின்) ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்பக் குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தார். 1895 இல் முனிச்சில் கார்ல் லிண்டே என்பவர் சூல்-தாம்சன் விளைவின் அடிப்படையில் வளிமத்தை நீர்மமாக்கும் கருவியை உருவாக்கினார்.

காமர்லிங்கின் கண்டுபிடிப்புகள்

[தொகு]

பிக்டெட், லிண்டே ஆகியோரின் முறைகளை ஒருங்கிணைத்து காமர்லிங்கு ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார். இதன் படி மற்ற வளிமங்களை நீர்மமாக்கும் ஆக்சிசனை, நீர்மமாக்கும் முறையில் வெற்றிகண்டார். ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்சிசனைத் நீர்மமாக்கினார். 1904 -இல் மிகப்பெரிய தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். 1908 -ல் ஆம்சன்-இலிண்டே சுழற்சி முறைப்படி சூல்- தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்பநிலையை 1 பாகைக்கும் குறைவாக்கும் (-273°) கருவியை வடிவைமைத்தார். இது இலெய்டனில் உள்ள 'பொயரால் அருங்காட்சியகத்தில்' வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1913 -ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1911 -ல் பாதரசம் , வெள்ளீயம், காரீயம் போன்ற தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை பற்றி ஆராய்ந்தார். 4.2 கெல்வின் அளவு வெப்ப நிலையில் மின்தடை சுழியாகும் என்பதை காமர்லிங்க்கும் அவரது உதவியாளர்களும் கண்டறிந்தனர்.[4] பாதரசம் இந்தப் புதிய நிலையை அடைந்து அதனுடைய மின் கடத்தும் தன்மை மிகச் சிறப்பாக அமைகிறது. இது மீ கடத்து நிலை (super conductivity)எனக் குறிப்பிடப்பட்டது.[5]

சிறப்புகள்

[தொகு]

லெய்டன் பல்கலைக் கழகத்தின் தாழ்ந்த வெப்பநிலை ஆய்வுக்கூடத்திற்கு காமர்லிங்கு ஓன்னசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1910 -ல் மத்யூக்கி பதக்கம், 1912 -ல் ரம்போர்டு பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. சந்திரனில் உள்ள ஒரு குழிப்பகுதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[6] ஆம்ஸ்டர்டாமின் ராயல் அறிவியல் கழகத்தில் தனது 30 வயதிலேயே இவர் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அனைத்துலக சங்கம் ஒன்றையும் இவர் நிறுவினார். நெதர்லாந்து அரிமா அணி, நெதர்லாந்து ஆரஞ்சு-நசாவ் அணி, நார்வே புனித ஆலாஃப் அணி, போலந்தின் போலேனியா ரெஸ்டிட்யூபா அணி ஆகியவற்றின் ஆணை அலுவலராகப் பணியாற்றினார்.

பெர்லின் பல்கலைக் கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. பவும்கார்டன் பரிசு, ஃப்ராங்க்ளின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. மாசுகோவில் உள்ள அறிவியல் நண்பர்கள் சங்கத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உரோம், இலண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களில் அயல்நாட்டு உறுப்பினராகவும் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் சங்கத்தில் மதிப்பியல் உறுப்பினராகவும் அமர்த்தப்பட்டார்.

அறிவியல் அறிஞராக இருப்பினும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் அதிக கவனம் செலுத்தினார், உதவிகள் தேவைப் பட்டவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார். முதல் உலகப் போருக்கு முன்பும், பின்பும் அறிவியலறிஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைய உதவினார்.

1926 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் லெய்டனில் சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டுப் பின் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Dirk van Delft, Freezing physics, Heike Kamerlingh Onnes and the quest for cold, edited by Edita KNAW, Amsterdam, 2007.
  2. "The Nobel Prize in Physics 1913: Heike Kamerlingh Onnes". Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  3. Matthiessen, A. Philosophical Transactions; 1862 and also Philosophical Transactions; 1864
  4. "Milestones:List of IEEE Milestones". IEEE Global History Network. IEEE. பார்க்கப்பட்ட நாள் 29 July 2011.
  5. The Discovery of Superconductivity
  6. Howard, Irmgard (2002). "H Is for Enthalpy, Thanks to Heike Kamerlingh Onnes and Alfred W. Porter". Journal of Chemical Education (ACS Publications) 79 (6): 697. doi:10.1021/ed079p697. Bibcode: 2002JChEd..79..697H. http://pubs.acs.org/doi/abs/10.1021/ed079p697. 

வெளியிணைப்புகள்

[தொகு]