உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.நா. அமைதி காப்போர் தலைக் கவசம்.

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை நினைவூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் நாள் அனுட்டிக்கப்படுகிறது.

பின்னணி

[தொகு]

முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.

ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ஆம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது.

உருவாக்கம்

[தொகு]

மே 29 1948 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது.

அமைதிப்படையின் உயிரிழப்புகள்

[தொகு]

1948ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார். சூலை 13 1948ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார். அதேபோல ஆகத்து 28, 1948 ஆம் திகதி “காசாப் பகுதியில்’ சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், செப்டம்பர் 17 1948 ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்னடொட்” எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான 'ஸ்டர்ன் கேங்' (STERN GANG) எனும் கும்பலினால் கொலையுண்டார்.

இவ்வாறாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கலாயிற்று. எனவே அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசேடமாக நினைவுகூரப்படுகின்றனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]