ஏ. ரி. பொன்னுத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலைப்பேரரசு
ஏ. ரி. பொன்னுத்துரை
ATPonnuthurai.jpg
பிறப்புமே 15, 1928(1928-05-15)
இறப்புஅக்டோபர் 9, 2003(2003-10-09) (அகவை 75)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுநாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர்
சமயம்சைவம்
வாழ்க்கைத்
துணை
பாலாம்பிகை

கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை (மே 15, 1928 - அக்டோபர் 9, 2003) இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞரும், ஆசிரியரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பொன்னுத்துரை யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குரும்பசிட்டி மகாதேவா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி பயின்று, பின்னர் யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று 1955 இல் இலங்கை திரும்பினார். காங்கேசன்துறை நடேசுவராகக் கல்லூரியில் இவர் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் கல்கின்னை முஸ்லிம் மகா வித்தியாலயம், இரஜவலை தமிழ் மகா வித்தியாலயம், கண்டி இந்து மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[1]

நாடகக் கலையில் ஈடுபாடு[தொகு]

பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்திலேயே 1950 ஆம் ஆண்டில் உலோபியின் காதல் என்ற பள்ளி நாடகத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். அன்றைய பிரபலமான வானொலி நாடகக் கலைஞர் சானா இதனை நெறிப்படுத்தியிருந்தார்.[2] 1951 இல் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நிதிக்காக விதியின் சதி என்ற நாடகத்தை முதற் தடவையாக தயாரித்து மேடையேற்றினார். 1951 இல் இரசிகமணி கனக. செந்திநாதன் தயாரித்த தாகம் என்ற ஓரங்க நாடகத்தில் மந்திரவாதியாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். 1952 இல் முதலாளி தொழிலாளி என்ற நகைச்சுவை நாடகத்தையும், 1953 இல் குவேனி என்ற நாடகத்தையும், 1954 இல் ராக்கி மை டியர் என்ற நாடகத்தையும் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த காலத்தில் தயாரித்து மேடையேற்றினார். 1955 ஆம் ஆண்டில் இவர் தயாரித்த நிறைகுடம் என்ற நாடகம் 25 அரங்குகளில் மேடையேறியது. 1956 ஏப்ரல் 28 இல் இரு மனம் என்ற நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினார்.[1]

1959 இல் தேவன் தயாரித்த கற்புக்கனல் நாடகம் கொழும்பில் மேடையேற்றப்பட்ட போது அதில் பொன்னுத்துரை வஞ்சிப்பத்தன் என்ற பாத்திரத்தில் நடித்தார்.[1] 1961 இல் கே. பாலச்சந்திரன் தயாரித்து கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் மேடையேற்றப்பட்ட பதியூர் ராணி நாடகத்தில் நடித்துப் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.[1]

கலைப்பேரரசு பட்டம்[தொகு]

பொன்னுத்துரையின் அரங்கியல் செயல்பாடுகளைக் கௌரவிக்கும் முகமாக குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலையரசு க. சொர்ணலிங்கம் இவருக்கு கலைப்பேரரசு என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.[2] இவரது தயாரிப்புத் திறமை, நடிப்புத் திறமை குறித்து அன்றைய பத்திரிகைகள் விமரிசனம் எழுதின. இவரது பெரும்பாலான நாடகங்களை குரும்பசிட்டி சன்மார்க்க சபையே மேடையேற்றியது. யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலும் இவரது நாடகங்கள் மேடையேறின. கலையரசு சொர்ணலிங்கம், வி. வி. வைரமுத்து, கவிஞர் கந்தவனம், கனக செந்திநாதன் போன்ற பல பிரபலமான கலைஞர்களும் இவரது நாடகங்களில் நடித்தனர்.[2]

1972 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி நடத்திய நாடக எழுத்தாக்கப் போட்டியில் இவரது தாளக்காவடி முதல் பரிசு பெற்று நாடகமாக்கப்பட்டு பலமுறை ஒலிபரப்பப்பட்டது.[2] இது பின்னர் பல ஊர்களிலும் மேடையேற்றப்பட்டது. இலங்கை கலைக்கழகம் நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் 1966 இல் நாடகம் என்ற நாடகத்திற்கு 2ம் பரிசும், 1967 இல் நாமொன்று நினைக்க.. என்ற நாடகத்திற்கு முதல் பரிசும் கிடைத்தது.[1]

மேடை நாடகங்கள் சில[தொகு]

 • நிறை குடம்
 • இரு மனம்
 • விதியின் சதி
 • பதியூர் ராணி
 • பகையும் பாசமும்
 • பண்பின் சிகரம்
 • நிறைகுடம்
 • இரணியன்
 • நாடகம்
 • ஆயிரத்தில் ஒருவர்
 • யூலியஸ் சீசர்
 • சங்கிலியன்
 • ஒளி பிறந்தது
 • மன்னிப்பு
 • தாளக்காவடி

எழுதிய நூல்கள்[தொகு]

நாடக நூல்கள்[தொகு]

 • இறுதிப்பரிசு (முழுநீள நாடகம்)
 • நாடகம் (ஓரங்க நாடகம், 1969)
 • கூப்பிய கரங்கள் (ஓரங்க நாடகம்)
 • பக்தி வெள்ளம் (ஓரங்க நாடகம்)
 • மயில் (இரு நாடகங்கள்)

வரலாற்று நூல்கள்[தொகு]

 • அரங்கு கண்ட துணைவேந்தர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றியது)
 • நிஜங்களின் தரிசனம்
 • அரங்கக் கலைஞர் ஐவர்
 • கலையுலகில் கால் நூற்றாண்டு (தன் வரலாறு)

கட்டுரைத் தொகுதிகள்[தொகு]

 • பாடசாலை நாடகம்
 • தாளக் காவடி

மேற்கோள்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
ஏ. ரி. பொன்னுத்துரை எழுதிய
நூல்கள் உள்ளன.
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "கலையுலகில் கால்நூற்றாண்டு". குரும்பசிட்டி சன்மார்க்க சபை. 1974. 5 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 2.3 "துயர் பகிர்தல்: ஏ. ரி. பொன்னுத்துரை". வீரகேசரி. 2014 சூலை 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ரி._பொன்னுத்துரை&oldid=2537795" இருந்து மீள்விக்கப்பட்டது