ஏ. ஆர். ரகுமான்
அ. இர. ரகுமான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஏ.சே.திலீப்குமார் |
பிறப்பு | சனவரி 6, 1967 |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட, மேடை இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குநர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர் |
இசைக்கருவி(கள்) | மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), குரலிசை, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், தாளம், ஏனைய |
இணைந்த செயற்பாடுகள் | சூப்பர்ஹெவி |
இணையதளம் | அலுவல்முறை இணையத் தளம் |
அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: 6 சனவரி 1967), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்[1].
2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.[2] 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.[3] பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் இசையமைத்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]
இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். அம்மா பெயர் கஸ்தூரி. அக்கா பெயர் ஏ. ஆர். ரைஹானா. அக்கா மகன் ஜி. வி. பிரகாஷ்குமார் (நடிகர்). தங்கை பாத்திமா, இஷ்ரத் மற்றும் சகலை ரகுமான் (நடிகர்). இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை ஆர். கே. சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இத்திரைப்படம் இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997 இல் வெளியான மின்சாரக் கனவு திரைப்படம், 2002 இல் வெளியிடப்பட்ட 'லகான்' இந்தி மொழி திரைப்படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.
முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
இசையில் ஆரம்பகாலம்
[தொகு]ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300 இக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
திரைப்படங்கள்
[தொகு]திரைப்பட இசையமைப்புகள்
[தொகு]- குறிப்பு: "ஆண்டு", பன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைக் குறிக்கும்.
பின் வரும் பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
- 1993 யோதா (மலையாளம்)
- 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
- 2003 Tian di ying xiong (சீன மொழி)
- 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
திரைப்படமல்லாத இசையமைப்புகள்
[தொகு]- Return of the Thief of Baghdad (2003)
- தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
- செட் மீ ஃப்ரீ (1991)
- வந்தே மாதரம் (1997)
- ஜன கண மன (2000)
- பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
- இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
- ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
இவர் பெற்ற விருதுகள்
[தொகு]- இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[5].
- 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
- இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
- மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
- ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார்.
- சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூஷண்விருது பெற்றுள்ளார்.
- ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
- ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.
இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்
[தொகு]ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-02-23.
- ↑ https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html
- ↑ "தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/india/2024/Aug/16/national-awards-for-ponniyin-selvan. பார்த்த நாள்: 16 August 2024.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
- ↑ "ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் May 13, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- A. R. Rahman at AllMusic
- A. R. Rahman at பில்போர்ட் (இதழ்)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. ஆர். ரகுமான்
- A.R. Rahman Interview NAMM Oral History Program (2013)
- என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் வரலாறு - இலவச மின்னூல்
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- 1967 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- ஏ. ஆர். ரகுமான்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- சென்னை இசைக்கலைஞர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னைப் பாடகர்கள்
- கிராமி விருது வென்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
- தமிழ் முசுலிம் நபர்கள்