ஏஸ் இன் த ஹோல்
| ஏஸ் இன் த ஹோல் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | பில்லி வைல்டர் |
| தயாரிப்பு | பில்லி வைல்டர் |
| கதை | பில்லி வைல்டர் லெஸ்ஸர் சாமுவேல்ஸ் வால்டர் நியூமன் |
| இசை | இயூகோ ஃபிரீட்ஹோஃபர் |
| நடிப்பு | கிர்க் டக்ளஸ் ஜான் ஸ்டெர்லிங் ராபர்ட் ஆர்தர் போர்ட்டர் ஹால் |
| ஒளிப்பதிவு | சார்லஸ் லாங் |
| படத்தொகுப்பு | டோன் ஹாரிசன் ஆர்தர் பி. ஷ்மிட் |
| விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
| வெளியீடு | சூன் 14, 1951 |
| ஓட்டம் | 111 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1.8 மில்லியன் |
| மொத்த வருவாய் | $1.3 மில்லியன் (rentals)[1] |
தி பிக் கார்னிவல் என்றும் அழைக்கப்படும் ஏஸ் இன் தி ஹோல் (Ace in the Hole, கையில் உள்ள துருப்புச் சீட்டு) என்பது 1951 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நையாண்டி நாடகத் திரைப்படமாகும். இது பில்லி வைல்டரால் இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, இணைந்து எழுதப்பட்ட திரைப்படமாகும். நியூ மெக்சிகோவின் கிராமப்புறத்தில் உள்ள ஒரு குகையில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனைச் சுற்றி ஒரு ஊடக கூத்தை உருவாக்கி, ஒரு பெரிய செய்தித்தாளில் மீண்டும் வேலையைப் பெறுவதற்காகப் போராடும், வஞ்சக குணம் கொண்ட, செய்தியாளராக கிர்க் டக்ளஸ் நடித்துள்ளார். இப்படத்தில் ஜான் ஸ்டெர்லிங் இணை நடிகராகவும், ராபர்ட் ஆர்தர் , போர்ட்டர் ஹால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர்.[2]
இப்படம் வைல்டருக்கு பல முதல் பணிகளாக அமைந்தது. எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் அவர் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும். அவரது நீண்டகால எழுத்துக் கூட்டாளியான சார்லஸ் பிராக்கெட்டுடைப் பிரிந்த பிறகு வெளிவந்த அவரது முதல் படம் இதுவாகும். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்த அவரது முதல் படமான, இது பின்னர் அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. [3]
வைல்டரைக் கலந்தாலோசிக்காமல், பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிருவாகியான ஒய். ஃபிராங்க் ஃபிரீமேன் இதன் வெளியீட்டிற்கு சற்று முன்பு தலைப்பை தி பிக் கார்னிவல் என்று மாற்றினார்.[4] துவக்ககாலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது அந்த தலைப்பிலேயே ஒளிபரப்பானது. ஆனால் டர்னர் கிளாசிக் மூவிஸால் ஒளிபரப்பப்பட்டபோது – மற்றும் 2007 ஜூலையில் தி கிரைட்டீரியன் கலெக்சனால் குறுவட்டில் வெளியிடப்பட்டபோதும் – இதன் பெயர் மீண்டும் ஏஸ் இன் தி ஹோல் என்றே மாற்றப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், இந்தத் திரைப்படம் "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" என்று அமெரிக்க தேசிய திரைப்படக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்க காங்கிரஸ் நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5]
இந்தத் திரைப்படம் சில சமயங்களில் ஃபிலிம் நோயர் வகையிலான படம் என்று குறிப்பிடப்படுகிறது,[6] இருப்பினும் எழுத்தாளர் எடி முல்லர் அதை மறுக்கிறார்.[7]
கதை
[தொகு]சார்லஸ் "சக்" டேட்டம் என்ற பத்திரிகையாளர் அவரது நடத்தை, கோபம், குடிப்பழக்கம் போன்ற மோசமான காரணங்களுக்காக பதினொரு பெரிய செய்தித்தாள்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவன். அவன் நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகெர்கிக்கு வருகிறான். அங்கு சன்-புல்லட்டின் என்ற பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று வேலை கேட்கிறார். கெட்ட செய்திகள்தான் வரவேற்பை பெறும் என்று நம்பும் அந்த இதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான ஜேக்கப் பூட், அவரை 60 டாலர் சம்பளத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்.
ஒரு ஆண்டாக எவ்வித பரபரப்பும் இல்லாமல் டேட்டம் வேலைபார்த்து வருகிறான். இந்நிலையில் ஒருநாள் பூட், டேட்டமையும் செய்தித்தாளின் இளம் ஒளிப்படக்காரரான ஹெர்பி குக்கையும் சலங்கைப் பாம்பு வேட்டையைப் பற்றி செய்தி சேகரிக்க அனுப்புகிறார். வழியில் எரிபொருள் நிரப்புமையத்தில் காரை நிறுத்துகின்றனர். அப்போது அருகில் உள்ள செவ்விந்தியப் பழங்குடியினர் வாழ்ந்த குடவரை இடிந்து விழுந்த நிலையில் அதனுள் எரிபொருள் நிரப்புமைய உரிமையாளரான லியோ மினோசா என்பவர் சிக்கிக்கொண்டுள்ளதை அந்த இருவரும் அறிகின்றனர். டேட்டம் துணை ஷெரிஃபிடம் பேசிச் சமாளித்து, குக்குடன் குகைக்குள் நுழைகிறான். குகைக்குள் குரல் கொடுத்தபடியே சென்று சிக்கி இருக்கும் லியோவை பார்க்கிறான். அருகில் சென்று காப்பாற்ற முடியாதபடி பாறைகள் உருண்டு விழுந்திருக்கும் நிலை உள்ளது. டேட்டம் அங்கு சிக்கியுள்ள லியோவிடம் பேசி அவரை ஒளிப்படம் எடுக்கிறான். டேட்டம் குயுக்தியுடன் ஒரு பெரிய செய்திக்கான திட்டத்தைத் தீட்டத் தொடங்குகிறான்.
லியோவையும் அவர்களின் நலிவடைந்த எரிபொருள் நிலையத்தையும் பிடிக்காத அவரின் மனைவி லொரைன் அவரை விட்டு ஓடிவிட எண்ணுகிறாள். ஆனால், சுற்றுலாப் பயணிகள் மீட்புப் பகுதிக்குக் குவியத் தொடங்கியதும், பெரும் பண வரவும் அவளை டேட்டமின் தீட்டிய திட்டத்திற்கு உடன்பட வைக்கிறது. லியோவைப் பற்றிய செய்திகளை லொரைனை பேட்டி கண்டு வெளியிடுகிறான். விபத்து குறித்த ஆரம்பகட்ட செய்தியை வெளியிட்ட பிறகு, உள்ளூர் ஷெரிப்பான கஸ் கிரெட்ஸரிடம் அவர் மீண்டும் தேர்தலில் வெல்ல உதவும் வகையில் பகழ்வெளிச்சம் தருவதாகக் கூறி லியோவை பிரத்தியேகமாகச் சந்திக்கும் உரிமையை தனக்கு மட்டும் வழங்க அவரைச் சம்மதிக்க வைக்கிறான்.
மீட்புப் பணியில் ஈடுபடும் கட்டுமான ஒப்பந்ததாரரான சாம் ஸ்மொலெட் குகையில் சிக்கி உள்ளவரை 12 மணி நேரத்தில் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகிறார். ஆனால் டேட்டம் மீட்புப் பணிச் செய்தியை இன்னும் பல நாட்களுக்கு இழுத்தடித்து தொடர் செய்தியாக்க வேண்டும் என்று விரும்புகிறான். எனவே குகை வழியாகச் சென்று மீட்பதற்கு பதிலாக குகையின் மேலிருந்து துளையிட்டு லியோவை மீட்கும் பணியை மேற்கொள்ள செரீபுடன் சேர்ந்து ஒப்பந்ததாரரைச் சம்மதிக்க வைக்கின்றான். இதனால் மீட்பு நேரம் பன்னிரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு வாரமாக இழுக்கப்படுகிறது. மீட்புப் பகுதி நாள் முழுவதும் திருவிழா போலக் காட்சியளிக்கிறது. கடை வணிகம் களைகட்டுகிறது. டேட்டம் குடித்து மகிழ்கிறான். டேட்டமை வேலையைவிட்டு விலக்கிய அனைவரும் இப்போது அங்கு குவிகின்றனர். டேட்டம், ஷெரீப் மூலமாக அவர்கள் அனைவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுக்கிறான். அவன் மட்டுமே லொரைனை பேட்டி எடுத்து வெளியிடுகிறான். ஒளிப்படக்காரரான குக் தனது இலட்சியவாதத்தை இழந்து, புகழ்பெற்ற பத்திரிகைகளுக்குப் இந்தப் படங்களை விற்க வேண்டும் என்று கனவு காண்கிறான். டேட்டம் சன்-புல்லட்டின் பத்திரிகையிலிருந்து விலகுகிறான். தன்னுடன் சேர்ந்து அப்பணியிலிருந்து விலகுமாறு குக்கையும் சம்மதிக்க வைக்கிறான். இந்தச் செய்தியை வைத்துக் கொண்டே பல பெரிய செய்தி நிறுவனங்களிடம் பேரம் பேசுகிறான். பிறகு நியூயார்க்கில் தனது முன்னாள் முதலாளியான நாகலை, ஒரு நாளைக்கு 1,000 டாலர் சம்பளத்தில் நிகழ்விடத்திலிருந்து பிரத்தியேகமாகச் செய்தி சேகரிக்கத் தன்னை வேலைக்கு அமர்த்துமாறு செய்கிறான். எளிதில் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு அப்பாவி மனிதனை தன் சுயநலத்திற்காக காட்சிப் பொருளாக்குகிறான்.
குகையில் மாட்டி ஐந்து நாட்கள் கடந்த நிலையில், லியோவுக்கு நிமோனியா ஏற்படுகிறது. இதனால் அவர் பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என்று கூறப்படுகிறது. லியோ பிழைத்தாரா, டேட்டமின்னின் பேராசை முடிவுக்கு வந்ததா என்பதே கதையின் முடிவாகும்.
தயாரிப்பு
[தொகு]இந்தப் படத்தின் கதைக்களம், துயரத்தில் முடிந்த இரண்டு உண்மை நிகழ்வுகளுடன் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, 1925-ல் கென்டக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மணற்குகைக்குள் சிக்கிக்கொண்ட குகை ஆயாவாளரான டபிள்யூ. ஃபிலாய்ட் காலின்ஸ் என்பவரைப் பற்றியது. லூயிஸ்வில் கூரியர்-ஜர்னல் இதழ், வில்லியம் பர்க் மில்லர் என்ற செய்தியாளரை நிகழ்விடத்திற்கு அனுப்பி, இந்தச் செய்தியை உடனடியாக வெளியிட்டது. மில்லரின் துணிச்சலான செய்தி சேகரிப்பு, அந்தத் துயர நிகழ்வை ஒரு தேசிய நிகழ்வாக மாற்றியதுடன், அவருக்குப் புலிட்சர் பரிசையும் பெற்றுத் தந்தது. குகைச்சரிவில் ஒருவர் சிக்கியதால் ஊடகப் பிரபலம் அடைந்த ஒருவருக்கு எடுத்துக்காட்டாக காலின்ஸ் இந்தப் படத்தில் குறிப்பிடப்படுகிறார். இரண்டாவது நிகழ்வு 1949 ஏப்ரலில் நடந்தது. கலிபோர்னியாவின் சான் மரினோவைச் சேர்ந்த மூன்று வயது கேத்தி ஃபிஸ்கஸ், பாழுங்கிணற்றில் விழுந்தார். பல நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நிகழ்வைக் காண வந்தனர். இரண்டு நிகழ்வுகலும் தேசிய ஊடகத் திருவிழாவாக மாறின. வானொலிகளும், பத்திரிகைகளும் போட்டிபோட்டு செய்திகளை வெளியிட்டன. அந்த இரு நிகழ்வுகளிலும், பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பே இறந்தனர்.[8] ஒரு மனிதன் உயிருக்கு போராடுவது திருவிழாவாக மாற்றபட்ட அந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கபட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff (January 2, 1952) "The Top Box Office Hits of 1951", Variety
- ↑ Silver, Alain (2010). Film Noir: The Encyclopedia. Overlook Duckworth. p. 24. ISBN 978-0715638804.
- ↑ Sikov 1998, p. 325-38.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
- ↑ Staff (December 13, 2017). "2017 National Film Registry Is More Than a 'Field of Dreams'". அமெரிக்கக் காங்கிரசு நூலகம் National Film Registry. Retrieved December 13, 2017.
- ↑ Shafer, Jack (July 19, 2007). "Presence of Malice: Billy Wilder tours journalism's pus-filled heart in the long-lost Ace in the Hole.". Slate. http://www.slate.com/articles/news_and_politics/press_box/2007/07/presence_of_malice.html.
- ↑ Muller, Eddie. "Eddie Muller looks at Billy Wilder's Ace In The Hole". Noir Alley.
- ↑ Sikov 1998, p. 312-13.