வறுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏழ்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வறுமையைச் சாற்றும் சிறுவன்
இந்தோனேசியாவின், ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒரு பையன் தான் குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தவற்றைப் பெருமையுடன் காட்டுகிறான்.

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. எனினும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.

வறுமையின் வகைகள்[தொகு]

வறுமையை முற்றிலும் வறுமை (absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை (relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளே.

விளைவுகள்[தொகு]

வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. [1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வறுமை மூளைத் திறனைப் பாதிக்கும்: புதிய ஆய்வு முடிவு". பிபிசி. 2 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வறுமை&oldid=3578220" இலிருந்து மீள்விக்கப்பட்டது