ஏழாம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயபாகு VII
கோட்டை மன்னன்
ஆட்சி1513–1521
முன்னிருந்தவர்தர்ம பராக்கிரமபாகு
பின்வந்தவர்ஏழாம் புவனேகபாகு
மனைவிகள்
  • அனுலா கஹதூடா
  • கிரவெல்ல விசோ பண்டாரம்
வாரிசு(கள்)ஏழாம் புவனேகபாகு
மாயாதுன்னை, இறைகம் பண்டார
மரபுஸ்ரீசங்கபோதி வமிசம்
தந்தைஎட்டாம் பராக்கிரமபாகு
பிறப்பு1445
இறப்பு1521

ஏழாம் விஜயபாகு, வீரபராக்கிரமபாகுவின் மகனும், கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனும் ஆவான். பொ.பி 1445 இல் பிறந்த இவன், தன் சகோதரர்கள், ஸ்ரீராஜசிங்கன், தர்ம பராக்கிரமபாகு, இறைகம்பண்டாரன் ஆகியோருடன் வளர்ந்து வந்தான்.

ஆட்சி[தொகு]

விஜயபாகுவின் மூத்த சகோதரன் தர்ம பராக்கிரமபாகு இறந்ததும், இவனது ஒன்றுவிட்ட சகோதரன் சகலகலா வல்லபன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருந்தது. எனினும் அதே சகலகலாவல்லபனாலேயே, உடுகம்பொலையின் அரச பிரதிநிதியாக விளங்கிய இவன் பொ.பி 1513இல் முடிசூட்டப்பட்டான் என்று சிங்கள இராசவழி நூல் சொல்கின்றது.

குடும்பம்[தொகு]

அனுலா கஹதூடா, கிரவெல்ல விசோ பண்டாரம் என்று இரு தேவியர் விஜயபாகுவுக்கு உண்டு. புவனேகபாகு, மாயாதுன்னை, மகா இறைகம் பண்டார ஆகிய மூவரும் அனுலாவின் புதல்வர்கள். அனுலா, விஜயபாகுவையும், அவன் மூத்தவன் ஸ்ரீராஜசிங்கனையும் ஒரேநேரத்தில் பல்கொழுந முறையில் மணந்திருந்ததாக அறியமுடிகின்றது. இளைய தேவி விசோ பண்டாரத்துக்கு தேவராஜசிங்கன் எனும் மைந்தன் பிறந்ததுடன்,அவனையே தன் கணவனுக்குப் பின் ஆட்சிபீடத்தில் அமர்த்துவதிலும் அவள் வெற்றிகண்டாள்.[1]

விஜயபாகு கொலை[தொகு]

விஜயபாகு கொலைக்குப் பின் துண்டாடப்பட்ட கோட்டை அரசு.

தங்களை விடுத்து, தந்தை தன் இளைய தாரத்தின் மகனையே இளவரசனாகப் பட்டம் கட்டியதை அறிந்து, மூத்த புதல்வர்கள் மூவரும் பெருங்கோபமுற்றனர். தங்களைக் கொலை செய்யவும் அவன் முயல்வதாக எண்ணிய அவர்கள், ஏகநாயக்க முதலியார், கந்துறை பண்டாரம் ஆகியோருடன் விஜயபாகு அதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தவேளை, நாட்டைவிட்டுத் தப்பியோடினர். மாயாதுன்னையின் மைத்துனியை மணந்திருந்த ஜயவீரனிடம் அடைக்கலம் புகுந்த அவர்கள், அவனது படைத்துணையுடன் கோட்டைக்குப் படையெடுத்தனர். கோட்டையில் தனக்கு சாதகமற்ற நிலை நிலவுவதைக் கண்ட விஜயபாகு, தூதரை அனுப்பி தன் மக்களை சமாளிக்கமுயன்றான். அதற்கு விலையாக தமக்கெதிராக சதி தீட்டிய ஏகநாயக்கன், கந்துறை ஆகியோரின் உயிரைக் கேட்டனர் மாயாதுன்னை முதலானோர்.[2]

ஏகநாயக்கன் எப்படியோ தப்பிவிட, கந்துறை உயிர்நீக்க நேரிட்டது. பெரும் களேபரத்தின் மத்தியில் கோட்டை அரசைக் கைப்பற்றினர் மாயாதுன்னை முதலானோர். இறுதியில் வேறுவழியின்றி, அவர்கள் அந்தப் பெரும்பழியைச் செய்தனர். சல்மான் எனும் சோனகவீரனை[3] பயன்படுத்தி, பெற்ற தந்தையையே கொன்றொழித்தனர் கோட்டையின் வருங்கால அரசர்கள்.[4]

விஜயபாகு அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டதும், கோட்டை அரசானது, புவனேகபாகு, மாயாதுன்னை, மகா இறைகம்பண்டார ஆகிய மூவருக்குமென மூன்றாகப் பிரிக்கப்பட்டது. மாயாதுன்னை சீதாவக்கையையும், மகா இறைகம்பண்டார, இறைகம் பகுதியையும் பெற்றுக்கொள்ள, புவனேகபாகு கோட்டையைப் பெற்றுக்கொண்டான்.[5]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. P.E Pieris, p. 43; Rajavaliya
  2. Rajavaliya, p. 75
  3. Rajavaliya p. 76; L.E Blaze History of Ceylon: Revised and Enlarged, p. 130
  4. Rajavaliya, p.76; P.E. Pieris Ceylon and the Portuguese, 1505-1658, p. 45
  5. Queyroz Temporal and Spiritual Conquest of Ceylon, p. 204; Arnold Wright 20th Century Impressions of Ceylon, p.46

வெளி இணைப்புகள்[தொகு]

ஏழாம் விஜயபாகு
பிறப்பு: 1445 -1521
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
தர்ம பராக்கிரமபாகு
கோட்டை மன்னன்
1513–1521
பின்னர்
ஏழாம் புவனேகபாகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_விஜயபாகு&oldid=2712603" இலிருந்து மீள்விக்கப்பட்டது