ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதி ஏற்காடு. மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பெருமாள் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அக்டோபர் 6 அன்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 14 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[1] இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்தார்.[2]
நடைமுறை
[தொகு]ஏற்காடுத் தொகுதியில், நவம்பர் 9ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள், நவம்பர் 18ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் நவம்பர் 20ம் தேதி அன்று மாலை வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு டிசம்பர் 4ம் தேதி நடைபெறும். பதிவான ஓட்டுகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும்.
போட்டி
[தொகு]கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தது. இப்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக திசை மாறியுள்ளன. ஏற்காடு இடைத் தேர்தலில் எதிர்கட்சியான தேமுதிக போட்டியிடவில்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க., இந்த தொகுதியை தக்க வைக்க ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. அதிமுக, மதிமுக, நாம் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகளைத் தவிர்த்து எல்லா கட்சிகளுக்கும் கடிதம் எழுதி ஆதரவு கோரியது. மற்றொரு பிரதான கட்சியான தி.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.[3]
தி.மு.க., சார்பில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அக்கட்சித் தலைவர் கருணாநிதி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். [4]
இந்தக் கடிதம் தமிழகச் சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், தேமுதிக. நிறுவனருமான விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் ஞானதேசிகன், பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. எனினும் எந்தவொரு கட்சியும் ஏற்றுக் கொள்ளாததால் திமுகவின் தனி வேட்பாளராக வெ. மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்[5]
மாறனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் பெ. சரோஜா போட்டியிடுகிறார். இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரோஜா, மறைந்த ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி ஆவார். [6]
விதி மீறல்
[தொகு]தமிழக முதல்வர் செயலலிதா ஏற்காட்டில் பரப்புரையின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி புதிய திட்டங்களை அறிவித்ததாக திமுக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் குற்றம் சாட்டியது. [7] செயலலிதா தான் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்ற மறுப்பை [8][9]ஏற்றுக்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது [10][11]
வாக்குப்பதிவு
[தொகு]டிசம்பர் 4 2013 அன்று ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தலில், இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவில் இதுவரை இருந்த சாதனை, ஏற்காட்டில் முறியடிக்கப்பட்டது மொத்த வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டு போட்டு புது வரலாற்றைப் படைத்தனர்.[12][13]
தேர்தல் முடிவுகள்
[தொகு]ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெ.சரோஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெ.மாறனைக் காட்டிலும் 78,116 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.[14][15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
- ↑ ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: சேலம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்
- ↑ ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்
- ↑ இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி கடிதம்
- ↑ ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெ.மாறன்
- ↑ "ஏற்காடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா!". Archived from the original on 2013-10-25. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
- ↑ Yercaud bypolls: EC serves notice to Jayalalithaa on DMK complaint
- ↑ Jayalalithaa denies violating model code, tells EC they misspelt her name
- ↑ Jayalalithaa denies making poll promise
- ↑ Election Commission rejects Jayalalithaa's defence on alleged poll code violation
- ↑ EC tells Jayalithaa to be more cautious during election rallies[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Record turnout for Yercaud by-election". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
- ↑ "ஏற்காடு: அதிமுக அமோக வெற்றி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2013.
- ↑ "ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2013.
- ↑ "ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெருவெற்றி". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2013.