உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர்னெஸ்ட்டு பர்கெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர அமைப்புக் குறித்த பக்கெசுவின் மாதிரி
  பயணம் செய்வோர் வலயம்
  குடியிருப்பு வலயம்
  தொழிலாள வகுப்பினர் வலயம்
  மாறுநிலை வலயம்
  தொழிற்சாலை வலயம்

ஏர்னெஸ்ட்டு வாட்சன் பர்கெசு (Ernest Watson Burgess ) (மே 16, 1886 – டிசெம்பர் 27, 1966) என்பவர் ஒரு நகர்ப்புறச் சமூகவியலாளர். இவர் ஒன்டாரியோவில் உள்ள டில்பரியில் பிறந்தார். ஒக்லகோமாவில் உள்ள கிங்ஃபிசர் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் பின்னர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பயின்றார். 1916 ஆம் ஆண்டில் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் ஒரு நகர்ப்புறச் சமூகவியலாளராக இணைந்து கொண்டார். இவர் அமெரிக்கச் சமூகவியலாளர் கழகத்தின் 24 ஆவது தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆய்வுகள்

[தொகு]

சிக்காகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இணைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், 1921 ஆம் ஆண்டில், ஏர்னெஸ்ட்டு புர்கெசு தனது புகழ் பெற்ற ஆக்கங்களில் ஒன்றை வெளியிட்டார். இவர் இன்னொரு சமூகவியலாளரான ராபர்ட்டு பார்க் என்பவருடன் இணைந்து "சமூகவியல் அறிவியலுக்கு ஒரு அறிமுகம்" (Introduction to the Science of Sociology) என்னும் பாட நூல் ஒன்றை எழுதினார். இது இதுவரையில் சமூகவியல் தொடர்பில் எழுதப்பட்ட நூல்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நூல்களில் ஒன்று ஆகும். அக்காலத்தில் பலர், இதனைச் "சமூகவியலுக்கான மறைநூல்" எனப் போற்றினர். இந்நூல், வாழ்வை வேறுபட்ட நோக்கில் பார்த்தவர்களுடைய கவனிப்புக்களையும், கருத்துக்களையும் முன்வைத்தது. சமூகவியலின் வரலாறு, மனித இயல்பு, பிரச்சினைகளை ஆராய்தல், சமூக ஊடாட்டம், போட்டி, முரண்பாடுகள், தன்மயமாதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் விடயங்களை முன்வைத்தது. இந்நூலின் தகவல் செறிவு காரணமாக, பர்கெசு இறந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரும் இன்றும் பயன்பட்டு வருகின்றது.

உடன் பணியாளரான ராபர்ட் ஈ. பார்க் என்பவருடன் இணைந்து பர்கெசு நிகழ்த்திய மிக முக்கியமான ஆய்வுகள் "சிக்காகோ சிந்தனைக்குழு"வின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த ஆய்வுகளின் விளைவாக உருவான "மாநகரம்" (The City) என்னும் நூலில் மாநகரத்தைப் பல ஒருமைய வளையங்களால் ஆன ஒன்றாகக் கருத்துருவப்படுத்தினர். இவர்கள் மாநகரத்தை, கூர்ப்பையும், மாற்றங்களையும் அடையும் ஒன்றாக நோக்கினர்.

பர்கெசு, குடும்பம், திருமணம் என்பவை தொடர்பான ஆய்வுகளிலும் பெருமளவு காலத்தைச் செலவிட்டுள்ளார். திருமணங்கள் வெற்றிபெறும் வீதத்தை எதிர்வு கூறுவதற்கான அறிவியல் அடிப்படையிலான அளவீடொன்றை உருவாக்குவதில் இவர் ஆர்வம் காட்டினார். 1939 ஆம் ஆண்டில் லெனார்ட்டு கொட்ரெல் என்பவருடன் இணைந்து இவர் எழுதிய "திருமணங்களின் வெற்றியை அல்லது தோல்வியை எதிர்வுகூறல்" என்னும் நூலில் திருமணங்களில் இசைவு ஏற்படுவதற்குக் கணவன் மனைவி இருவரும் தமது மனப்போக்கிலும், சமூக நடத்தைகளிலும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்துகொள்ள வேண்டும் என்னும் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தனர். இவர்கள் திருமணங்களின் வெற்றியை எதிர்வு கூறுவதற்காக அட்டவணை ஒன்றையும் உருவாக்கினர். இந்த அட்டவணை, திருமணங்களின் உறுதிநிலைக்குக் காரணமானதெனக் கருதப்படும் பல மாறிகள் சேர்க்கப்பட்டிருந்தன. எனினும், திருமணத்தின் உறுதிநிலைக்குக் காரணம் என அவர்கள் எடுத்துக்கொண்ட விடயங்களில் காதல், கவர்ச்சி போன்றவற்றைச் சேர்க்காததையிட்டு, இவர்களது இந்த முயற்சியைப் பலர் கண்டித்திருந்தனர். இந்த இரண்டு விடயங்களுமே மண வாழ்வின் முக்கியமான கூறுகள் எனப்படுபவை. பர்கசு என்றும் திருமணம் செய்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னெஸ்ட்டு_பர்கெசு&oldid=2716900" இலிருந்து மீள்விக்கப்பட்டது