உள்ளடக்கத்துக்குச் செல்

ஏதெனியன் இரண்டாவது கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் ஏதெனியன் கூட்டணி (Second Athenian League) என்பது ஏஜியன் நகர அரசுகளின் கடல்சார் கூட்டமைப்பு ஆகும். இது கிமு 378 முதல் 355 வரை ஏதென்சின் தலைமையில் செயல்பட்டது. இதன் முதன்மை நோக்கம் எசுபார்த்தா எதிர்ப்பு அடுத்து பாரசீகப் பேரரசின் வளர்ச்சிக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை.

பின்னணி[தொகு]

கிரேக்க பாரசீகப் போர்களின் போது பாரசீக செல்வாக்கை எதிர்கொள்ள ஏதென்சு கிமு 478 இல் டெலியன் கூட்டணியை நிறுவியது. ஏதெனியன் தலைமையான அந்த கூட்டணி அடுத்த சில தசாப்தங்கள் உறுதியாக இருந்தது. பல வரலாற்றாசிரியர்கள் அந்த கூட்டணியை ஏதெனியன் பேரரசு என்று கருதுகின்றனர். குறிப்பாக கூட்டணியின் கருவூலம் டெலோசிலிருந்து ஏதென்சுக்கு கிமு 454 இல் மாற்றப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு. அந்த கூட்டணி கிமு 431 முதல் 404 வரை நீடித்த பெலோபொன்னேசியன் போரில் எசுபார்த்தாவின் ஆதிக்கத்தில் இருந்த பெலோபொன்னேசியன் கூட்டணிக்கு எதிராக போராடியது. கிமு 404 இல் ஏதென்சின் முற்றுகைக்குப் பிறகு, ஏதென்சும் எசுபார்த்தாவும் கிரேக்க உலகில் எசுபார்த்தாவின் மேலாதிக்கத்தை நிறுவும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது டெலியன் கூட்டணி முடிவுக்கு வந்தது. எசுபார்த்தன் கூட்டாளிகளான கொரிந்து , தீபஸ் போன்றவை, ஏதென்சுடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பதிலாக ஏதென்சை அழித்து அதன் குடிகளை அடிமைப்படுத்த விரும்பின. [1] அட்டிகா, போயோட்டியா, இஸ்த்மோஸ் பகுதிகளில் அதிகார சமநிலையை நிலைநிறுத்துவதற்கு ஏதென்சு ஒரு முக்கிய காரணியாக இருந்ததால் எசுபார்த்தன்கள் அதை நிராகரித்தனர். அதற்கு பதிலாக பின்வரும் விதிமுறைகளை விதித்தனர்: ஏதெனியன் மதில் சுவர்கள் மற்றும் கோட்டைகள் அழிக்கப்பட வேண்டும். ஏதெனியன் கடற்படையில் பன்னிரெண்டு கப்பல்கள் தவிர மற்றவை அகற்றப்பட்டவேண்டும். ஏதென்சால் நாடுகடத்தப்பட்டவர்கள் மீண்டும் நகரத்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஏதென்சு எசுபார்த்தன் தலைமையை ஒப்புக்கொண்டு எசுபார்த்தன் கூட்டணி வலையமைப்பில் சேர வேண்டும். எசுபார்த்தாவே அதன் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கவேண்டும். என்பவை ஆகும். [2]

எசுபார்த்தாவின் முன்னாள் கூட்டாளிகள் கிமு 395 இல் அதற்கு எதிராகத் திரும்பினர். அது எசுபார்த்தாவுக்கு எதிரான தீப்ஸ் தலைமையிலான கூட்டணி கொரிந்தியப் போரில் ஈடுபட்ட தாக்குதலுக்கு தூண்டுகோலானது. [3] இது பாரசீகர்களால் ஆதரிக்கப்பட்ட ஏதென்ஸ், தீப்ஸ், கொரிந்து, ஆர்கோஸ் ஆகியவற்றின் கூட்டணிக்கு எதிராக எசுபார்த்தாவை போராடும் நிலைக்கு தள்ளியது. தொடர்ச்சியான ஏதெனியன் வெற்றிகளுக்குப் பிறகு, பாரசீகம் அண்டால்சிடாசின் அமைதி உடன்பாட்டை அமல்படுத்தியது: இது ஆசியா மைனரில் உள்ள அனைத்து கிரேக்க நகரங்களையும் சைப்ரஸ் தீவுகளையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையும் மேலும் ஏதென்சுக்கு சொந்தமான லெம்னோஸ், இம்ப்ரோஸ், ஸ்கைரோஸ் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து கிரேக்க நகரங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிப்பதாக இருந்தது. [4] பெலோபொன்னேசியப் போரின் முடிவிற்குப் பிறகு முதன்முறையாக இந்தப் போரானது ஏதென்சு அதிகாரம் பெற உதவியது. இதனால் முன்பு இடிக்கப்பட்ட அதன் கோட்டைகளையும் அதன் கடற்படையையும் மீண்டும் கட்ட முடிந்தது.

தோற்றம்[தொகு]

அரிஸ்டாட்டிலின் ஆணை, இரண்டாவது ஏதெனியன் கடல் கூட்டணியை நிறுவுதல், I GI 2 43

ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய காரணமான மூன்று முக்கிய நிகழ்வுகளே இந்த இரண்டாவது கூட்டணி உருவாக்க காரணமாயிற்று. முதல் நிகழ்வு தீப்சுக்குள் நடந்த அதிகார மோதலில் எசுபார்த்தன் தலையீடு ஆகும். கிமு 382 இல், வடக்கு கிரேக்கத்தின் கால்சிடீசி தீபகற்பத்தில் உள்ள ஒலிந்தசி இராச்சியத்தின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராட தளபதி யூடாமிடாஸ் மற்றும் அவரது சகோதரர் போபிடாஸ் தலைமையிலான ஒரு படையை எசுபார்த்தா அனுப்பியது. [5] ஒலிந்தஸ் செல்லும் வழியில் போபிடாஸ் தலைமையிலான எசுபார்த்தன் படைகள் தீப்ஸ் அருகே தங்கின. தீப்சில் அப்போது லியோண்ட்டியாடீசு என்பவரின் தலைமையிலான பணக்காரப் பிரிவினருக்கும், இசுமேனியாசு என்பவரைக் கொண்ட சனநாயகப் பிரிவினருக்கும் இடையே தீப்சின் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து போட்டி இருந்தது. இசுமேனியாசு சனநாயக சார்பாளராகவும், எசுபார்த்தாவுக்கு எதிரானவரும் ஆவார். எனவே லியோண்ட்டியாடீசு போபிடாசை அணுகி, ஆட்சி அதிகாரத்தில் தன்னுடைய பிரிவை அமர துணை செய்தால், தீப்சின் முக்கிய அரணாகிய காட்மீயாவை அவர்களை கைப்பற்ற உதவுவதாக உறுதி கூறினார். [6] எசுபார்த்தாவுக்கும் தீப்சுக்கும் எவ்வித சண்டையும் இல்லாத நிலையிலும் இதற்கு போபிடாஸ் ஒப்புக் கொண்டார். [7] அதன்படியே போபிடாஸ் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு சனநாயப் பிரிவின் தலைவரான இசுமேனியாசை சிறையில் அடைக்க உதவினார். [8] இதன் பின்னர் தீப்சின் சனநாயகப் பிரிவினர் சுமார் 300 பேர் நாடுகடத்தப்பட்டு ஏதென்சில் தஞ்சம் அடைந்தனர். [9] தீப்சில் எசுபாத்தாவி்ன் இந்தக் குறுக்கீடு அன்டால்சிடாசிடாசின் அமைதி உடன்பாட்டை அப்பட்டமான மீறலாக இருந்தாலும், எசுபார்டான்கள் போபிடாசை தண்டிக்கக் கூடாது என்று லியோண்ட்டியாடீசு வாதிட்டார், ஏனெனில் அவரது நடவடிக்கைகள் எசுபார்த்தாவின் நலனுக்கானவை என்றார். [10] அதற்கு ஒப்புக்கொண்ட எசுபார்த்தன்கள் தீபியன் கோட்டையை தக்க வைத்துக்கொண்டு, சனநாயகப் பிரிவுத் தலைவரான இசுமேனியாசை கொல்ல முடிவு செய்தனர். [11]

இரண்டாவது நிகழ்வாக, தீப்சில் எசுபார்த்தன் தலையீட்டால் நேரடியாக ஏற்பட்ட போரான போயோடியன் போர் வெடித்தது. கிமு 378 இல், எசுபார்த்தாவின் தலையீட்டுக்குப் பிறகு தீப்சில் ஏற்பட்ட ஆட்சியினால் நாடுகடத்தப்பட்டவர்களில் சிலர் தீப்சுக்குத் திரும்பி வந்து லியோன்டியாடெசைக் கொன்று, எசுபார்த்தன் சார்பு கொடுங்கோலாட்சியைத் தூக்கியெறிந்தனர். [12] எசுபார்த்த ஆளுநர் துணைப்படைகளை அனுப்பினார், ஆனால் தீபன் குதிரைப்படையால் அந்தப் படைகள் அழிக்கப்பட்டன. [13] குதிரைப்படை பின்னர் தீபன் அக்ரோபோலிசைத் தாக்கி, பிரபலமான எசுபார்த்தன் எதிர்ப்பு அரசாங்கத்தை மீட்டெடுத்தது. இதனால் எசுபார்த்தாவிற்கும் தீப்சுக்கும் இடையே போர் மூண்டது.

மூன்றாவது நிகழ்வாக கிமு 378 குளிர்காலத்தில் எசுபார்த்தன் தளபதி ஸ்போத்ரியாசால் அட்டிகாவில் உள்ள ஏதெனியன் துறைமுகமான பிரேயஸ் மீது படையெடுக்கப்பட்டது. இந்தப் படையெடுப்புக்கு எசுபார்த்தாவின் மன்னர் கிளியோம்ப்ரோடசால் கட்டளையிடப்பட்டதாக டியோடோரஸ் சிகுலஸ் கூறுகிறார். [14] எசுபார்த்தாவிற்கு எதிரான போரில் ஏதென்சை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்போட்ரியாசுக்கு தீப்சால் கையூட்டு கொடுக்கபட்டதாக செனபோன் போன்ற வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். [15] ஏதென்சில் நிலைகொண்டிருந்த எசுபார்த்தன் தூதர்கள், எசுபார்த்தாவில் ஸ்போட்ரியாஸ் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவார் என்று உறுதியளித்தனர். ஆனால் எசுபார்த்தாவில் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். [16] இந்த நிகழ்வுகளால் ஏதென்சு எசுபார்த்தாவிற்கு எதிராக கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. எனவே அது சியோஸ், பைசாந்தியம், ரோட்ஸ், மிட்டிலீனி உள்ளிட்ட கடுமையான எசுபார்த்தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஏஜியன் நகர அரசுகளை தொடர்பு கொண்டது. இந்த நகரங்கள் ஏதென்சுக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. அவை அரிஸ்டாட்டிலின் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தமானது இரண்டாவது ஏதெனியன் கூட்டணியின் விதிமுறைகளை கொண்டதாக இருந்தது. [17]

சாசனம் மற்றும் கொள்கை[தொகு]

புதிய கூட்டணியின் நோக்கங்களை விவரிக்கும் கூட்டணிக்காக பொறிக்கப்பட்ட கிமு 377 காலத்திய தகவலேடு ஏதென்சில் கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டணியின் விதிமுறைகள் பின்வருமாறு: ஏதென்சில் கூட்டணி உறுப்பினர்களின் கூட்டங்கள் நடத்தப்படும். அதில் ஒவ்வொரு நகர அரசும் அதன் அளவு பொருட்படுத்தப்படாமல் ஒரு வாக்கை கொண்டிருக்கும். மேலும் கூட்டணியில் சேர்ந்துள்ள நகர அரசுகளின் விசயத்தில் ஏதென்சு எவ்விதத்திலும் குறுக்கிடாது. அவை தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். [18] டெலியன் கூட்டணியின் விதிமுறைகளைப் போலன்றி, இந்த விதிமுறைகளில் கட்டாய காரிசன்கள் அல்லது திரைப்பணம் வசூலிக்கப்படவில்லை. மேலும் ஏதெனியன் குடிமக்கள் மற்ற உறுப்பு நாடுகளில் சொத்து வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது. ஏதென்சு இந்த விதிமுறைகளை டெலியன் கூட்டணியிலிருந்து மாறுபட்டதாக வடிவமைத்தது. முந்தைய டெலியன் கூட்டணி மேலாதிக்கத்தின் இரக்கமற்ற தன்மை மற்றும் கிளர்ச்சி செய்த அரசுகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் காரணமாக அப்போது திரை செலுத்திய அரசுகளில் இது பிரபலமடையவில்லை. ஏதென்சு, எசுபார்த்தா, பாரசீகம் உள்ளிட்ட ஆதிக்க சக்திகளிடமிருந்து கிரேக்க நகர அரசுகளுக்கு விடுதலை தரும் சாசனமான அண்டால்சிடாசின் அமைதி உடன்பாட்டைத் தகர்ப்பதற்குப் பதிலாக அதைச் செயல்படுத்துவதற்கான ஒரு வழியாக இக்கூட்டணி என்று கூறப்பட்டது.

பல வரலாற்றாசிரியர்கள் ஏதெனியன் இரண்டாவது கூட்டணியானது கிரேக்கத்தின் மீது ஏதெனியன் மேலாதிக்கத்தின் மறு எழுச்சி என்று கருதுகின்றனர். பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றாசிரியர் ஜாக் கார்கில் போன்ற சிலர், இந்த கூட்டணி டெலியன் கூட்டணியிலிருந்து வேறுபட்டது என்றும் அது புதிய ஏதெனியன் பேரரசுக்கானது அல்ல என்றும் வாதிடுகின்றனர். [19]

தீப்சின் எழுச்சி[தொகு]

தீப்ஸ் கூட்டணி துவக்கத்தின் போது இதில் சேர்ந்தது. ஏனெனில் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளில் ஒன்று எசுபார்த்தாவை எதிர்பது ஆகும். இருப்பினும், தீப்சுக்கும் கூட்டணிக்கும் இடையிலான உறவுகள் விரைவில் மோசமாயின. மேலும் தீப்சை நம்பப்படக் கூடாது என்பதை ஏதென்சு உணரத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக, தீப்ஸ் கிமு 372 இல் பிளாட்டியாவை அழித்தது. அது அப்போதுதான் மீண்டும் நிறுவப்பட்டது. ஏதென்ஸ் எசுபார்த்தாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி சிந்திக்கத் துவங்கியது; ஏதென்சு எசுபார்த்தாவுடன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது , லீக்ட்ரா போரில் (கிமு 371) தீப்ஸ் எசுபார்த்தன் படைகளை தீர்க்கமாக தோற்கடித்தது. [20] இது போயோடியன் போரின் முடிவுக்கு இட்டுச் சென்றது. மேலும் கிரேக்கத்தின் மீது எசுபார்த்தன் மேலாதிக்கம் ஏற்பட்டது. தீப்ஸ் விரைவில் கூட்டணியை விட்டு வெளியேறி தன் சொந்த மேலாதிக்கத்தை நிறுவியது.

பிந்தைய வரலாறும், சிதைவும்[தொகு]

கிமு 371 இல் எசுபார்த்தாவின் தோல்விக்குப் பிறகு, தீப்ஸ் கூட்டணியிலிருந்து பிரிந்தது. மேலும் அன்டால்சிடாசின் அமைதி உடன்பாட்டு விதிமுறைகளை தயக்கமின்றி மீறி செயல்பட்டது. பின்னர், தொடர்ச்சியான கிளர்ச்சிகள் கூட்டணியை உலுக்கியது, அது நேச நாடுகளின் போர் எனப்படும் சமூகப் போரில் (கிமு 357-355) உச்சநிலையை அடைந்தது. இதில் சியோஸ், ரோட்ஸ், கோஸ், பைசாந்தியம் அரசுகள் ஏதென்சுக்கு எதிராக போருக்குச் சென்றன. இந்தப் போருடன் இரண்டாம் ஏதெனியன் கூட்டணி சிதைந்தது.

குறிப்புகள்[தொகு]

 1. Xenophon, Hellenica 2.2.19.
 2. Xenophon, Hellenica 2.2.20.
 3. Xenophon, Hellenica 3.3-5
 4. Xenophon, Hellenica 5.1.31.
 5. Xenophon, Hellenica 5.2.20-24.
 6. Xenophon, Hellenica 5.2.28.
 7. Xenophon, Hellenica 5.2.26-27.
 8. Xenophon, Hellenica 5.2.30.
 9. Xenophon, Hellenica 5.2.31.
 10. Xenophon, Hellenica 5.2.33-34.
 11. Xenophon, Hellenica 5.2.35.
 12. Xenophon, Hellenica 5.4.2-9.
 13. Xenophon, Hellenica 5.4.10.
 14. Diodorus Siculus, Bibliotheca Historia 15.29.5.
 15. Xenophon, Hellenica 5.4.20.
 16. Diodorus Siculus, Bibliotheca Historia 15.29.6.
 17. Diodorus Siculus, Bibliotheca Historia 15.28.3.
 18. Diodorus Siculus, Bibliotheca Historia 15.28.4.
 19. Martin, Thomas R. (July 1984). "Reviewed Work: The Second Athenian League: Empire or Free Alliance? by Jack Cargill". Classical Philology: 243–247. 
 20. Xenophon, Hellenica 6.4.14-15.