எஸ். ஜே. ராம் பிரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ஜே. ராம் பிரசன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழ் வானொலி, தொலைக்காட்சி, மேடை அறிவிப்பாளரும், ஒலிப்பதிவாளரும் ஆவார். இலங்கையில் வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார். கனடாவில் இருந்து வெளியாகிய உலகின் முதல் தமிழ் ஒலிப் புத்தகத்துக்கு குரல் கொடுத்தவரும் இவரே. கனடாவின் "தேசியம்" என்னும் தமிழ்ப் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் பணியாற்றிய ராம் பிரசன், கனடாவில் தொடங்கப்பட்டுள்ள கலப்பு எண்ணிமத் (Hybrid digital) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் முதல் தமிழ் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாகவும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

இளமைக்காலம்[தொகு]

ராம் பிரசன் 1979 October 30 இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவிலில் பிறந்தார். தந்தையார் ஜெயராம், தாயார் ஜெகதாம்பாள். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற ராம் பிரசன், அக்காலத்திலே பாட்டு, வயிலின், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டினார். நண்பர்களோடு இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரியில், அறிவிப்பாளர் மன்றம் ஒன்றைத் தொடங்கினார். இதனூடாக பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்து கல்லூரி மட்டத்திலிருந்து பல அறிவிப்பாளர்கள் உருவாக உதவினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானொலி ,தொலைக்காட்சி இதழியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், வயிலின் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

தொழில்[தொகு]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிலையக் கலைஞராக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தனியார் வானொலிச் சேவையான சக்தி வானொலி 1998 தொடங்கியபோது அதன் முதல் அறிவிப்பாளர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அதில் இணைந்தார். அங்கே செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணணை, நேர்காணல், நிகழ்ச்சித் தயாரிப்பு, வானொலி நாடக நடிப்பு என ஒலிபரப்பின் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். பல துறைகளில் முன்னணியில் இருப்போர் பலரை இவர் நேர்காணல் செய்துள்ளார். இவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,பத்மஸ்ரீ கமல்காசன், பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ், டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஹரிஹரன், வாணி ஜெயராம்,எழுத்தாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன் ,ஜெயமோகன் ,எஸ்.போ  விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் போன்றோர் அடங்குவர். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, திரவியம் பிளஸ் பேமிலி, சினி மினி மசாலா, கே. எஸ். பாலச்சந்திரனின் மனமே மனமே ஆகிய வானொலி நாடகங்களையும் இவர் தயாரித்து வழங்கியுள்ளார். கடல் கடந்த நாடுகளில் இயங்கிவரும் தமிழ் வானொலிச் சேவைகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடிகளுள் ஒருவராகவும் இவர் விளங்கினார்.

இலங்கையில் உள்ள ரூபவாகினிக் கூட்டுத்தாபனம், சக்தி டி. வி ஆகிய தொலைக்காட்சிச் சேவைகளிலும், கனடாவில் உள்ள 24 மணிநேரத் தொலைக்காட்சிச் சேவையான டிவிஐ இலும் பல நேர்காணல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளதுடன், தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.

தற்போது ஒலிபரப்புத் துறையோடு தொடர்புடைய பல சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமொன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜே._ராம்_பிரசன்&oldid=2157399" இருந்து மீள்விக்கப்பட்டது