எஸ். ஜி. சாந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். ஜி. சாந்தன்
பிறப்புகுணரத்தினம் சாந்தலிங்கம்
20 டிசம்பர் 1960
இறப்பு26 பெப்ரவரி 2017(2017-02-26)
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பிற்கான
காரணம்
சிறுநீரக பாதிப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்காந்த குரலாேன்
பணிபாடகர்
அறியப்படுவதுஈழ விடுதலை எழுச்சிப் பாடகர்
வாழ்க்கைத்
துணை
கலா
பிள்ளைகள்கானகன், இசையரசன், மேலும் 6 மகன் 4 மகள்

எஸ். ஜி. சாந்தன் (குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.

கலைப்பயணம்[தொகு]

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாகவும், இவரது முதல் மேடை அனுபவமாகவும் இது அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த "மருதமலைப் பாடலைப் பாடு" என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

குடும்பம்[தொகு]

இவரது இரு மகன்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார்கள்.[1] மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்.

இவர் பாடிய பாடல்களில் சில[தொகு]

 • ஆழக்கடல் எங்கும்
 • ஆனையிறவின் மேனி தடவி
 • இந்த மண் எங்களின் சாெந்த மண்
 • எதிரிகளின் பாசறையைத் தேடி
 • ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா
 • எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது (பார்வதி சிவபாதத்துடன் இணைந்து)
 • கரும்புலிகள் என நாங்கள்
 • கார்த்திகை மாதம் பூத்திடும்
 • பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
 • விண் வரும் மேகங்கள் பாடும்
 • வெள்ளி நிலா விளக்கேற்றும்


மறைவு[தொகு]

சிறுநீரகம் பாதிப்படைந்திருந்த நிலையில் 26.2.2017 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு தனது 57 வயதில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜி._சாந்தன்&oldid=2198839" இருந்து மீள்விக்கப்பட்டது