உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எம். நாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எம். நாயகம்
பிறப்புசுந்தரம் மதுரநாயகம்
(1906-09-24)24 செப்டம்பர் 1906
தஞ்சாவூர், இந்தியா
இறப்புபெப்ரவரி 4, 1978(1978-02-04) (அகவை 71)
இருப்பிடம்கந்தானை, இலங்கை
தேசியம்இலங்கையர்
பணிதயாரிப்பாளர்
அறியப்படுவதுதொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்சுந்தரம் பிள்ளை, வீரம்மா
வாழ்க்கைத்
துணை
தெய்வானை
உறவினர்கள்ராஜலட்சுமி, ஜெகதாம்பாள் (சகோதரிகள்)

எஸ். எம். நாயகம் (24 செப்டம்பர் 1906 – 4 பெப்ரவரி 1978) என அறியப்பட்ட சுந்தரம் மதுரநாயகம் இலங்கையைச் சேர்ந்த இந்திய-வம்சாவளி தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தீப்பெட்டித் தயாரிப்பாளர், சவர்க்காரத் தயாரிப்பாளர், இறால் ஏற்றுமதியாளர், இரத்தினக்கல் வணிகம் போன்ற பல துறைகளில் கால் பதித்து, இறுதியாக சிங்களத் திரைப்படத்துறையில் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.[1] இலங்கையின் முதலாவது சிங்கள பேசும் படமான கடவுனு பொறந்துவ (1947) என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர் இவரே.[2][1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

19-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் பெரும் வணிகராக இருந்த சுந்தரம் பிள்ளை, தனது மனைவி வீரம்மாவுடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்து, கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தனர்.[1] வீரம்மா தஞ்சாவூர் சென்று அங்கு மதுரநாயகம் என்ற மகனை 1906 செப்டம்பர் 24 அன்று பெற்றெடுத்து இலங்கை திரும்பினார். மதுரநாயகம் எஸ். எம். நாயகம் எனச் சுருக்கமாகப் பெயரை மாற்றி, கொழும்பு துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.[1] இலங்கையில் அப்போது தீப்பெட்டி உற்பத்தி வளர்ச்சியடைவதைக் கவனித்த மதுரநாயகம் கும்பகோணம் சென்று மரத் தீப்பெட்டித் தயாரிப்பைக் கற்றுக் கொண்டு, தனது மனைவி, சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெகதாம்பாள் ஆகியோருக்கு அவற்றைச் செய்யக் கற்றுக் கொடுத்தார். அவர்களும் தமது ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே தீப்பெட்டிகளைத் தயாரித்து வந்தனர்.[1] மதுரநாயகம் "சுவாசுதிக்கா தீப்பெட்டிகள்" என்ற பெயரில் சந்தைப்படுத்தினார்.[1]

சுதேசி இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட நாயகம், 1941-இல் தான் வாழ்ந்து வந்த கந்தானை நகரில் "சுவதேசி இன்டசுட்ரியல் வர்க்சு" என்ற பெயரில் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். அங்கு அவர் சவர்க்காரங்களைத் தயாரித்தார், அதற்காக மைசூரிலிருந்து சந்தன மரம் வாங்கினார், வேம்பு போன்ற பல்வேறு மூலிகை சவர்க்காரங்களையும் தயாரித்தார். இவை அக்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. கண்ணாடி, அலுமினியம், நெகிழி உற்பத்தி உட்படப் பல புதிய தொழில்களை அறிமுகப்படுத்தினார்.[1] தஞ்சாவூரிலும் இவர் தனது தொழிற்சாலைகளை நிறுவினார்.[1]

திரைப்படத் துறை

[தொகு]

நாயகத்தின் கவனம் திரைப்படங்கள் பக்கம் திரும்பியது. 1939-இல், மதுரையில் திருநகர் என்ற இடத்தில், "சித்திரகலா மூவிட்டோன்" என்ற கலையகத்தை நவீன வசதிகளுடன் நிறுவினார், பல தென்னிந்திய திரைப்படங்கள் அங்கு தயாரிக்கப்பட்டன.[1] கலையகத்துடன், நாயகம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவி, அதன் மூலம் 'குமரகுரு' என்ற தமிழ்த் திரைப்படத்தை 1946 இல் வெளியிட்டார்.[1] 1947 ஆம் ஆண்டில், 'தாய்நாடு' என்ற தேசபக்தி தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.[1]

எஸ். எம். நாயகத்தின் கூற்றுப்படி அவரது சிங்கள நண்பர்கள் ஆங்கில, இந்தியப் படங்களைப் பார்த்துக் களிப்புற்ற அதே வேளை, தமது சொந்த மொழியில் திரைப்படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம்.[3][1] 1940களில், இலங்கையில் சிங்கள மொழி பேசும் திரைப்படங்களுக்கான தேவையை உணர்ந்த நாயகம், முதல் சிங்களப் படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பிரபலமான கடவுனு பொறந்துவ ('உடைந்த வாக்குறுதி') என்ற சிங்கள மேடை நாடகக் கதையை வாங்கி, திரைப்படமாக மாற்றினார்.[1] இந்த முதலாவது சிங்களத் திரைப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் மதுரையில் உள்ள சித்ரகலா மூவிடோனில் நடந்தது. அவர் இலங்கையில் இருந்து ஒரு குழுவை சென்னைக்கு அழைத்து வந்தார்.[1]

நாயகம் 1947 சனவரி 21 அன்று கடவுனு பொறந்துவ என்ற முதலாவது சிங்கள-மொழித் திரைப்படத்தை வெளியிட்டார். இந்தப் படம் இலங்கை கொழும்பிலுள்ள கிங்ஸ்லி தியேட்டரில் திரையிடப்பட்டது. முதற்காட்சிக்கு அப்போது இலங்கை அமைச்சரவையில் முதன்மை அமைச்சராகவிருந்த டி. எஸ். சேனநாயக்கா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.[3] இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, நாயகத்திற்கு 'சிங்களத் திரைப்படங்களின் தந்தை' என்ற பட்டத்தையும் தேடித் தந்தது. நாயகம் தொடர்ந்து சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்தார், தென்னிந்தியாவிலிருந்து ஏ. எஸ். நாகராஜன், ஏ. பி. ராஜ் போன்ற பல தொழில்நுட்பக் கலைஞர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து தொடக்ககால சிங்களத் திரைப்படத் துறையை நிறுவினார்.[1]

நாயகத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மதலன் (1955) என்ற சிங்களத் திரைப்படம் முக்கிய வெற்றியைப் பெற்றது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மங்கம்மா சபதம் படத்தின் சிங்களமொழித் தயாரிப்பு மதலன். இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை வாகினி ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. இது பல ஆண்டுகளாக இலங்கைத் திரையரங்குகளில் ஓடியது.[1]

இலங்கையில் கலையகம்

[தொகு]

1950, மே 30 அன்று, நாயகம் 3 லட்சம் ரூபாய் செலவில் கந்தானையில் 'சிறீ முருகன் நவகலா ஸ்டுடியோ' என்ற கலையகத்தை நிறுவினார். இதன் திறப்பு விழா இலங்கையில் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. நாயகத்தின் கந்தானை வீடு, தென்னிந்தியத் திரைப்படப் பிரபலங்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், திருவிதாங்கூர் சகோதரிகள் போன்ற பலரும் ஒன்றுகூடும் இடமாக மாறியது.

பிற்காலம்

[தொகு]

எஸ். எம். நாயகம் 1978 பிப்ரவரி 4 அன்று தனது 71-ஆவது அகவையில் இறந்தார்.[1] 1983 இல் இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் காரணமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மதுரையில் இவரது கலையகம் இயங்கிய இடம் பின்னர் ஒரு குடியேற்றத் திட்டமாக மாற்றப்பட்டது. ஆனாலும் சித்ரகலா என்ற பெயர் இப்போது காணப்படுகிறது.[1]

தயாரித்த திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படம் ஆண்டு மொழி இயக்குநர்
குமரகுரு 1946 தமிழ் ஜோதி சின்ஹா
தாய் நாடு 1947 தமிழ் டி. எஸ். மணி
கடவுனு பொறந்துவ[4] 1947 சிங்களம் ஜோதி சின்ஹா
பிரேம தரங்கய[5] 1953 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
புதும லேலி[6] 1953 சிங்களம் ஏ. எஸ். நாகராஜன்
அகங்கார ஸ்திரீ[7] 1954 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
மதலன்[8][9] 1955 சிங்களம் ஏ. எஸ். நாகராஜன்
ரம்யலதா[10] 1956 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
சொஹொயுறோ[11] 1958 சிங்களம் எல். எஸ். ராமச்சந்திரன்
நலங்கன[12] 1960 சிங்களம் எல். எஸ். ராமச்சந்திரன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 "From matchstick maker to movie mogul: How S M Nayagam from Tamil Nadu Became the 'Father of Sinhala Talkies'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 December 2024. https://timesofindia.indiatimes.com/city/chennai/s-m-nayagam-the-untold-journey-from-matchstick-maker-to-sinhala-film-pioneer/articleshow/116148660.cms.
  2. ↑ "இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன இணையதளம்". Archived from the original on 27 செப்டெம்பர் 2007. Retrieved 23 June 2018.
  3. 1 2 "First Sinhala Talkie "Broken Promise" was Released 70 Years Ago on Jan 21 1947". dbsjeyaraj.com (in ஆங்கிலம்). 26 சனவரி 2017. Retrieved 20 சூன் 2017.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  4. ↑ "Kadawunu Poronduwa". films.lk. Retrieved 22 சூன் 2018.
  5. ↑ "Prema Tharangaya". films.lk. Retrieved 22 June 2018.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  6. ↑ "Puduma Leli". films.lk. Retrieved 22 சூன் 2018.
  7. ↑ "Ahankara Stree". films.lk. Retrieved 22 சூன் 2018.
  8. ↑ "Mathalan". films.lk. Retrieved 22 சூன் 2018.
  9. ↑ Mathalan
  10. ↑ "Ramyalatha". films.lk. Retrieved 22 சூன் 2018.
  11. ↑ "Sohoyuro". rateyourmusic.com. Retrieved 22 சூன் 2018.
  12. ↑ "Nalangana". rateyourmusic.com. Retrieved 22 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._நாயகம்&oldid=4469770" இலிருந்து மீள்விக்கப்பட்டது