எழுத்திலக்கணம்
தமிழில் எழுத்திலக்கணம் என்பது தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துகள் தொடர்பான இலக்கணம் ஆகும். பொதுவாக எழுத்துகள் தொடர்பான விவரங்கள், தனித்தனியான ஒவ்வொரு எழுத்தையும் பற்றிய விவரங்கள், சொல்லில் எழுத்துகள் பயன்படும் முறை, சொற்கள் இணையும்போது எழுத்துகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பன எழுத்திலக்கணம் கையாளும் விடயங்களாக அமைகின்றன.
இலக்கண நூல்களும் எழுத்திலக்கணமும்
[தொகு]தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் மூன்று பெரும்பிரிவுகளில் ஒன்றான எழுத்ததிகாரத்தில் எழுத்தின் இலக்கணம் கூறுகிறது. இதுபோலவே பின்வந்த இலக்கண நூல்களும் எழுத்திலக்கணம் கூறுவதற்குத் தனியான பெரும்பிரிவு ஒன்றை ஒதுக்கியுள்ளன. எனினும், எழுத்திலக்கணத்தை வகை பிரித்துக் கூறும் முறையில் உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் தலைப்புகள் என்பன இலக்கண நூல்களிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றன.
எழுத்திலக்கணப் பிரிவுகள்
[தொகு]தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது. நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தை எவ்வித உட்பிரிவுகளும் இன்றி ஒரே இயலில் கூறியுள்ளன. இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று செ. வை. சண்முகம் கூறுகின்றார்[1]. நன்னூலின் எழுத்திலக்கண இயல்கள் எழுத்தியல், பதவியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும். இவ்வாறு பொதுமைப்படுத்திய பிரிவுகளுள் பல்வேறு நூல்கள் கூறும் எழுத்திலக்கணம் அடங்கும் முறையைக் கீழ்க்காணும் அட்டவணை காட்டுகிறது.
பிரிவு | தொல்காப்பியம் | நன்னூல் | தொன்னூல் விளக்கம் |
---|---|---|---|
எழுத்தியல் | 1. நூன்மரபு, 2. மொழிமரபு |
1. எழுத்தியல் | 2. வகுப்பு |
பிறப்பியல் | 3. பிறப்பியல் | 1. தோற்றம் | |
பதவியல் | -- | 2. பதவியல் | -- |
புணரியல் | 4. புணரியல், 5. தொகைமரபு, 6. உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளிமயங்கியல், 9. குற்றியலுகரப் புணரியல் |
3. உயிரீற்றுப் புணரியல், 4. மெய்யீற்றுப் புணரியல், 5. உருபு புணரியல் |
3. விகாரம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சண்முகம் செ.வை., (2001-2ஆம் பதிப்பு), எழுத்திலக்கணக் கோட்பாடு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.37