எல்-அம்ரா களிமண் கால்நடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்-அம்ரா களிமண் கால்நடைகள்
செய்பொருள்மட்பாண்டம்
அளவுஉயரம்: 8.2 cm (3.2 அங்)
நீளம்: 24.2 cm (9.5 அங்)
அகலம்: 15.3 cm (6.0 அங்)
காலம்/பண்பாடுநக்டா I
இடம்எல் அம்ரா, கல்லறை a.23
தற்போதைய இடம்அறை 64, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
அடையாளம்35506
பதிவு1901,1012.6[1]

எல்-அம்ரா களிமண் கால்நடைகள் எனப்படுவது, பண்டை எகிப்தில், வம்ச ஆட்சிக்கு முந்திய முதலாவது நாக்கடா காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய களிமண் சிற்பம் ஆகும். இது கிமு 3500 காலப் பகுதியைச் சேர்ந்தது. இது எகிப்தின் எல்-அம்ராவில் உள்ள கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட பல மாதிரிகளுள் ஒன்று. இது இப்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. 24.2 சமீ நீளமும், 15.3 சமீ அகலமும் கொண்ட இச் சிற்பம் அதிக அளவு 8.2 சமீ உயரமானது. களிமண்ணால் செய்யப்பட்ட இது குறைவான வெப்பநிலையில் சுடப்பட்டு நிறப்பூச்சு பூசப்பட்டது. ஆனாலும், தற்போது நிறப்பூச்சுப் பெருமளவு இல்லாமல் போய்விட்டது.

நான்கு கால்நடைகள் ஒன்றுக்கொன்று இணையாக வரிசையாக நிற்பதுபோல் காட்டப்பட்டுள்ள இச்சிற்பத்தில் கறுப்பு வெள்ளைக் குறிகள் காணப்படுகின்றன. ஒரு பசுவின் தலையைக் காணவில்லை. மற்றப் பசுக்களின் கொம்புகளின் சில பகுதிகளும் உடைந்து விட்டன.[1] இறந்தவரின் அடுத்த வாழ்வில் உணவுக்கான வளங்கள் உள்ளதைக் குறிப்பதற்காக இது கல்லறையில் வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. விலங்கு வளர்ப்பின் இந்தத் தொடக்க காலத்தில் எகிப்தியக் கால்நடைகள் இறைச்சிக்காகவோ பாற் பொருட்களுக்காகவோ அன்றிக் குருதிக்காகவே பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மேல் துணி அடையாளங்கள் காணப்படுவதனால் இது ஒரு துணிக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது முழுவதுமாக ஒரு துணியில் சுற்றப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிற்பம் 1901 ஆம் ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இது பாதுகாக்கப்பட்டு 1993ல், அருங்காட்சியகத்தின் புதுப்பிக்கப்பட்ட தொடக்ககால எகிப்து காட்சியகத்தில் (அறை 64) வைக்கப்பட்டது.[2]

2010ல் பிரித்தானிய அருங்காட்சியகப் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பில் தொடராக வழங்கிய 100 பொருட்களில் உலக வரலாறு என்னும் நிகழ்ச்சியில் 8 ஆவது பொருளாக உள்ளடக்கப்பட்டது.[3]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 சேமிப்புத் தரவுத்தளப் பதிவு: 1901,1012.6
  2. Egyptian clay model of cattle பரணிடப்பட்டது 2009-05-23 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed June 2010
  3. "A History of the World - Object: A model of four cattle buried in a grave in Egypt". BBC and British Museum. 22 September 2008. பார்க்கப்பட்ட நாள் 16 June 2010.

வெளியிணைப்புக்கள்[தொகு]