எல்விஸ் பிரெஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எல்விஸ் பிரெஸ்லி
இயற் பெயர் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி
பிற பெயர்கள் எல்விஸ், த கிங், ராக் அன்ட் ரோலின் மன்னன்
பிறப்பிடம் டுபெலோ, மிஸ்ஸிஸிப்பி, யு.எஸ்.
இசை வடிவங்கள் ராக் அண்ட் ரோல்
ராக்கபிலிட்டி
ரிதம் அண்ட் புளூஸ்
நாட்டுப்புற ராக்
தொழில்(கள்) பாடகர், நடிகர், இசைவாணர்
இசைக்கருவிகள் வாய்ப்பாட்டு, கிட்டார், பியானோ
இசைத்துறையில் 1953–1977
வெளியீட்டு நிறுவனங்கள் சன், ஆர்சிஏ விக்டர்
இணையத்தளம் Elvis.com

எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி (Elvis Aaron Presley - ஜனவரி 8, 1935 - ஆகஸ்ட் 16, 1977) ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், "ராக் அண்ட் ரோலின் மன்னன்" எனப் போற்றப்பட்டார்.

1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். அக்காலத்தில் "ரிதம் அண்ட் புளூஸ்" என்னும் இசை வடிவமும், நாட்டுப்புற இசையும் கலந்து உருவான, "ராக் அண்ட் ரோல்" இசையின் தொடக்க வடிவமான "ராக்கபிலிட்டி" இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். ஏற்கனவே இருக்கும் பாடல்களை, "கறுப்பர்" "வெள்ளையர்" இசைகளைக் கலந்து புதுமையாகக் கொடுத்தது இவரைப் புகழ்பெற வைத்ததுடன் சர்ச்சைக்கு உரியதாகவும் ஆக்கியது. பிரெஸ்லிக்குப் பல்வகைத் திறன் கொண்ட குரல் வாய்த்திருந்தது. இதனால் இவர் கிறிஸ்தவ இசை, புளூஸ் இசை, இசைக் கவி, மக்கள் இசை போன்ற பல வடிவங்களிலும் பாடல்களைப் பாடி வெற்றி பெற்றார்.

பிரெஸ்லியின் 31 திரைப்படங்களில் பெரும்பாலானவை 1960 களில் வெளிவந்தன. இவற்றுட் பலவற்றுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை எனினும் இவை வணிக அடிப்படையில் வெற்றி பெற்ற இசைப் படங்களாக இருந்தன. 1968 இல் பிரெஸ்லி மீண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிக்காக மீண்டும் மேடை இசை நிகழ்ச்சிகளுக்குத் திரும்பினார். இதன் பின் அமெரிக்கா முழுவதும், சிறப்பாக லாஸ் வெகாசில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இவரது இத்துறையில் இருந்த காலம் முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்கள் தொகையிலும், தொலைக்காட்சித் தர நிலைகளிலும், இசைத்தட்டு விற்பனையிலும் சாதனைகள் நிகழ்த்தினார். மக்கள் இசை வரலாற்றில் விற்பனையிலும், செல்வாக்கிலும் முன்னிலையில் இருந்த கலைஞர்களில் இவர் ஒருவராவார். உடல் நலப் பிரச்சினைகளாலும், போதை மருந்துக்கு அடிமையானதாலும், வேறு காரணங்களாலும் இவர் 42 ஆவது வயதிலேயே காலமானார்.

சரித்திரம்[தொகு]

ஆரம்ப காலம்[தொகு]

எல்விஸ் பிரெஸ்லி ஜனவரி 8, 1935ல் மிஸ்ஸிஸிப்பியில் உள்ள டுபெலொவில், 18 வயதான வெர்னான் எல்விஸ் பிரெஸ்லிக்கும் 22 வயதான க்லேடிஸ் லவ் பிரெஸ்லிக்கும் மகனாக பிறந்தார். எல்விஸ் பிரெஸ்லியின் மூத்த இரட்டை சகோதரன் இறந்து பிறந்தான். ஒரே மகனாதால் பிரெஸ்லி பெற்றோர்கள் இருவரும் மகனுடன் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். இக்குடும்பம் கடவுளின் தேவாலய சபைக்கு செல்வர், இங்கு தான் பிரெஸ்லியின் ஆரம்ப இசை தாக்கம் ஏற்பட்டது. எல்விஸ் பிரெஸ்லியின் தந்தை வாழ்வில் முக்கிய நோக்கம் எதுவும் இல்லமல் ஒவ்வொரு வேலையில் இருந்தும் மாறிக் கொண்டே இருப்பார். அவர்கள் குடும்பம் அடிக்கடி அண்டை வீட்டாரிடமும், அரசாங்க உணவு உதவியையுமே பெரும்பாலும் எதிர்ப்பார்த்திருந்தனர். பிரெஸ்லியின் குடும்பம் 1936ல் ஏற்பட்ட F5 புயலில் தப்பி பிழைத்தனர், 1936ல் வெர்னான் காசோலை மோசடி செய்ததால் வீட்டை இழ்ந்தனர், வெர்னான் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் க்லேடிஸும், எல்விஸூம் தங்கள் உறவினர்களுடன் தங்கினர். செப்டம்பர் 1941ல் பிரெஸ்லி முதல் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது தன் ஆசிரியை தான் பாடிய பாடலால் ஈர்க்கப்பட்டதால், தன்னை இசை போட்டியில் பங்கேற்க்க ஊக்கப்படுத்தினார். அக்டோபர் 3, 1945ல் நடந்த மிஸ்ஸிஸிப்பி- அலபாமா கண்காட்சியில், பிரெஸ்லி முதன் முறையாக மேடையில் ஓல்ட் ஷெப் எனும் பாடலை பாடினார். அதன் பின்னர் தன் பிறந்த நாள் பரிசாக பெற்ற கிதார் எனும் இசைகருவியில் இசை அமைக்க தன் மாமாக்களிடமும் தங்கள் குடும்ப தேவாலயத்தின் போதகரிடமும் கற்றுக்கொண்டார். செப்டம்பர் 1946ல் புதிய பள்ளிக்கு சென்றவுடன் பிரெஸ்லி தனிமையானார், அதனால் அவர் தினமும் தன் கிதாரை பள்ளிக்கு எடுத்து வந்து உணவு நேரத்தில் வாசித்து கொண்டு இருப்பார், இதை பார்த்து சில மாணவர்கள் கேலி செய்வர். பின்னர், தன் பள்ளி தோழனின் மூத்த சகோதரன் வாயிலாக தனக்கு 12 வயதாக இருக்கும் போது, வானொலியில் இசை நிகழ்ச்சிகள் வழங்க ஆரம்பித்தார்.

நவம்பர் 1948, பிரெஸ்லி குடும்பம் மெம்பிஸ், டென்னஸ்ஸிக்கு குடிபெயர்ந்தனர். ஒரு வருடம் அவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்த பின்னர் 2 படுக்கை அறை வசதி கொண்ட வாடகை இல்லம் அவர்களுக்கு கிடைத்தது. ஹும்ஸ் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்த அவருக்கு இசை பாடத்தில் மிக குறைவான மதிப்பெண்களே கொடுக்கப்பட்டன. பிரெஸ்லியின் ஆசிரியர் "உனக்கு பாடுவதில் எந்த தகுதியும் இல்லை" என்பதை கூற கேட்ட பிரெஸ்லி அடுத்த நாள் தன் கிதாரை கொண்டு வந்து அப்போதைய பிரபலமான பாடல் கீப் தெம் கோல்ட் ஐஸி ஃபிங்கர்ஸ் ஆஃப் மீ எனும் பாடலை பாடி தன்னை நிருபிக்க எண்ணினார். பின்னொரு நாள் அவரின் பள்ளி தோழர், அவ்வாசிரியர் முடிவாக எல்விஸ் பிரெஸ்லி நன்கு பாடுகிறார் என்பதை ஒப்பு கொண்டதாக நினைவு கூறுகிறார். அவர் பெரும்பாலும் பொது இடத்தில் பாடுவதை தவிர்த்தார், அவ்வபோது தன் வகுப்பு மாணவர்கள் தன்னை அம்மா பிள்ளை என்று கேலி செய்வுதும் உண்டு. 1950ல் அவர் முறையாக, தினந்தோறும், ஜெஸ்ஸெ லீ டென்சன் எனும் தன்னை விட இரண்டு வயது மூத்த தன் அண்டை வீட்டாரிடம் கிதார் பழக ஆரம்பித்தார். அவர்களுடன் மற்ற மூவரும் சேர்ந்து அவ்வபோது தாங்கள் வசிக்கும் இடைங்களை சுற்றி வாசிப்பர். அந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு லோயவ்'ச் ஸ்டேட் தியேட்டரில் தன் பாடல் கச்சேரியை அரங்கேற்றினார் அதை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன.

உடல் நலமும், மறைவும்[தொகு]

1973களின் இறுதியில் அவர் டெமரால் எனும் வலி நிவாரண மருந்துக்கு அடிமையானதால் அரை கோமாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது மருத்துவர் அவர் உடல்நிலை மோசமாய் இருந்த போதும் அயராது பணி செயது கொண்டே இருந்தாதால் வந்த விளைவு என்றார். பிரெஸ்லி தன் உடல் நிலை குன்றி, குரல் தெளிவில்லமல் ஆன போதும் மேடையில் பாடலானார், வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் ஆனார். 1977களின் போது அவர் பல உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டார்; அதிக இரத்த கொதிப்பு, கல்லீரல் பாதிப்பு, விரிந்த பெருங்குடல் முதலியவை மருந்துகளை துஷ்பிரயோகம் செய்ததால் வந்தது. பிரெஸ்லி ஆகஸ்ட் 16, 1977ல் மெம்ஃபிஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயார் ஆன சமயம் அன்று மதியம், பிரெஸ்லியின் உதவியாளர்; பிரெஸ்லி, குளியல் அறையில் எந்த ஒரு அசைவும்ற்று கிடப்பதை கண்டார். பின்னர் அவரின் உயிர் பிரிந்ததாக பிற்பகல் 3.30 மணிக்கு பாப்டிஸ்ட் நினைவு மருத்துவமனையிலிருந்து அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் க்ரேஸ்லாண்டில் பிரெஸ்லியின் உடலை காண திரண்டனர். பிரெஸ்லியின் ஒன்று விட்ட சகோதரன் பிரெஸ்லியின் இறந்த உடலை படம் பிடிக்க 18,000 டாலர்களை பெற்று கொண்டு அனுமதித்தான். அப்படம் நேஷனல் அன்கொயரர் எனும் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பிடித்து அப்பத்திரிக்கையின் வர்த்தகம் உயர்ந்தது. ப்ரெஸ்லியின் இறுதிசடங்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி, க்ரேஸ்லாண்டில் நடைப்பெற்றது. அதில் 80,000 பேர் கலந்து கொண்டனர். அம்மாத இறுதியில் பிரெஸ்லியின் உடலை சிலர் திருட முயன்றனர், அதன் பின்னர் அவர் உடல் அக்டோபர் 2ல் மறு அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த பின்பு அவரை கண்டதாக அவரது ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். அதில் பலர் பிரெஸ்லி தன் மரணத்தைப் போலியாக்கியுள்ளார் எனக் கூறினர், அவரது இறப்பு சான்றிதழில் பல முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தனர், சவப்பெட்டியில் மெழுகுச்சிலை வைத்து ஏமாற்றி விட்டதாக கூறினர். 1994ல் அவரது உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் அளவுகதிகமான மருந்துகளை உட்கொண்டது ஒரு காரணமாகவே இருந்தாலும், அவர் திடீரென்று, உக்கிரமாக ஏற்பட்ட மாரடைப்பால் தான் இறந்தார் என உறுதி செய்யப்பட்டது.

எல்விஸ் பிரெஸ்லி மரணத்திற்க்கு பின்னர் அதிகமாக சம்பாதிக்கும் இரண்டாவது பிரபலம் என்பது குறிப்பிடத்த்க்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்விஸ்_பிரெஸ்லி&oldid=2187157" இருந்து மீள்விக்கப்பட்டது