எல்லிஸ் ஆர். டங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லிஸ் ஆர். டங்கன்
EDungan.jpg
பிறப்பு11 மே 1909
பார்டன், ஒஹாயோ, அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்பு1 டிசம்பர் 2001
வீலிங், மேற்கு விர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு
பணிதிரைப்பட இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
எலைன் டங்கன்

எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan, மே 11, 1909 - டிசம்பர் 1, 2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஓர் அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.[1][2][3]

பிறப்பும், படிப்பும்[தொகு]

டங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்[4].

தமிழ்த் திரைப்பட இயக்குனராக[தொகு]

அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்

கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராகச் சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.

இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்[5][6].

இவர் இயக்கிய சதிலீலாவதி திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் 1936 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.[7]

எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் இந்தியிலும் இயக்கினார். புதிய ஒளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில், இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்.[8]

பிற்கால வாழ்க்கை[தொகு]

டங்கன் 1958 இல் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்குத் தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.[9] டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.[4]

இயக்கிய படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Hindu article on Ellis Dungan
  2. "The Hindu article on Americans in Tamil cinema". 2005-01-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-08 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. Reminiscences on Directing M.S., the Musician-Movie Star on www.sangam.org
  4. 4.0 4.1 "Article on Dungan on West Virginia, Wheeling library webpage". 2011-06-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  5. "He transcended barriers with aplomb on The Hindu website". 2003-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  6. "Full of technical innovations- Article on the movie Meera". 2010-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-29 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  7. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 143
  8. Blast From the Past - Ponmudi 1950 பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம், த இந்து, 4 அக்டோபர் 2008.
  9. Sullivan, Ken (2006). The West Virginia encyclopedia. West Virginia Humanities Council. பக். 119. http://books.google.com/books?id=g0cUAQAAIAAJ. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லிஸ்_ஆர்._டங்கன்&oldid=3546041" இருந்து மீள்விக்கப்பட்டது